போதநாயகியின் மரணத்துக்கு நீதி கோரி வவுனியாவில் கிளர்ந்தெழுந்த பெண்கள்!

கிழக்குப் பல்கலைக்கழத்தின் திருகோணமலை வளாகத்தின் ஆங்கிலப் பாட விரிவுரையாளர் போதநாயகியின் இறுதிக் கிரியையில் கலந்துகொண்ட பெண்கள், போதநாயகியின் மரணத்துக்கு நீதி கோரி கிளர்ந்தெழுந்தனர்.

காணாமல்போன நிலையில் கடந்த 22ஆம் திகதி திருகோணமலைக் கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விரிவுரையாளர் போதநாயகியின் இறுதிக்கிரியை இன்று (24) வவுனியா கற்குளத்தில் உள்ள அவரது பெற்றோரின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது அங்கு கூடியிருந்த பெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து நீதி கோரிப் போராட்டம் நடத்தின.

இதில் போதநாயகி நம்பிக்கைத் துரோகத்தால்தான் உயிரிழந்தார் என்ற தொனிப்படவும், திருமணத்தில் ஏமாற்றப்பட்டிருக்கின்றார் என்ற கருத்துப்படவும் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கி பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இறுதிக்கிரியையில் கலந்துகொண்ட அனைவரும் போதநாயகியின் குடும்பத்தின் மனக்குமுறலை கேட்டு கண்ணீர் விட்டதுடன் கடும் கோபத்திலும் காணப்பட்டனர்.

தும்புமிட்டாயும் மாங்காயும் விற்று மகளைக் கற்பித்து ஒரு சிறந்த கல்வியாளராக உருவாக்கிய பெற்றோர் தமது மகள் தனது பெயர், புகழ், பணம் அனைத்தையும் யாருக்கோ தாரைவார்த்துவிட்டு கடன்காரியாக சடலமாக மீண்டிருப்பதை உணர்ந்த பெண்கள் ஆறாத்துயரினால் அநீதிக்காகக் குரல் கொடுத்ததை அவதானிக்க முடிந்தது.

இந்த இறுதிக்கிரியையில் போதநாயகியின் கணவரான கவிஞர் வன்னியூர் செந்தூரனோ அல்லது அவர்களது உறவினர்களோ கலந்துகொள்ளவில்லை.

இறுதிக்கிரியையில் சில அமைப்புக்களால் கட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி பதாதைகளில்கூட கணவரான செந்தூரனின் பெயரை தவிர்த்து தந்தையான நடராசாவின் பெயரையே பாவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, செந்தூரன் ஏற்கனவே திருமணமானவரா? என்ற வினாவுடன் ஒரு படம் சமூக வலைத்தளங்களில் உலாவுகின்றது.

போதநாயகியின் மரணம் தொடர்பில் பொலிஸார் நீதியான விசாரணையை நடத்தி உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என இறுதிக்கிரியையில் கலந்துகொண்ட புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டனர்.

இது இவ்வாறிருக்க போதநாயகியின் மரணத்துக்கு நீதி கோரி இன்று சமூக வலைத்தளங்களிலும் புத்திஜீவிகள் பதிவிட்டுள்ளனர்.

பதிவு:- 1

“இதயபூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! சென்று வா மகளே! உனது இழப்பு யாவருக்கும் பாடமாக அமையும்!

நடராசா போதநாயகியின் இழப்பு பல செய்திகளை சொல்லி விட்டுச் செல்கின்றது.

இவரின் மரணம் நிகழ்ந்த விதங்களை அலசி ஆராய்ந்து பார்த்த போது ஆத்திரமும் கோபமும் கவலையும் தொண்டையை அடைக்கின்றது.

போதநாயகி என்ற கனவுகளைத் தொலைத்த அபலைப் பெண்ணின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவதுடன் அவருக்கு எனது இதய அஞ்சலிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மரணம் தொடர்பாகப் பல்வேறு கதைகள் உலாவுகின்றன. இது தொடர்பாக உண்மைத் தன்மை கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் சமூகத்தின் முன் அம்பலப்படுத்தி, தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும். தற்கொலை செய்யத் தூண்டிய பாதகர் ஒருபோதும் தப்பிக்க முடியாது.”

பதிவு:- 2

“கட்டிய மனைவியின் செத்தவீட்டுக்கே கணவர் போகவில்லை/ போகமுடியவில்லை எனில் அவர் சந்தேகத்திற்கிடமின்றி ஒரு சந்தேகநபர்தான்!

விசாரணைக்கு பொலிஸ் தயாராகிவிட்டது. விரைவில் பல உண்மைகள் வெளிவந்துவிடும். அதுவரை போதநாயகியின் சம்பவம் ஒரு கொலையும் அல்ல, தற்கொலையும் அல்ல. சாவு என்றே எடுத்துக்கொள்வோம்.

ஆனால், இனிமேலாவது உரத்த குரலில் தமிழ்த் தேசியம் பேசும் போலிக் குஞ்சுகளையும் இளித்து நெளித்து இலக்கியம் பேசும் காவாலிக் குஞ்சுகளையும் சரியாக இனங்கண்டு அணுகுவோமாக.

அப்பாவிகளை வல்வளைக்க தமிழ்த் தேசியமும் தமிழ் இலக்கியமும் இன்று வேலியில் ஒட்டிய ஓந்திக் குஞ்சுகளின் கைகளில் தவழ்கின்றமைதான் வேதனையிலும் வேதனை!”

பதிவு:- 3

“போதநாயகி இறுதி நாட்களில் எழுதிய கவிதை வரிகள் சந்தேகத்திற்கிடமான நெருடலை ஏற்படுத்துகின்றன.

“நித்தம் நித்தம் அழுவதையும் தொழுவதையும்விட சாவது மேல்….” இது இறப்பதற்கு முதல்நாளுக்கு முதல்நாள் எழுதியது. எவ்வளவு பெரிய துயரத்தையும் மன விரக்தியையும் சுமந்திருப்பார் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி உணரமுடிகின்றது. அவர் அவ்வளவுதூரம் அளப்பரிய அளவுக்கு அழுதிருப்பது ஒரு கணவனால் உணரமுடியவில்லையா?

“கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை” என்கிறது நாலடியார். ஒரு பெண்ணுக்கு அவளது கணவனைவிட மிக நெருக்கமான உறவு வேறு யாருமே இல்லை என்கிறது அது. அவ்வாறாயின் மனைவியின் ஏக்கங்களையும் மன ஆதங்கங்களையும் அழுகையினையும் உணரமுடியாத கணவன் அவள் இலகுவாக தற்கொலை செய்யக்கூடியவளல்லள் எனக் கடந்துபோவதும், தன் போலித் தமிழ்த் தேசியத்தைப் பயன்படுத்தி இனவாத நோக்கோடு வேறு பக்கத்திற்கு திசைதிருப்ப முனைந்தமையும் மிகப் பலமான சந்தேக முடிச்சுக்களாகும்.

“தொழுவதையும்விட” என்பது எவ்வளவு தூரம் கெஞ்சியிருக்கின்றார் என்பதை உணர்த்துகின்றது.

இறப்பதற்கு இறுதி நாளில் பதிவுசெய்த திருக்குறள்தான் மிகப்பெரிய சந்தேகத்தை ஊட்டுகின்றது.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு”

அதாவது சற்று முன்னர் எம் கண்முன்னே நின்ற ஒருவன் இப்பொழுது இல்லையே எனும் எண்ணத்துடன் மக்களை வெற்றிகொண்ட செருக்கினைக் கொண்டதுதான் இந்த உலகம் என்கிறது இந்தக் குறள்.

நிலையாமைக் கருத்து பற்றி கூறுகின்ற அற்புதமான குறளாகும். ஆழ்ந்த புறக்கணிப்பு, தோல்வி, ஆறுதலின்மை, துரோகத்தால் வீழ்த்தப்பட்டமை, ஏமாற்றம், இயலாமை, தவிப்பு, அவலம், துயரம், ஆதரவின்மை என அத்தனை உணர்வுகளின் கலவைகளையும் கொண்ட மனித மனத்தால்தான் இந்தக் குறளை மீட்டிப் பார்க்க முடியும்.

ஒட்டுமொத்தமாக சொல்வதாயின் இவ்வளவு கொடுமைகளையும் மனத்துள் புதைத்துவைத்திருந்த மனைவி இறந்தபின், அவள் தற்கொலை செய்யக்கூடியவளல்லள் என ஒரு கணவனால் எப்படித்தான் மனம்வந்து பொய் சொல்ல முடிகின்றது? ஊரைப் பேய்க்காட்டியது போய் உலகையே பேய்க்காட்டும் முயற்சியல்லவா இது!”

பதிவு:- 4

“ஒரு பெண் மன விரக்தியில் பொது வெளியில் தனது வாழ்வை எண்ணி அழுது புலம்புகிறாள் என்றால், கணவன் துடிதுடித்து சாவான். கணவன் துடிக்கவில்லை என்றால், குடும்ப வாழ்வில் தவறு நடக்கின்றது என்று அர்த்தம்.

குடும்ப வாழ்வில் கண்ணியமான உறவு ஒன்றே அர்த்தமான நல்வாழ்வைக் குறிக்கும்.

நல்வாழ்வு வாழத் தெரியாதவனுக்கு குடும்பமும், திருமணமும் ஒரு கேடு!

துப்பாக்கி வேணும் எனக்கு!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *