கைத்துப்பாக்கியுடன் வந்தவர் திலீபன் நிகழ்வில் இரத்ததானம்! – யாழ். இந்துவில் பரபரப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் இரத்ததானம் வழங்கினர். இந்நிகழ்வு கல்லூரியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றபோது அங்கு கைத்துப்பாக்கியுடன் வந்த இருவரில் ஒருவர் இரத்ததானம் செய்தார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திலீபனின் நினைவு தினத்தில் வருடா வருடம் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் இரத்ததானம் வழங்கி வருகின்றனர். அதற்கமைய இந்த வருட நினைவு தினத்தை முன்னிட்டு இன்று இரத்ததானம் வழங்கினர். இதன்போது அங்கு ஒருவர் தான் இரத்தம் கொடுக்கப் போகிறார் எனக் கூறியுள்ளார். அதற்கான பதிவுகளை மேற்கொண்ட பின்னர் இரத்தம் கொடுப்பதற்கு ஆயத்தமானபோதுதான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த
துப்பாக்கியை வேறு ஒருவரிடம் கொடுத்துள்ளார். இதனாலேயே அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர் ஆயுதத்துடன் வந்த நபர் இரத்ததானத்தை வழங்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். ஆனால், இரத்ததானம் வழங்கிய அந்த நபர் இராணுவத்தைச் சேர்ந்தவரா அல்லது இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வுத்துறைச் சேர்ந்தவரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சிங்களவரான அந்த நபரினால் தமிழ் சரளமாகப் பேச முடிந்தது என்றும் கூறப்பட்டது. இரத்ததானம் செய்வோரின் விவரப் பதிவு விடயத்தில் இரகசியம் பேணப்படுகின்றமையால் அவரின் பெயர் விவரங்களைப் பெற முடியவில்லை.

எது, எவ்வாறு இருப்பினும் திலீபனின் நிகழ்வை முன்னிட்டு மாணவர்கள் இரத்ததானம் வழங்கியது போன்று அவரும் இரத்ததானம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *