நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்து அடாவடி!

முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில். அடாத்தாக விகாரை அமைத்துள்ள பெளத்த பிக்கு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகளை அறுத்து எறிந்துள்ளார் எனக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த 6ஆம் திகதி நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் 108 பானைகளில் பிரம்மாண்ட பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. இந்தப் பொங்கல் நிகழ்வின்போது ஆலயச் சூழலை அலங்கரிப்பதற்காக ஆங்காங்கே வீதியின் ஓரமாக வீதியின் மேலாகவும் நந்திக்கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.

நேற்று செவ்வாய்க்கிழமை இந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. அத்தோடு அந்த நந்திக்கொடிகளைக் கட்டியிருந்த கம்பங்கள் பிடுங்கி ஓரிடத்தில் அடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வா கத்தினரால் இன்று புதன்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நீராவியடிப் பிள்ளையார் ஆலயநிர்வாகத்தினர் தமது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகச் செயலாளர் சி.ராஜா,

“நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பெளத்த பிக்கு ஒருவர் அடாத்தாக குருகந்த ரஜமகா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து பிரம்மாண்ட புத்தர் சிலை ஒன்றையும் அமைத்துள்ளார்.

இந்தநிலையில், இந்தச் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக கடந்த மாதங்களில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பில் இரண்டு தரப்பினரும் அமைதியான முறையில் தமது ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் பெளத்த பிக்கு சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் மேல் நீதிமன்றின் வழக்கு விசாரணையின்போது குறித்த எமது பிள்ளையார் ஆலயப் பகுதியில் ஆலய நிர்வாகத்தினரோ அல்லது பெளத்த பிக்குவோ எந்தவித அபிவிருத்தி வேலைகளையும் செய்ய முடியாது எனவும், ஏற்கனவே அங்கே இருக்கின்ற அமைப்புகள் அப்படியே இருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக பெளத்த பிக்கு எமது ஆலயத்தில் கட்டப்பட்டிருந்த அந்த நந்திக் கொடிகளை மிகவும் கீழ்த்தரமான முறையில் அடாத்தாக அறுத்து வீதியோரத்தில் எறிந்திருக்கின்றார்.

24 மணிநேரமும் இந்தப் பிள்ளையார் ஆலயம் மற்றும் விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் பொலிஸார் கடமையில் இருக்கின்றார்கள்.

ஆலயம் இருக்கின்ற இடத்துக்கு எதிர்ப்பக்கமாக மிகவும் குறுகிய தூரத்தில் இராணுவக் காவலரண் ஒன்றை அமைத்து 24 மணி நேரமும் இராணுவத்தினர் கடமையில் இருக்கின்றார்கள்.

இவ்வாறு இவர்கள் எல்லோரும் கடமையில் இருக்கின்றபோது இந்த நந்திக் கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன.

அடாத்தாக எமது ஆலயப் பகுதியில் வந்து தங்கியிருந்து விகாரை அமைத்துள்ள பெளத்த பிக்கு மேலும் மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டிருக்கின்றதை பொலிஸாரும் இராணுவத்தினரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் செயற்பாடாகவே இந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ள சம்பவத்தை நாம் பார்க்கின்றோம்” – என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *