தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாளை தமிழர் தாயகத்தில் ஆரம்பம்!

“தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வு நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. தியாகி திலீபனின் நினைவு நாள்கள் நடைபெறும் இக்காலங்களில் களியாட்டங்களைத் தவிர்த்து திலீபனின் நினைவுகளை சுமந்து உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளையும் வேண்டி நிற்கின்றோம்.”

– இவ்வாறு ஜனநாயகப் போராளிகள் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தமிழர் தாயக அரசியல் பரப்பில் ஆட்சி அதிகாரத்தில் யார் ஆதிக்கம் செலுத்தும் சக்தி என்பதற்கான முனைப்புக்கள் தீவிரம் பெற்றுவரும் இந்தச் சூழலில் ஓடுக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் அரசியல் பொருளாதார சமூக விடுதலையை நேசித்தவர் தியாக தீபம் திலீபன்.

அதற்கு வலுச்சேர்த்து எம் இனத்தின் நியாயப்பாடான அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் கூட அருந்தாது உணவு ஒறுப்பில், நல்லூர் வீதியில் மூச்சடங்கிப் போனவர் தியாகி திலீபன்.

இன்றுவரை திலீபனின் ஒரு கோரிக்கைகூட நிறைவேற்றப்படாத நிலையில் துன்பத்தின் நீட்சியில் தமிழினம் இடர்படும் இச்சூழலில் தியாகி திலீபனின் நினைவு நாட்கள் நடைபெறும் இக்காலங்களில் களியாட்டங்களைத் தவிர்த்து திலீபனின் நினைவுகளை சுமந்து உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கவேண்டும் என தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளையும் வேண்டி நிற்கின்றோம்.

தியாகி திலீபன் எங்களோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரின் கனவு இன்னும் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கின்றது” – என்றுள்ளது.

இதேவேளை,தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் நல்லூரில் உள்ள நினைவுத் தூபியிலும், திலீபன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நல்லூர் முன் வீதியிலும் நினைவு கூரப்படவுள்ளது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியால், நாளை முற்பகல் 10.10 மணிக்கு தியாக தீபம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய இடத்தில் அகவணக்கம் செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து, நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில் நினைவு நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *