கொரோனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை பயன்படுத்த திட்டம்!

1921இல் கண்டுபிடிக்கப்பட்ட காசநோய்த் தடுப்பு மருந்து அல்லது பி.சி.ஜி என்றழைக்கப்படும் தடுப்பு மருந்தை கொண்டு கொரோனா வைரஸ் நோய்த்தொற்றிலிருந்து மனித உயிர்களை காப்பாற்ற முடியுமா என்ற ஆய்வை பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.

காசநோயைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தத் தடுப்பு மருந்து, மற்ற நோய்த்தொற்று பாதிப்புகளிலிருந்தும் மனிதர்களை பாதுகாக்கக் கூடியது என்பதற்கான சான்றுகள் உள்ளன,

இந்த தடுப்பு மருந்தை கொண்டு பிரிட்டனின் எக்ஸிடெர் பல்கலைக்கழகம் நடத்தவுள்ள பரிசோதனையில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

மேலும், பிரிட்டனில் தங்களது குழந்தை பருவத்தில் இந்த பி.சி.ஜி தடுப்பு மருந்தை லட்சக்கணக்கானவர்கள் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு மீண்டும் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட வேண்டும் என்று கருதப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட நோய்த்தொற்றுக்கு எதிராக நீடித்த பாதுகாப்பை அளிக்கும் வகையில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பயிற்றுவிப்பதை நோக்கமாக கொண்டு தடுப்பு மருந்துகள் உருவாக்கப்படுகின்றன.

ஆனால், இந்த செயல்முறையானது நோயெதிர்ப்பு மண்டலத்தில் பரவலான மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது.

அதாவது, இதுபோன்ற தடுப்பு மருந்துகள் மற்ற நோய்த்தொற்றுகளுக்கு எதிராகவும் செயல்படுவதாக கருதப்படுவதால், உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிராக போராடுவதில் பி.சி.ஜி தடுப்பு மருந்து பலனளிக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

கினியா-பிசாவுவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் பி.சி.ஜி தடுப்பு மருந்து 38 சதவீதம் இறப்புகளை குறைத்துள்ளதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நிமோனியா மற்றும் செப்சிஸ் நோய் பாதிப்புகளை குறைப்பதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பி.சி.ஜி தடுப்பு மருந்தானது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்படும் நோய்த்தொற்றுகளை 73 சதவீதம் குறைத்துள்ளதாக தெரியவந்தது. மேலும், நெதர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ஒன்றில், பி.சி.ஜி தடுப்பு மருந்து உடலில் மஞ்சள் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் அளவைக் குறைத்தது தெரியவந்தது.

“இது உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்” என்று எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பேராசிரியர் ஜான் காம்ப்பெல் பிபிசியிடம் தெரிவித்தார்.

“இது குறிப்பாக கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றாலும், கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால் மேலும் பிற சிகிச்சை முறைகளும் உருவாக்கப்படலாம்.”

பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சோதனையானது, சர்வதேச அளவில் செய்யப்பட்டு வரும் ஆய்வின் ஒரு பகுதியாகும். இந்த ஆய்வில், பிரிட்டனை தவிர்த்து ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் ஈடுபட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சுமார் 10,000 பேர் இந்த ஆய்வில் பங்கேற்கின்றனர்.

குறிப்பாக, கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அச்சுறுத்தலின் கீழ் பணியாற்றி வரும் சுகாதார பணியாளர்களை முதன்மையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம், தடுப்பு மருந்து பலனளிக்கிறதா என்பதை மேலும் விரைவாக அறிய முடியுமென்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

பிரிட்டனின் எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவரான சாம் ஹில்டனும் இந்த சோதனையில் பங்கேற்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *