உண்ணாவிரதக் கைதிகளின் கோரிக்கை நியாயமானதே! – விரைவில் சாதகமான தீர்வு என்கிறார் பிரதி நீதி அமைச்சர்

“அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை நியாயமானதே. எனவே, அவர்களின் பிரச்சினைக்கு விரைவில் சாதகமான தீர்வு கிடைக்கும்.”

– இவ்வாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் துஷ்மந்த மித்திரபால தெரிவித்தார்.

வழக்குத் தொடுக்கப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள இவர்களின் விவரங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தம்மை குறுகிய கால புனர்வாழ்வு வழங்கியாவது விடுவிக்குமாறு கோரி கடந்த 14ஆம் திகதியிலிருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 4 பேர் அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்குமா என்று பிரதி அமைச்சர் துஷ்மந்தவிடம் வினவியபோது அவர் அளித்த பதில் வருமாறு:-

“வழக்குத் தொடுக்கப்பட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களையே சிறைகளில் தடுத்துவைக்க முடியும். எனினும், சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு எதிராக இன்னும் வழக்குத் தொடுக்கப்படவில்லை. அவ்வாறு வழக்குத் தொடுத்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறே கைதிகள் கோருகின்றனர். அவர்களின் கோரிக்கை நியாயமானது.

உண்ணாவிரதப் போராட்டத்தில்; ஈடுபட்டுள்ள கைதிகளின் விவரங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. வழக்குத் தொடுத்து விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்” – என்றார்.

அதேவேளை, கைதிகளின் தற்போதைய உடல் நிலை குறித்து சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் உபுல் தெனியவிடம் வினவியபோது, “கைதிகளின் போராட்டம் தொடர்கின்றது. அவர்கள் உண்ண மறுக்கின்றனர்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *