இராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் முறையான விசாரணை வேண்டும்! விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை!! – கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் திட்டவட்டம்

“இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தை விடுவித்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைக்கவுள்ள யோசனையை நிராகரிக்கின்றோம். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய அங்கத்துவ நாடுகளுடனும் இராஜதந்திர தரப்புக்களுடனும் பேச்சு நடத்தவுள்ளோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

“போர்க்குற்றம் இழைத்த தரப்பினர் மீது விசாரணை செய்யப்பட்டு அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற ஐ.நா.தீர்மானத்தில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்களையும் கூட்டமைப்பு மேற்கொள்ளாது. அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் காத்திரமான பங்களிப்பு செலுத்துவோம்” எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் தான் உரை நிகழ்த்தவுள்ளதாகவும், அதன்போது இராணுவத்திற்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுவிப்பது தொடர்பாக புதிய யோசனை ஒன்றை முன்வைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜனாதிபதியின் இந்தக் கருத்துத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினர்.

மாவை சேனாதிராஜா

ஜனாதிபதியின் இக்கூற்றுத் தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி இராணுவத்தினரைப் போர்க் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதனை நாம் ஒதுபோதும் விரும்பியதில்லை. அத்துடன் இந்த நடவடிக்கையை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை. இந்நிலையில் ஜனாதிபதி முன்வைக்கப் போவதாக கூறியிருக்கும் யோசனைத் திட்டத்தை நாம் படித்த பின்பு அது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய அங்கத்துவ நாடுகளிடம் எமது எதிர்ப்பைத் தெரிவிப்போம்.

அதுமட்டுமல்லாது அங்கத்துவ நாடுகளுடனும் உறுப்பு நாடுகளின் இராஜதந்திர மட்டத்திலும் பேச்சுகளை நடத்தி ஜனாதிபதி தனது யோசனைத் திட்டத்தை முன்வைப்பதற்கு முன்பே அதற்கு எதிராக நாம் செயற்படவும் தயாராகவுள்ளோம்” என்றார்.

செல்வம் அடைக்கலநாதன்

ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவிக்கையில்.

“ஜனாதிபதியின் இந்தத் தீர்மானம் தொடர்பாக நாம் மிகக் கடுமையான எதிர்ப்புக்களைத் தெரிவிப்போம். போர்க்காலத்தில் எமது மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற ஐ.நா. தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் போராடி வருகின்றோம். குற்றம் இழைத்த தரப்பு விசாரணை செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும்.

இந்நிலையில், இதனை வலியுறுத்துகின்ற ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்களையும் கூட்டமைப்பு மேற்கொள்ளாது என்பதுடன் அதற்கு எதிரான மாற்றுச் சிந்தனைகள், கருத்துக்கள் உருவாகுவதையும் நாம் அனுமதிக்கமாட்டோம். ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு மிகவும் காத்திரமாகப் பங்களிப்புச் செலுத்துவோம்” என்றார்.

சித்தார்த்தன்

புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சிரத்தார்த்தன் தெரிவிக்கையில்,

“தற்போதைய ஜனாதிபதி மாத்திரமல்ல இந்நாட்டின் சிங்களத் தலைவர்கள் எவராக இருப்பினும் சிங்கள மக்கள் எதனை விரும்புகின்றார்களோ அதனை முன்னிறுத்தி அவர்கள் செயற்படுவார்கள். இதனைத் தவிர அவர்களிடம் இருந்து வேறு எவற்றையும் நாம் எதிர்பார்கக் முடியாது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தான் முன்வைக்கப் போவதாகவுள்ள யோசனைத் திட்டங்களை முழுமையாகப் பார்த்தததன் பின்னரே அது தொடர்பில் எமது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இருந்த போதிலும் இந்த நல்லாட்சி அரசிலும் தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளுக்கு எதிராகவே இந்த அரசும் செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தற்போது முன்வைக்கவுள்ளதாகக் கூறியுள்ள யோசனைத் திட்டத்தை அவர் முன்வைத்த பின்னர் அதனை முழுமையாகப் பார்த்ததன் பிற்பாடு அதற்கு எதிரான எமது நிலைப்பாட்டை எமது மக்களுக்கும் சர்வேதச சமூகத்துக்கும் எடுத்துரைத்து நாம் கோருகின்ற சர்வதேச நீதி விசாரணையை முன்னெடுக்குமாறு வலியுறுத்துவோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *