இரண்டு பொம்மைகளுடன் உறவு, திருமணம், குழந்தைகள்! வினோத சம்பவம்!

உலகம் முழுவதும் பல வினோத சம்பவங்கள் நடப்பதை நாம் பார்த்திருப்போம். அதிலும் வினோதமான உணவு பழக்க வழக்கங்கள், வினோதமான போக்குவரத்துகள், வினோதமான திருமணங்கள் என பல விஷயங்கள் இயல்பிற்கு மாறாக இருக்கும். சில விஷயங்களில் அந்தெந்த நிலத்தின் பண்பாட்டையொட்டி பழக்கவழக்கம் மாறுபடும். அது மற்ற கலாச்சார மக்களுக்கு வினோதமாக தெரியலாம், அவ்வளவே.

அதேபோல் தான் பல விஷயங்களுக்கு பழக்கப்பட்டிருப்போம். அந்த பழக்கத்திற்கு மாற்றாகவோ அல்லது முற்றிலும் வேறாகவோ ஒரு பழக்கவழக்கத்தை பார்க்கும் போது அதனை உதாசீனப்படுத்துவதோ, அதனை கேலிக்குள்ளாக்குவதோ ஏற்புடையதாக இருக்காது. இயல்புக்கு மாறாக என நாம் சொன்னாலும், எது இயல்பு என நீங்கள் வரையறுப்பீர்கள் என்பதே நம்மை நோக்கி வரும் கேள்வியாக இருக்கும்.

அந்த வகையில், சில பொது நீரோட்ட பழக்கவழக்கத்திற்கு மாறாக சிலர் நடந்துகொள்ளும் போது அது பொதுஜனங்களின் கவனத்தையும் ஈர்க்கிறது. அந்த வகையில், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் ஒரு பெண்மணியின் ‘வினோத’ திருமணம்தான் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. அதாவது, அவரின் இணை பேய் பொம்மை. அதுவும் ஒன்றில்லை இரண்டு பொம்மைகளுடன் அந்த பெண் திருமணம் மேற்கொண்டுள்ளார்.

25 வயதான ஃபெலிசிட்டி காட்லெக் என்ற அந்த பெண்மணி தன்னை பொருள்கள் மீதான ஈர்ப்பாளர், Objectum Sexual என தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். அதாவது, இவர்கள் உயிரற்ற பொருள்கள் மீது காதல் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பொம்மைகளுடன் பலதார உறவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர் ஹாலோவீன் பொருள்கள் விற்கும் தளத்தில் பார்த்த பொம்மைகளுடன் காதலில் விழுந்ததாக தெரிவித்துள்ளார்.

ஃபெலிசிட்டி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னரே ஒரு பெண் பேய் பொம்மையான கெல்லி ரோஸியுடன் தனது முதல் திருமணத்தை மேற்கொண்டார். தற்போது 6 அடி உயரம் உள்ள ஆண் பொம்மையான ராபர்ட்டை ஃபெலிசிட்டி திருமணம் செய்துள்ளார். இவரின் இந்த இரண்டு பொம்மை துணைகளுடன் 10 பொம்மை குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது. ரேச்சல், லூனா, பில்லி என மொத்தம் ஃபெலிசிட்டிக்கு 10 குழந்தைகள் தற்போது உள்ளது. இப்போது இந்த மூவரும் பீட்டர் என பெயரிடப்பட்ட 11ஆவது குழந்தைக்காக காத்திருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெலிசிட்டி தனது ஆண் பொம்மையான ராபர்டிடம் கடந்த காதலர் தினத்தில் பிரபோஸ் செய்ததாக தெரிவித்தார். பீட்டர் உடனான திருமணம் அவரது தாத்தா மற்றும் முதல் இணையர் கெல்லி மற்றும் அவர்களது 10 பொம்மை குழந்தைகளின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும், ராப்ர்டை திருமணம் செய்துகொண்ட நிலையில், ஃபெலிசிட்டி ஒரு வாக்குறுதியையும் அளித்துள்ளார். அதாவது, ராபர்ட்டை திருமணம் செய்துகொள்வதால் கெல்லி பொறாமை கொள்ளமாட்டாள் எனவும் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஃபெலிசிட்டி பொதுமக்கள் யாரின் பேச்சுக்கும், கருத்துக்கும் அஞ்சாமல் தனது பொம்மை குடும்பத்தை வெளியே அழைத்துச் செல்வார். மேலும், இது மனநிலை குறைப்பாடு இல்லை எனவும், ஆன்மீக ரீதியிலான தொடர்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மனநல ஆலோசகரை ஆலோசித்ததாகவும், இதுபோல் பொம்மை குடும்பத்துடன் வாழ்வதில் பிரச்னை ஏதும் இல்லை எனவும் தெரிவித்ததாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *