சட்டம், ஒழுங்கு அமைச்சை உடன் சுவீகரிக்குக! – சு.கவின் 15 பேர் அணி மைத்திரிக்கு கடும் அழுத்தம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டம், ஒழுங்கு அமைச்சை உடனடியாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் ‘பிரமுகர்கள் கொலை சூழ்ச்சி’ குறித்த விசாரணைகள் மூடிமறைக்கப்படும் அபாயம் இருக்கின்றது என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் கொண்ட அணி அறிவித்துள்ளது.

கூட்டரசிலிருந்து வெளியேறியுள்ள சு.கவின் 15 பேர் கொண்ட அணியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேற்கண்ட வலியுறுத்தலை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலைசெய்யப்பட்டால் பிரதமருக்கே அதன்மூலம் அரசியல் இலாபம் கிட்டும். அதுமட்டுமல்ல ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கக்கூடும் எனக் கருதப்படும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கொலைசெய்தாலும் அதன்மூலம் பிரதமருக்கே நன்மை கிட்டும்.

சட்டம், ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துவ பண்டார பதவி வகித்தாலும், சாகல ரட்நாயக்க ஊடாக பிரதமர் ரணில் விக்கிரசிங்கவே பொலிஸை வழிநடத்துகின்றார்.

பிணைமுறி மோசடி நடைபெற்ற பின்னர் அது குறித்து விசாரிக்க மூவரடங்கிய சட்டத்தரணிகள் குழுவொன்றை பிரதமர் அமைத்தார். இக்குழுவினால் வெள்ளையடிக்கப்பட்ட அறிக்கையையே பிரதமர் வெளியிட்டார்.

எனவே, பிரமுகர்கள் கொலைமுயற்சி குறித்த விசாரணையும் மூடிமறைக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதால் சட்டம், ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி உடனடியாக தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவேண்டும். வரவு – செலவுத்திட்டம் முன்வைக்கப்படவுள்ளது. எனவே, ஆட்சியை மாற்றியமைப்பதற்குரிய சூழலும் இருப்பதால் இந்த விடயத்தில் ஜனாதிபதி அவதானமாக இருக்கவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *