புலிக் கதை பேசிய விஜயகலாவுக்கு எதிராக சட்டமா அதிபர் நடவடிக்கை!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகவேண்டும் என யாழ்ப்பாணத்தில் வைத்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரன் எம்.பிக்கு எதிராக சட்டமா அதிபரே நடவடிக்கை எடுப்பார் என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒருமணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. தினப் பணிகள் முடிடைந்த பின்னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய விமல் வீரவன்ஸ எம்.பி.,

“அரசியலமைப்பை மீறமாட்டோம், ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயற்படமாட்டோம் என எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். இதை மீறும் வகையில் கருத்து வெளியிட்ட விஜயகலாவுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சட்டமா அதிபரிடம் கூறப்பட்டுள்ளது என நீங்கள் சொன்னாலும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த விடயத்தில் இழுத்தடிப்பே இடம்பெற்று வருகின்றது” என்று சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர்,

“விஜயகலா எம்.பிக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. எனவே, சட்டமா அதிபரின் பரிந்துரைக்கமையவும், நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரமும் நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *