“எதிர்க்க வேண்டியதை எதிர்த்தே ஆக வேண்டும்’’ –நடிகர் கமல்ஹாசன்!

 

கேள்வி: வகுப்புவாதத்தையும், தீவிரவாதத்தையும் உங்கள் கவிதையின் கருப்பொருளாக வைத்திருக்கிறீர்கள்.

அதுபோல் பாபர் மசூதி தகர்க்கப்பட்டபோது அதைக் கடுமையாக எதிர்த்த ஒரே ஒரு நடிகர் தமிழ்சினிமா உலகில் நீங்கள் மட்டுமே…?’’

கமல்: “எதிர்க்க வேண்டியதை அந்தந்தச் சமயத்தில் எதிர்த்தே ஆகவேண்டும். வகுப்புவாதமும், தீவிரவாதமும் நமக்கு முன்னால் வரும்போது கையைக் கட்டிக் கொண்டு சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

என் வீட்டின் முற்றத்தில் உள்ள குப்பையை நான் அகற்றா விட்டால் வேறு யார் அதைச் செய்வார்கள்? அதை எடுத்து அகற்றிய பிறகே அடுத்த வீட்டிலிருந்து வெளியேறுகிற அழுக்குத் தண்ணீரைப் பற்றிப் பேச முடியும்.

எதிர்க்கிற சக்தியை இழக்காத மனிதன் எப்போதுமே எதிர்த்துக் கொண்டே இருப்பான், நான் அதை எனது பேச்சுக்களில் செய்து கொண்டிருக்கிறேன்.’’

கேள்வி: “மதத்தின் மீதும், கடவுளின் மீதும் உங்களுக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் எப்போது கடவுள் மறுப்பாளராக ஆனீர்கள்?’’

கமல் : ‘என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கடவுள் பக்தி உண்டு. அந்தப் பக்தியை அவர்கள் தங்களின் கடைசிக்காலம் வரை தொடர்ந்தனர்.

என் மூத்த அண்ணன் சாருஹாசன் ஒரு கடவுள் மறுப்பாளர். சந்திரஹாசன் அண்ணன் ஓர் ஆன்மீகவாதி. ஆனால் இளம் பருவம் முதலே நான் எந்த மதத்திலும், கடவுள் மீதும் நம்பிக்கையுள்ளவன் அல்ல.

அந்த எண்ணத்தை மாற்றும்படி யாரும் என்னிடம் சொன்னதுமில்லை. குழந்தைப் பருவத்திலேயே நான் பூணூல் அணிய மறுத்தபோது ‘அப்படிச் செய்யக்கூடாது’ என்று அப்பா என்னிடம் சொன்னதில்லை.

எனக்குச் சரியென்று படுவதில் நான் உறுதியாக நிற்கிறேன். நம் நாட்டில் நிகழ்கிற கலவரங்களில் அதிகமானவை மதத்துடன் சம்பந்தப்பட்டவை. மதமும், சாதியும் தான் இங்குள்ள முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது.

என் தெய்வம் என் மனசு தான். எனக்குச் சரியென்று தோன்றுவதை மட்டுமே செய்கிறேன். மனிதனை மோசமாகப் பாதிக்கிற எதையும் இதுவரை நான் செய்ததில்லை.’’

(2014 ஆம் ஆண்டு மலையாள நாளிதழான “தேசாபிமானி’’க்கு கமல்ஹாசன் கொடுத்த சிறப்புப்பேட்டியின் தமிழாக்கம் வெளிவந்திருப்பது ‘செம்மலர்’’ 2014 அக்டோபர் இதழில். அந்த நேர்காணலின் ஒரு பகுதி இது.)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *