தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி இரண்டரை வயதுப் பாலகன் உயிரிழப்பு! – யாழ். மல்லாகத்தில் சோகம்

தந்தை, உழவு இயந்திரத்தை பின்நோக்கி (றிவேர்ஸ்) நகர்த்த முயன்றபோது அதில் சிக்குண்டு அவரது இரண்டரை வயது மகன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சோகச் சம்பவம் யாழ். மல்லாகம், கல்லாரைப் பகுதியில் நடைபெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது விஜயகாந்த் சஸ்மிதன் என்ற பாலகனே உயிரிழந்துள்ளார்.

வீட்டு வளவில் உழவு இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வெளியில் செல்வதற்காக அதனை தந்தை இயக்கியுள்ளார். உழவு இயந்திரத்தில் ஏறுவதற்கு முன்னர் வீட்டு முற்றத்தில் யாரும் இருக்கவில்லை. இயந்திரத்தை பின்பக்கமாக இயக்கியுள்ளார். உழவு இயந்திரத்தின் சத்தத்தைக் கேட்டு வீட்டினுள்ளே விளையாடிக் கொண்டிருந்த சஸ்மிதன் வெளியே வந்துள்ளார். உழவு இயந்திரம் பின்நோக்கி நகர்த்தப்படும்போது அதன் சில்லினுள் அகப்பட்டுள்ளார்.

தந்தை உடனடியாக உழவு இயந்திரத்தை நிறுத்தி சிறுவனை மீட்டு தெல்லிப்பழை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மல்லாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *