பருத்தித்துறையில் பெரும் பரபரப்பு! பொலிஸாருடன் மீனவர்கள் முறுகல்!!

யாழ். வடமராட்சி, பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறிச் சட்டவிரோதத் தொழிலில் ஈடுபட்டிருந்த எட்டு மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிப் பிடித்துத் தடுத்து வைத்திருந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிப்பதற்குச் சில கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்தனர். இது தொடர்பில் நடைபெற்ற பேச்சுக்களும் தோல்வியடைந்த நிலையில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுச் சில மணிநேரம் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

வடமராட்சி கிழக்கில் அத்துமீறிச் சட்டவிரோதத் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அவதானித்த பருத்தித்துறை மீனவர்கள் தமது கடற்பரப்புக்குள் அத்துமீறைய மீனவர்களை மடக்கிப் பிடித்துக் கரைக்குக் கொண்டு வந்து தமது பகுதியில் தடுத்து வைத்தனர்.

இதனால் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பெரும் எண்ணிக்கையான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு பிரதேச செயலர், பொலிஸார் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் அந்தப் பகுதி மீனவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும் தமது பகுதிகளில் இவ்வாறான தொழில் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதால் தாம் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய அந்தப் பகுதி மீனவர்கள், தமக்கான தீர்வு இனிமேலாவது கிடைக்கவேண்டுமென்று வலியுறுத்தினர். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குக் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் வருகை தர வேண்டுமென்றும் கோரினர்.

இந்தக் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்காததால் மீனவர்களுடனான பேச்சு தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து தமக்கான பதில் கிடைக்கும் வரை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கப் போவதில்லை என்றும், அதுவரை தாம் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாது கொட்டகைகளை அமைத்து தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் வடமராட்சி மீனவர்கள் அறிவித்தனர்.

இதற்கமைய கொட்டகைகளை அமைத்துப் போராட்டம் நடத்துவதற்கு மீனவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோது அவ்விடத்துக்கு வருகை தந்த காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார், பிடிக்கப்பட்ட மீனவர்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரினர்.

அதற்கு வடமராட்சி மீனவர்கள் மறுத்துவிட்டனர். “நீங்கள் எங்களிடம் அவர்களை ஒப்படைக்காவிட்டால் நாங்கள் இங்கிருந்து விலகிக் கொள்வதுடன் விசேட அதிரடிப்படையினரை இங்கு களமிறக்க நேரிடும்” என்று பொலிஸ் அத்தியட்சகர் எச்சரிக்கை விடுத்தார். இதனால் அங்கும் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அங்கு நின்றிருந்த பொலிஸார் திடீரென அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களைப் பலவந்தமாக நுழைந்து மீட்டுச் சென்றனர். இதன்போது பொலிஸாருக்கும் அந்தப் பகுதி மீனவர்களுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியது.

ஆனாலும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு மீனவர்களில் ஆறு பேரை மாத்திரமே பொலிஸார் மீட்டுச் சென்றனர். இதன் பின்னர் அருட்தந்தை ஒருவரின் தலையீட்டால் ஏனைய இரு மீனவர்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மீனவர்களை மீட்டுக் கொண்டு அவ்விடத்திலிருந்து பொலிஸார் அகன்றதை அடுத்து அங்கு நிலவிய கொந்தளிப்பு நிலைமை சற்றுத் தணிந்தது.

ஆயினும், தமது கடல் வளத்தை அழிக்கும் அல்லது சூறையாடும் மீனவர்களுக்குப் பொலிஸார் ஆதரவை வழங்கி அவர்களைப் பாதுகாக்க முனைகின்றனர் என வடமராட்சி மீனவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

தமது கோரிக்கைகளை ஏற்காது பொலிஸார் தம்மை அச்சுறுத்தினார்கள் எனவும், தம்மிடமிருந்து பலவந்தமாகவே மீனவர்களைப் பொலிஸார் மீட்டுச் சென்றனர் எனவும் கூறிய அப்பகுதி மீனவர்கள், தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *