பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரத்தில் அரசு இனியும் பாராமுகம்காட்டக்கூடாது என்றும், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் பிரதான வகிபாகத்தை வகித்து கூட்டரசு பொறுப்புக்கூறவேண்டும் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வலியுறுத்தினார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளை வலியுறுத்தி தலவாக்கலையில் நடைபெற்ற போராட்டத்தில் அணிதிரண்டுவந்து பங்கேற்ற மக்களுக்கு நன்றி தெரிவித்தும் – கம்பனிகளினதும் – அரசினதும் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வேலுகுமார் எம்.பியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ தோட்டத்தொழிலாளர்களுக்கு இம்முறையாவது நீதியானமுறையில் சம்பள உயர்வு கிடைக்கும் என வழிமீது விழிவைத்து காத்திருந்தோம். ஆனால், கூட்டுஒப்பந்தம் தொடர்பான முதல்சுற்றுபேச்சே தோல்வியில் முடிவடைந்தது.
இதையடுத்தே கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கவும், கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பேரம்பேசும் சக்தியை பலப்படுத்தும் நோக்கிலும் மக்கள் படையை அணிதிரட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுத்திருந்தது. எமது அழைப்பையேற்று களம்கண்ட அனைவருக்கும் முதலில் சிரம்தாழ்த்தி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தொழிலாளர்களுக்கான உரிமைக்குரல் போராட்டதினத்தன்று விண்ணதிர முழங்கியது. மக்கள் எழுச்சியால் எமக்கான அரசியல் பலமும் – மக்கள் ஆணையும் அதிகரித்துள்ளது. எனவே, இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை கம்பனிகள் அட்டைகளின் அணிவகுப்பாக கருதிவிடக்கூடாது. அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆரம்பமாவதற்கு முன்னர் இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகவேண்டும். இதுவிடயத்தில் அரசும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
மத்தியில் ஆட்சிபீடத்திலுள்ள அரசானது தேர்தல்காலத்தில் மட்டும் தோட்டப்பகுதிக்கு படையெடுத்துவந்து வாக்குறுதிகளை அள்ளிவீசும். தேர்தல் முடிவடைந்தப்பின்னர் உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்படும். மக்களின் எதிர்பார்ப்போ இலவுகாத்த கிளியின்கதைபோல் சோகத்தில் முடியும். ஆனால், இனியும் அவ்வாறு செய்யமுடியாது. வாக்களிப்பு இயந்திரமாக  மட்டும் எம்மவர்களை ஆளும்வர்க்கம் பயன்படுத்திவிடமுடியாது. இதுவிடயத்தில் நாமும் உறுதியாகவே இருக்கின்றோம்.
மலையக மக்களின் வாக்குவங்கியால்தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது என்பதை மறந்து – எம்மக்களை எவராவது புறக்கணிப்பார்களானால் பதிலடி என்பது அதிர்ச்சிவைத்தியமாகவே இருக்கும் என்பதையும் கூறிவைக்கவிரும்புகின்றோம்.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் சைட்டம் பிரச்சினைக்கு தீர்வை கண்டு மாணவர்கள் மனதில் இந்த அரசு இடம்பிடித்தது. அதேபோல் வடக்கில் காணிகளை விடுவித்து அம்மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்து அவற்றை தீர்த்துவைப்பதற்கு  நடவடிக்கை எடுக்கின்றது.
அதேபோல் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கும் அரசு உரிய தீர்வை முன்வைக்கவேண்டும். கூட்டுஒப்பந்த முறைமையானது மீள்பரீசிலனைக்கு உட்படுத்தப்படவேண்டும். அவ்வொப்பந்தமானது அடிமைசானம்போலவே இருக்கின்றது. தற்போதைய நிலைமைக்கேற்ப அது மாற்றியமைக்கப்படவேண்டும்.
ஒருசமூகத்தின் தலைவிதியை ஒருசில தொழிற்சங்கங்கள் மாத்திரம் தீர்மானித்துவிடமுடியாது. இதை தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினையாக  கருதி – அரசாங்கமும் தலையிடவேண்டும். தொழிலாளர்களுக்கு பொறுப்புகூறும் வகையில் அரசின் வகிபாகம் அமையவேண்டும். மாறாக கம்பனிகளின் இடைத்தரகர்கள்போல் அரசு மௌனம்காத்து – பாராமுகம் காட்டக்கூடாது” என்றுள்ளது.