ஜனாதிபதியின் ஐ.நா. உரை இறுதிநேரத்தில் மாற்றியமைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஐ.நா. உரை இறுதி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டது என அமைச்சர் மனோ கணேசன் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றி முடித்த பின்னரே இன்று அதிகாலை மனோவால் மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு:-

“அமைச்சர் மனோ கணேசன் என்ன, என் உரையில் சர்ச்சை எதுவும் இல்லைத்தானே! இப்போது திருப்திதானே?”

ஐ.நா. சபையில் உரை நிகழ்த்தி இறங்கி வந்ததும் அமைச்சர்கள் குழு ஜனாதிபதியை சூழ்ந்தபோது, என்னை அழைத்த ஜனாதிபதி மைத்திரி, என் தோளில் கைகளைப் போட்டவாறு இப்படி கேட்டார்.

ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்துப் பேசி அதிலே திருத்தம் செய்ய வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரி, ஐ.நா. சபையில் தனது உரையின்போது கோரிக்கை முன்வைக்கப் போகிறார் என இலங்கையில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், அப்படி சர்ச்சைக்குரிய கருத்துகள் எதுவும் ஜனாதிபதியின் உரையில் இடம்பெறவில்லை.

வழமையாக இலங்கையிலே பேசுகின்ற கருத்துகளையே ஜனாதிபதி தனது உரையிலே குறிப்பிட்டார்.

ஆக, “போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இனிமேல் சர்வதேசம் எனது நாட்டை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்” என்று மேலதிகமாக குறிப்பிட்டார்.

“அந்த புதிய கண்ணோட்டம் என்னவென்று நீங்கள் இங்கே கூறவில்லை. நல்லது. அது என்னவென்று ஊருக்கு போய் விளக்கமாக சொல்லுங்கள் ஜனாதிபதி அவர்களே” என்று நான் கிண்டலாக சொல்ல, அனைவரும் சிரித்தார்கள்.

(உண்மையில் ஜனாதிபதி ஆற்ற வந்த உரை இதுவல்ல. ஆனால், இறுதித் தினங்களில் உரை வடிவம் மாற்றப்பட்டது. அது எப்படி, ஏன் என்ற விபரங்களை பகிரங்கமாக சொல்ல முடியாது. சொன்னாலும் பலருக்குப் புரியாது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *