அடி பலமாக இருக்கும்: இஸ்ரேலுக்கு ஈரான் கடும் மிரட்டல்!

ஈரான் துணைத் தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடி உறுதி என்றும், அதன் பாதிப்பு பயங்கரமாக இருக்கும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

கொடூர நடவடிக்கைகளுக்கு பதிலடி உறுதி
இஸ்ரேலின் கொடூர நடவடிக்கைகளுக்கு பதிலடி உறுதி என குறிப்பிட்டுள்ள முதன்மை தலைவர் Ali Khamenei, எதிரிகள் வருந்தும் அளவுக்கு திருப்பி அடிப்போம் என தெரிவித்துள்ளார்.

சிரிய தலைநகரில் திங்கள்கிழமை இஸ்ரேல் முன்னெடுத்த வான்வழித் தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். அதில் இருவர் மூத்த தளபதிகள் என்றே கூறப்படுகிறது.

ஈரானின் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி முகமது பாகேரி தெரிவிக்கையில், இஸ்ரேலுக்கு பதிலடி உறுதி என்றார். 2020ல் ஈராக்கில் வைத்து அமெரிக்க ட்ரோன் தாக்குதலுக்கு Qassem Soleimani கொல்லப்பட்ட பின்னர், மூத்த தளபதி ஒருவரை தற்போது இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பறிகொடுத்துள்ளது.

பாகேரி தெரிவிக்கையில், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் நேரத்தையும் தன்மையையும் ஈரான் தீர்மானிக்கும் என்றார். ஈரானின் பதிலடி சரியான நேரத்தில் இருக்கும் என்றும் அது எதிரிக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்துவது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, டமாஸ்கஸ் தாக்குதலில் பங்கில்லை என்று அமெரிக்கா மறுத்திருந்தாலும், பாகேரி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் அமெரிக்கா மீது சந்தேகம் இருப்பதாகவே குறிப்பிட்டுள்ளனர்.

கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும்
அமெரிக்கா ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், இஸ்ரேல் செய்த குற்றங்களில் அமெரிக்காவின் ஈடுபாடு தெளிவாக உள்ளது. சமீபத்தில் சிரிய தூதரகத்தில் நடந்த சம்பவத்திலும் அமெரிக்காவின் பங்கு உறுதி.

இதனால் அமெரிக்கா கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் பாகேரி தெரிவித்துள்ளார். சமீபத்திய ஆண்டுகளாக சிரியாவில் ஈரான் தொடர்புடைய இலக்குகள் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், டமாஸ்கஸ் தாக்குதல் குறித்து பெயர் வெளியிட விரும்பாத 4 இஸ்ரேலிய அதிகாரிகள் இஸ்ரேலின் பங்கை ஒப்புக்கொண்டதாக தகவல் கசிந்துள்ளது. மேலும், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், டமாஸ்கஸில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போராளிக் குழுக்கள் பல இஸ்ரேல் மற்றும் காஸா போர் தொடங்கிய பின்னர் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *