பாக். தேர்தல் முடிவுகள் வெளியீடு: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து 3 நாட்களுக்குப் பிறகு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாகிஸ்தானில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மற்றும் தேசிய, மாகாண சட்டப்பேரவை தேர்தல்கள் கடந்த 8ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 3 நாட்கள் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தேர்தல் முடிவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மொத்தம் 854 தொகுதிகளில் நாடாளுமன்ற மற்றும் மாகாண தேர்தல் நடந்தது. இதில் அதிகபட்சமாக 348 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் பிடிஐ கட்சியினர். கட்சியின் கிரிக்கெட் பேட் சின்னம் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சுயேச்சையாக களமிறங்கினர். கட்சிகளைப் பொறுத்த வரையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் (பிஎம்எல்-என்) 227 இடங்களில் வெற்றி பெற்று, அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக உள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 160 இடங்களிலும், எம்க்யூஎம்-பி கட்சி 45 இடங்களிலும் வென்றுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரையில், வாக்குப்பதிவு நடந்த 265 தொகுதிகளில் சுயேச்சைகள் 101 தொகுதிகளில் வென்றுள்ளனர். நவாஸ் கட்சி 75 இடங்களிலும், பிபிபி கட்சி 54 இடங்களிலும், எம்க்யூஎம்-பி கட்சி 17 இடங்களிலும் வென்றுள்ளன. மத்தியில் ஆட்சி அமைக்க 265 இடங்களில் 133 தொகுதிகளில் வெல்ல வேண்டியது அவசியம். இதனுடன், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான நியமன இடங்களையும் சேர்த்து மொத்தமுள்ள 336 தொகுதிகளில் 169 இடங்களை கைப்பற்ற வேண்டும். ஆனால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை வெற்றி கிடைக்காததால், கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *