வடக்கு, கிழக்கு, மலையகத்துக்கு இந்திய அரசின் உதவி தொடரும்! – செங்கோட்டையன் உறுதி

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு இந்திய அரசு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்று தமிழகக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

இரு நாட்டுப் பிரதமர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இந்த உதவித் திட்டங்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

தமிழக அரசினால் யாழ். பொது நூலகத்துக்கு 50ஆயிரம் நூல்கள் கையளிக்கும் நிகழ்வு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையின் வடக்கு – கிழக்கில் உள்ள தமிழர்கள் இந்தியத் தமிழ் நாட்டின் மேல் வைத்துள்ள அன்புக்கு நான் நன்றி கூறவேண்டும். ஒரு நாடு வளம்பெற வேண்டுமானால் கல்வியில் அந்த நாடு முதலில் வளம் பெறவேண்டும். கல்வியில் வளச்சி பெற்ற நாடு அனைத்து துறைகளிலும் பிரசித்தி பெற்றதாகத் திகழும்.
இந்தப் புத்தகங்களைக் கையளிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டபோது தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உறுதுணையாக இருந்தனர். அன்று ராமர் இந்தியாவில் அருந்து இலங்கைக்கு வரும்போது அணில்கள் எவ்வாறு பாலம் அமைத்து உதவி புரிந்ததோ அதேபோன்று நானும் இன்று அணிலாக இருந்து வடக்கு மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன்.

இன்று இலங்கையில் வாழும் மக்களுக்கு இந்திய அரசு பல உதவிகளைச் செய்து வருகின்றது. தமிழர்கள் எங்கு இருந்தாலும் தமிழக அரசு உதவிகளைச் செய்யும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுப்பதற்கான ஆசிரியர்களை அனுப்பிவைக்கும் நடவடிக்கையும் இந்திய அரசு மேற்கொள்ளவுள்ளது.

வடக்கில் உள்ளவர்களை முன்னேற்ற வேண்டுமாக இருந்தால் அவர்களை ஊக்கப்படுத்தினால் மட்டும் போதும். அவர்களாகவே முன்னுக்கு வந்துவிடுவார்கள். அந்தளவுக்கு இங்கு உள்ளவர்கள் திறமையானவர்கள் என்பதை நான் அறிந்து கொண்டுள்ளேன்.

இலங்கையின் மத்திய அரசும், இந்தியாவின் நரேந்திர மோடியின் மத்திய அரசும் இணைந்து பல வேலைத்திட்டங்களைச் செய்ய உள்ளன. குறிப்பாக இலங்கையின் பிரதமரும், இந்தியாவின் பிரமதரும் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளார்கள். இந்த உதவித் திட்டங்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *