இலங்கைக்கு விரைவில் வருகிறார் ஐ.நா. செயலர்!

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான அரசு பதவி ஏற்றதன் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேரில் அவதானித்து அறிந்துகொள்வதற்காக விரைவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் அன்ரனியோ குட்டரெஸ்.

நியூயோர்க்கில் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் சந்தித்து விடுத்த அழைப்பை அடுத்தே விரைவில் தான் இலங்கை வரவுள்ளார் என ஐ.நா. பொதுச் செயலர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்செயலர் அன்ரனியோ குட்டரெசை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தினார். நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் உள்ள ஐ.நா. பொதுச் செயலரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதி, கடந்த மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா பொதுச் செயலருக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதற்காகத் தமது அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சர்வதேச சமூகம் இலங்கையைப் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலரை மீண்டும் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறும், அதன் மூலம் அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேரில் காணும் வாய்ப்பு கிட்டும் என்றும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ஐ.நா பொதுச் செயலர் அன்ரனியோ குட்டரெஸ், கூடிய விரைவில் இலங்கைப் பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

நல்லிணக்கத்துக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஐ.நா தொடர்ந்தும் ஆதரவு அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைதியைக் கட்டியெழுப்புதல், மனித உரிமைகள், ஐ.நா அமைதி காப்பு போன்ற பணிகளில், இலங்கை நல்ல முறையில் பணியாற்றுவதற்காக ஐ.நா பொதுச்செயலர் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

அன்ரனியோ குட்டரெஸ் ஐ.நா. பொதுச் செயலராகப் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இலங்கை வரவுள்ளார். இதற்கு முன்னர் 2016 ஓகஸ்ட் 31 திகதி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *