தீவிரவாதக் குற்றச்சாட்டு: ஆஸியில் கைதான இலங்கை மாணவர் பிணையில் விடுதலை!

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவனான மொஹமட் நிசாம்தீன், (25 வயது) இன்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சில தவறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறிப்பு புத்தகம் ஒன்றில் பதிவு செய்திருந்ததாக கூறப்படும் கையெழுத்தும், இவருடைய கையெழுத்தும் பொருந்தாத காரணத்தினால் பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் மொஹமட் நிசாம்தீன்  கணனி மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவற்றில் தவறான எந்ததொரு தகவலும் இல்லையெனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சார்பாக சிட்னி நகரை குண்டு வைத்துத் தகர்த்தல் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னணி அரசியல் தலைவர்களை படுகொலை செய்ய திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அவுஸ்திரேலியா பொலிஸாரால் மொஹமட் நிசாம்தீன் கைது செய்யப்பட்டார்.

மொஹமட் நிசாம்தீன், சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலுவதற்கு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவர் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் உறவினர் என்பதுடன், இவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அண்மையில் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *