மின் கட்டணம் 18 வீதம் குறைப்பு: இன்று பிரேரணை சமர்ப்பிப்பு

எதிர்வரும் நாட்களில் மின் கட்டணம் குறைக்கப்பட்டு, சலுகைகள் பொது மக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் மின் கட்டணம், நீர் கட்டணம், வட் வரி உயர்வு, மற்றும் எரிபொருள் விலை உயர்வு என்பவற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக அமையும்.

மின் கட்டண குறைப்புக்கு அமைவாக நீர் கட்டணமும் கணிசமான அளவு குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மின் கட்டண குறைப்பு பிரேரணை இன்று PUCSL கையளிப்பு

மின் கட்டணத்தை குறைக்கும் பிரேரணை இன்றைய தினம் (22) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL)கையளிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த கட்டணத் திருத்தத்தின் மூலம் தாம் ஈட்டிய இலாபத்தின் நன்மைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு அரச மின்சார விநியோக நிறுவனம் உத்தேசித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் முன்னாள் பேச்சாளர் நோயல் பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.

மின்கட்டணம் 18 சதவீதத்தால் குறையும் – அமைச்சர் காஞ்சன

கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தல், நீர்மின்னுற்பத்தி அதிகரிப்பு ஆகிய சாதகமான காரணிகளினால் மின்கட்டணத்தை அதிகளவான வீதத்தில் குறைக்குமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினார்கள்.

மின்சாரத்துறையின் முன்னேற்றத்தின் பயனை நாட்டு மக்களுக்கு முழுமையாக வழங்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணத்தை முழுமையாக இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீட்டு மற்றும் மத தலங்களில் மின்கட்டணம் 18 சதவீதத்தாலும், கைத்தொழில்சாலைகள், ஹோட்டல்களுக்கான மின்கட்டணம் 12 சதவீதத்தாலும், அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கான மின்கட்டணம் 24 சதவீதத்தாலும் குறைக்கப்படும்.

திருத்தம் செய்யப்பட்ட மின்கட்டண யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படும்.

Oruvan

தெற்காசிய அயல் நாடுகளை விட இலங்கை மக்கள் 2.5 முதல் 3 மடங்கு அதிக மின்சாரக் கட்டணத்தை செலுத்துகின்றமை அண்மைய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

Verite Research நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இலங்கையில் 100 யூனிட்களை பயன்படுத்துவதற்கு 5,280 ரூபாய் கட்டணமாக அறவிடப்படுகிறது. அதே சமயம் தெற்காசியாவிற்கான அந்த கட்டணம் 2,078 ரூபாவாகும்.

இலங்கையில் 300 அலகுகளைப் பயன்படுத்துவதற்கு 21,860 ரூபாய் கட்டணமாக அறவிடப்படுகிறது. அதே சமயம் தெற்காசியாவிற்கான அந்த கட்டணம் 7,340 ரூபாவாகும்.

Oruvan

Oruvan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *