பாலியல் சக்தி தருவதாகக் கூறப்படும் உஸ்பெகிஸ்தான் ‘பிரியாணி’

உஸ்பெகிஸ்தானின் பிரியமான தேசிய உணவான புலாவ் (Plov), பாலுணர்வைத் தூண்டும் குணங்களைக் கொண்டிருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. அதனால், அந்நாட்டில் கருத்தரிக்க உகந்த நாளாக பரவலாக கருதப்படும் வியாழக்கிழமைகளில் இந்த உணவு உண்ணப்படுகிறது.

அரிசி, காய்கறிகள், இறைச்சி மற்றும் மசாலாப் பொருட்களின் கலவைதான் புலாவ். இது பட்டுப்பாதை நாடுகள் அனைத்திலும் பிரபலமானது. ஆனாலும் இது உஸ்பெகிஸ்தானுடன் மிகவும் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது. வாரத்திற்கு ஒரு முறையாவது பரவலாக உட்கொள்ளப்படும் புலாவ், அந்த நாட்டின் தேசிய உணவாகும். குடும்ப விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் இன்றியமையாத இடத்தையும் புலாவ் பிடித்துள்ளது.

குழந்தை பிறப்பு, திருமணம், இறுதிச் சடங்கு மற்றும் ஹஜ் பயணத்தில் இருந்து திரும்பும் முஸ்லிம்களை கௌரவிக்கவும் இந்த உணவு பரிமாறப்படுகிறது.

புலாவ் முதன்முதலில் ‘மாவீரன் அலெக்சாண்டர்’ கேட்டுக்கொண்டதற்கு இணங்க உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மத்திய ஆசியாவில் தனது படையெடுப்புகளின்போது ராணுவ வீரர்கள் நல்ல வலுவுடன் தாக்குப்பிடிக்கும் விதமாக இருக்கும்படியான ஒரு திருப்திகரமான உணவை உருவாக்கும்படி அவர் உத்தரவிட்டார் என்றும் அதன் தொடர்ச்சியாக புலாவ் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. “அதை நிரூபிப்பதற்கான வரலாற்று பதிவுகள் நம்மிடம் இல்லை. ஆனால் 9 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுகளுக்குள் புலாவ் இங்கு மிகவும் பிரபலமாகிவிட்டது என்பது எங்களுக்கு தெரியும்,” என்கிறார் உணவு வரலாற்றில் ஆர்வமுள்ள உஸ்பெக் சுற்றுலா வழிகாட்டி நிலுஃபர் நூரிடினோவா.

  • புலாவ்

1,000 ஆண்டுகள் பழமையான உணவு

மேலும் பேசிட நிலுஃபர் நூரிடினோவா, “1,000 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் நெல் ஒரு பிரதான பயிராக இருந்து வருகிறது. நெற்பயிரை பயிரிடுவது, அதை அறுவடை செய்வது மற்றும் கால்நடைகளை வளர்ப்பது போன்ற பணிகளுக்கு கடுமையான உடல் உழைப்பு தேவைப்படுகிறது. எனவே, இங்குள்ள விவசாயிகளுக்கு புலாவ் ஒரு சிறந்த உயர் கலோரி கொண்ட, ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருந்திருக்கும்,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

புலாவ் இப்போது நாட்டின் சமையல் மரபுகளின் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது. இது சமீபத்தில் யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. “இது வெறும் ஒரு உணவு மட்டுமல்ல,” என்று நூரிடினோவா விளக்குகிறார்.

“இது சமூக பிணைப்புகளை உருவாக்குகிறது, நட்பை ஊக்குவிக்கிறது. நாட்டை ஒன்றிணைக்கிறது,” என்கிறார் அவர்.

புலாவ் என்ற வார்த்தைகூட உஸ்பெக் மொழியின் முக்கிய அங்கம் என்கிறார் அவர். “இது அன்றாடம் நாம் சொல்லும் பல சொற்றொடர்களில் இடம்பெறுகிறது. உதாரணமாக ‘உங்களுக்கு பூமியில் இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது என்று உங்களுக்குத் தெரிந்தால், அந்நாளை புலாவ் சாப்பிட்டு செலவிடுங்கள்’ என்று சொல்லப்படுகிறது. அதாவது, மகிழ்ச்சியாக இறக்கலாம் என்பதே இதன் பொருள். உஸ்பெகிஸ்தானில் புலாவ் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

ப்லோவ்

பட மூலாதாரம்,SIMON URWIN

உஸ்பெகிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட புலாவ் வகைகள் உள்ளன. பிராந்தியம் மற்றும் பருவத்திற்கு ஏற்ப சமையல் முறை வேறுபடுகிறது. ஆனால் ஒவ்வொரு வகையிலும் இந்த உணவிற்கு முழுப்பெயரை அளித்த எல்லா பொருட்களும் இடம்பெற்றிருக்கும். அவற்றின் முதல் எழுத்துக்களை சேர்த்தே இந்த உணவின் முழுப்பெயர் அமைந்துள்ளது. osh palov: ‘o’ என்றால் ஓப் (பாரசீக மொழியில் தண்ணீர்), ‘sh’ என்பது ஷோலி (அரிசி), ‘p’ என்பது ‘பியோஃஸ்’ (வெங்காயம்), ‘a’ அயோஃஸ் (கேரட்), ‘l’ லாம் (இறைச்சி), ‘o’ ஒலியோ (கொழுப்பு அல்லது எண்ணெய்) மற்றும் ‘v’ வெட் (உப்பு).

  • ப்லோவ்

‘ருசி நன்றாக இல்லாவிட்டால் உயிரையும் விடுவோம்’

உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டின் யூனுசாபாத் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பெஷ் க்யோசான் நாட்டின் மிகவும் பிரபலமான புலாவ் உணவகம் ஆகும். மத்திய ஆசியாவின் மிகப்பெரிய புலாவ் உணவகங்களில் ஒன்றாக கருதப்படும் பெஷ் க்யோசானில் தினசரி 5,000 முதல் 8,000 வாடிக்கையாளர்கள் உணவருந்திச் செல்கின்றனர். இங்கு ‘கசான்’ எனப்படும் ஒன்பது பரந்த கொப்பரைகளில், விறகடுப்பின் மேல் புலாவ் தயாரிக்கப்படுகிறது.

உஸ்பெக் பாரம்பரியத்தின் படி புலாவுடன் ‘நான்’ (ரொட்டி) பரிமாறப்படவேண்டும். பெஷ் க்யோசானில் பணிபுரியும் சமையல் நிபுணர் ஷோகிர்ஜோன் நூர்மடோவ். எல்லா சமையலறை ஊழியர்களையும் போலவே அவர் வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு சிறப்பு சடங்கைச் செய்கிறார். அதாவது அவர் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறார். ஒரு கிண்ணத்தின் வடிவத்தில் கைகளை ஒன்றாக இணைத்து, தனது வேலையை வெற்றிகரமாகச் செய்ய ‘துவா’ (அல்லாவிடமிருந்து ஆசீர்வாதம்) கேட்கிறார். அதன் பிறகுதான் அவர் தினசரி 3,000-க்கும் அதிகமான ரொட்டிகளைத் தயாரிக்கும் தனது வேலையைத் தொடங்குகிறார்.

குடும்பங்களில் புலாவ் பாரம்பரியமாக பெண்களால் சமைக்கப்படுகிறது. உணவகங்களில் (மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களில்), இது ஓஷ்பாஸ் எனப்படும் ஆண் சமையல்கார்களால் தயாரிக்கப்படுகிறது. “அதிக அளவில் சமைப்பதற்கு கடினமான உடல் உழைப்பு தேவைப்படுகிறது,” என்கிறார் பெஷ் க்யோசானில் உள்ள ஓஷ்பாஸ் ஃபைசுல்லா சாக்டியேவ்.

“என்னுடைய மிகப்பெரிய கசான் மூன்று டன் உணவை வைக்கக்கூடிய கொள்ளளவு கொண்டது,” என்றார் அவர். “ருசி பிடிக்காத காரணத்தால் ஒரு விருந்தினர் புலாவை உண்டு முடிக்கவில்லை என்றால், அது மிகவும் வெட்கக்கேடானது. ஓஷ்பாஸ் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூட நினைப்பார்கள். அதிர்ஷ்டவசமாக எனக்கு இப்படி ஒருபோதும் நடந்ததில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

  • ப்லோவ்

இந்தியாவிலிருந்து சென்ற சீரகம்

புலாவ் செயல்முறை ஒரு கண்டிப்பான விதியைப் பின்பற்றுகிறது. முதலில் இறைச்சியை (ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி கலவை) சமைக்க வேண்டும். பின்னர் வெள்ளை மற்றும் மஞ்சள் கேரட், வெங்காயம், அரிசி, தண்ணீர் மற்றும் மசாலாக்கள் சேர்க்கப்படும். உப்பு, மிளகு, மஞ்சள் மற்றும் முக்கியமாக சீரகம் ஆகியவற்றின் கலவையை சாக்டியேவ் பயன்படுத்துகிறார். முதன்முதலாக சீரகம் இந்தியாவில் இருந்து உஸ்பெகிஸ்தானுக்கு பட்டுப் பாதை வழியாக வந்தது. பெஷ் க்யோசானின் ‘சாய்கானா ப்லோவில்’ கொண்டைகடலையும், கிஷ்மிஷ்ஷூம் (உலர் திராட்சை) சேர்க்கப்பட்டு நான்கு மணி நேரம் மெதுவாக சமைக்கப்படுகிறது.

உஸ்பெகிஸ்தானில் புலாவ் செய்து சாப்பிடுவதற்கு மிகவும் பிரபலமான நாட்களாக வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் கருதப்படுகின்றன. “பண்டைய காலங்களில், கிராமப்புறங்களில் இருந்து மக்கள் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே தங்கள் பொருட்களை விற்க நகரச் சந்தைகளுக்கு செல்ல முடியும். எனவே, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவையான எல்லா பொருட்களையும் வாங்குவதற்கு அவர்களிடம் அதிக பணம் இருக்கும்,” என்று நூரிடினோவா விளக்கினார்.

ப்லோவ்

பட மூலாதாரம்,SIMON URWIN

பாலுணர்வை தூண்டும் வலிமையான குணங்கள் புலாவில் உள்ளது என்று கருதப்படுவதாலும், கருத்தரிக்க வியாழக்கிழமை சிறந்த நாளாக கருதப்படுவதாலும், அன்றைய தினம் புலாவ் விரும்பி உண்ணப்படுகிறது என்று சாக்டியேவ் கூறினார்.

புலாவ் என்ற வார்த்தையின் அர்த்தம் ‘ஃபோர்ப்ளே’ (உடலுறவுக்கு முந்தைய பாலியல் விளையாட்டுகள்) என்று சில ஆண்கள் கேலியாகச் சொல்வார்கள். புலாவ் சமைக்கப்பட்ட கசான் பாத்திரத்தின் அடிப்பகுதியில் உள்ள எண்ணெய் சில நேரங்களில் ‘இயற்கை வயாக்ராவாக’ உட்கொள்ளப்படுகிறது. ஆண் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாலியல் சக்தியை அளிக்கும்விதமாக பல ஓஷ்பாஸ்கள், வியாழக்கிழமைக்கு சிறந்த இறைச்சியை ஒதுக்கிவைப்பார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

வியாழக்கிழமைகளில் கருத்தரிக்கும் பாரம்பரியம் நாட்டின் வலுவான இஸ்லாமிய நம்பிக்கைகளுடன் இணைந்துள்ளது. “முகமது நபி ஒரு வியாழனன்று கருவில் வந்தார் என்று கருதப்படுகிறது,” என்று சாக்டியேவ் கூறினார். “எனவே, உங்கள் குழந்தை புத்திசாலியாகவும், நல்ல நடத்தை கொண்டதாகவும், கடவுளின் ஆசியை பெற்றதாகவும் இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதைச் செய்ய இது ஒரு நல்ல நாள். ஆனால் அதற்கு முதலில் ஒரு பிளேட் புலாவ் சாப்பிட வேண்டும்,” என்று அவர் சிரித்தபடி கூறுகிறார்.

 பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *