மலையக அரசியலில் ‘பல்டி’ ஆரம்பம்! தாவலுக்கு தயாராகும் முக்கிய புள்ளிகள்!
மலையகத்தை தளமாகக் கொண்டியங்கும் முக்கிய தொழிற்சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருவர் கட்சி தாவலுக்கு தயாராகிவிட்டதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய மாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைந்தகையோடு இதற்கான பேரம் பேசும் படலம் ஆரம்பித்துவிட்டதாகவும், தேர்தலில் களமிறங்க வாய்ப்பளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே ‘பல்டி’ இடம்பெறவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
மேற்படி தொழிற்சங்கத்தில் நெடுநாளாக அங்கத்தவர்களாக இருக்கின்றபோதிலும் தமக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை என்றும், கடந்தமுறை மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் தமக்கு நெருக்கமானவர்களிடம் இவர்கள் உள்ளக்குமுறல்களை கொட்டித்தீர்த்துள்ளனர்.
ஹட்டனில் விரைவில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி தமது நிலைப்பாட்டை இவ்விருவரும் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், தேர்தல் அறிவிக்கப்பட்டபின்னர் தாவல் இடம்பெறுமானால் அது கட்சிக்கு பாதிப்பாக அமைந்துவிடும் என்பதால் இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் ஈடுபட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
எதுஎப்படியோ அரசியலில் எதுவும் நடக்கலாம். இறுதிநேரத்தில் முடிவுகள் மாறலாம். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்!