கப்பல்துறை கிராம மக்களின் காணிகள் பலவும் கபளீகரம்! – அப்துல்லா மஹ்ரூப் எம்.பி. விசனம்

கப்பல்துறை கிராம மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை – கப்பல்துறை கிராமத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவால் புதிய வீடுகள் பயனாளிகளிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறியுள்ளவை வருமாறு:-

“கப்பல்துறைக் கிராமத்தின் மூன்றில் இரண்டு பங்குகளைத் துறைமுகங்கள் அதிகார சபை கபளீகரம் செய்துள்ளது. எனவே, மக்களுடைய தனியார் காணிகளைக் கபளீகரம் செய்வதையும், எல்லையிடுவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க திருகோணமலைக்கு வந்தபோது மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என நான் கோரியிருந்தேன். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சரிடத்தில் நாம் வேண்டிக் கொள்வது என்னவென்றால் கப்பல்துறை, முத்துநகர் ஆகிய கிராமங்களின் மக்கள் வீதியில் இறங்கிப் போராடி அரசை அசுத்தப்படுத்தவில்லை. மாறாக தங்களது உரிமைகளுடன் வாழ்வதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் எனக் கோருகின்றார்கள்.

இந்த நல்லாட்சி அரசை ஐக்கிய தேசிய முன்னணி என்ற ரீதியில் மூன்று இன மக்களும் இணைந்தே கொண்டு வந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் சஜித் பிரேமதாஸ உரையாற்றுகையில்,

“இங்கு நாம் வந்திருப்பது மேலும் மக்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பதற்கே. டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்பு இன்னும் 2 ஆயிரத்து 500 வீடுகளைக் கட்டி முடிப்போம்.

2020 ஜனவரி முதலாம் திகதிக்கு முன் இரண்டாம் கட்டமாக 5,000 வீடுகளுக்கான அடிக்கல்லை நடுவோம்.

மூன்றாம் கட்டமாக 10 ஆயிரம் வீடுகளுக்கான அடிக்கல் வைப்போம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *