புற்றுநோய் என்றால் என்ன? ஏன் வருகிறது? எப்படிக் கண்டறிவது?

மானுடராய்ப் பிறத்தலும், பிறந்து நோயின்றி வாழ்ந்து மாய்தலும் அரிதரிது. அன்றாடம் நாம் நமது எதிர்காலத்தைப் பற்றி நினைத்துக் கலங்குகிறோமோ இல்லையோ எந்தவொரு நோயும் வந்துவிடக்கூடாது என்றும், அதிலும், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் நமக்கு வரக்கூடாது என்று நினையாமலிருப்பவர் எவருமில்லை.

உலக அளவில் மனிதர்களுக்கு வரும் கொடுநோய்களில் இதய நோய்களை அடுத்து புற்றுநோய்கள்தாம் இருக்கின்றன. புற்றுநோய் என்பது எங்கோ, யாருக்கோ என்றிருந்து, இன்று புற்றுநோயற்றோர் வாழும் ஊர்கள் இந்தியாவில் இருக்கின்றனவா என்று ஐயப்படும்படியான நிலைக்கு வந்துசேர்ந்திருக்கிறோம். 2021 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு கோடியே எழுபத்து மூன்று இலட்சமாக இருந்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கை வரும் 2025 ஆம் ஆண்டில் மூன்றுகோடியை நெருங்கிவிடும்.

இந்தியாவில் 15 பேரில் ஒருவருக்கு புற்றுநோய்

இன்னும் தெளிவாகச் சொன்னால், இந்தியாவில் மட்டும், ஒவ்வொரு 15 பேரில் ஒருவருக்கு புற்றுநோயிருக்கிறது. ஆனால், 130 கோடிக்கும் மேலாக மக்கள்தொகையுடைய நாட்டில், எழுபதுக்கும் குறைவான (புற்றுநோய்க்கான நவீன சிகிச்சைவசதிகளைக் கொண்ட) மருத்துவமனைகள்தாம் இருக்கின்றன என்கிறது National Cancer Grid-இன் ஆய்வறிக்கை. ஆகவேதான், இந்தியப் பெருநகரப் புற்றுநோய் மருத்துவமனைகள் யாவும் நிரம்பி வழிந்தாலும், எல்லோருக்கும் சிகிச்சை கிடைக்கிறதா என்று ஐயமெழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.

ஆயினும், இவ்வாறாக நீக்கமறப் பரந்து கிடக்கும் உயிர்க்கொல்லிப் புற்றுநோய்கள் மற்றும் அவற்றின் அறிகுறிகள் பற்றியோ, அவற்றைத் தொடக்கத்திலேயே கண்டறியும் முறைகள் பற்றியோ போதிய விழிப்புணர்வு நம்மிடையே இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக படித்தறியாத பாமர மக்களுக்குத்தான் புற்றுநோய்கள் பற்றித் தெரிவதில்லை என்றெல்லாம் பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டுக் கடந்துவிடவியலாது. முறையே, 95.2, 87.33 மற்றும் 77.9% படிப்பறிவு பெற்ற பெண்கள் நிறைந்த கேரளா, டெல்லி, மற்றும் தமிழ்நாட்டில்தாம் அதிகமானோர் மார்பகப்புற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அதிலும், 2018ஆம் ஆண்டு ஆய்வறிக்கையொன்றின்படி, உலகளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் மார்பகப்புற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23%. (Estimated Cancer Incidence, Mortality and Prevalance Worldwide in 2012. 2012. v1.0 (IARC CancerBase No. 11)) இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு பத்து நிமிடங்களில் இரண்டு பெண்களுக்கு மார்பகப்புற்று இருப்பதும், அவர்களில் ஒருவருக்கு முற்றிய நிலையில் இருப்பதும் கண்டறியப்படுவதால், இருவரில் ஒருவர் இறந்துவிடுகிறார். இன்னும் சொல்லப்போனால், இந்திய அளவில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும்தாம் 23.3% பெண்கள் கருப்பைவாய் புற்றுநோயினால் (Cervical Cancer) இறந்துபோகிறார்கள். (Lancet Oncol, 15 (6) (2014), pp. e223).

இது இப்படியிருக்க, புகையிலைப் பயன்பாட்டினால் 68 இந்திய ஆண்களில் ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கிறது. (JCO Global Oncology no. 6 (2020) pp-1063). ‘புகை நமக்குப் பகை’ என்ற வாசகத்தைப் படித்துவிட்டே புகைப்பவர்களாகவே பலர் இருக்கின்றனர். ஆகவே, புற்றுநோய்களை வகைப்படுத்தி, அவற்றை அழித்தொழிக்க இன்றைய நாளில் அறிவியல் உலகம் எடுக்கும் ஆய்வுகள் பற்றிப் பேசுகிறது இந்தக்கட்டுரை. ஆகவே, நோய்நாடி நோய்முதல்நாடி, நம்மில் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்கிறேன்.

  • புற்றுக்கட்டிகளும் (Malignant) புற்றிலிக்கட்டிகளும் (Benign)

புற்று என்பது உடலுறுப்புகளிலுள்ள சிலவகைச் செல்கள் கட்டுப்பாடற்று வளர்ந்துபெருகி உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் ஒரு நோயாகும். லட்சம் கோடிக்கணக்கிலான (Trillions) உயிரணுக்களால் ஆன மனிதவுடலின் எந்தவிடத்திலும் புற்று உருவாகலாம். பொதுவாக, மனிதச்செல்கள் வளர்ந்து பின்னர் ‘செல்பிரிதல்’ (Cell Division) முறை மூலம் உடலுக்குத் தேவையான புதியசெல்களாக உருவாகின்றன. அவ்வாறு உருவான செல்கள் நாள்பட நாள்பட முதிர்ந்து அல்லது சிதைந்து இறந்துவிடுவதால், அவற்றின் இடங்களில் புதியசெல்கள் உருவாகும். இதைத்தான் Apoptosis (முறையான செல்லழிவு-Programmed Cell Death) என்கிறது அறிவியல். இவ்வாறு முறையான செல்லழிவு தொடர்ந்து (சங்கிலி) நிகழ்வதால்தான் மனிதவுடல் உயிர்ப்புடன் இருக்கிறது. இதை திருமூலரின் வாக்காக, ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்றும் சொல்லலாம்.

புற்றுநோய்

பட மூலாதாரம்,NANOCLUSTERING/SCIENCE PHOTO LIBRARY/GETTY IMAGES

சில நேரங்களில் (பல காரணிகளால்) இந்த முறையான செல்லழிவுத் தொடர்ச்சங்கிலி உடைந்து, ஒரு செல் மட்டும் தோன்றவேண்டிய இடத்தில் ஓராயிரம் செல்கள் தோன்றிப்பெருகலாம். இவ்வாறு, வரம்பின்றிப் பெருகும் செல்க்குவியங்கள் திசுக்கட்டிகள் (Tumours) எனப்படுகின்றன. இவை புற்றுக்கட்டிகள் (Malignant) அல்லது புற்றிலிக்கட்டிகள் (தீங்கற்ற அல்லது Benign) என்றும் இருவகைப்படுத்தப்படுகின்றன.

மேற்சொன்னவாறு பல்கிப்பெருகும் புற்றுக்கட்டிகள் (போதிய இடமின்மையால்) அருகிலுள்ள திசுக்களில் பரவுகின்றன, அல்லது படையெடுக்கின்றன. அதோடு, மேலும் புதிய புற்றுக்கட்டிகளை உருவாக்க உடலின் பல்வேறு இடங்களுக்கு (உறுப்புகளுக்கு) செல்லலாம். இவ்வாறு, உடலுறுப்பொன்றில் உருவாகும் புற்றுக்கட்டி, உடலின் மற்றொரு உறுப்பைநோக்கி நகர்ந்து உட்பரவுவது (Invasive) மிக முற்றிய அல்லது வீரியமிக்க (Metastasis) நிலை எனப்படுகிறது.

ஆனால், உடலுறுப்பொன்றில் புற்றிலிக்கட்டிகள் தோன்றினால், அவை அருகிலுள்ள திசுக்களுக்குப் பரவாது, அல்லது படையெடுக்காது. அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டால், இவை பொதுவாக மீண்டும் வளராது. அதேசமயம் புற்றிலிக்கட்டிகள் சில நேரங்களில் உருவில் மிகவும் பெரியதாக இருக்கலாம் என்பதால், சில தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, மூளையில் உண்டாகும் புற்றிலிக்கட்டிகள் கண் பார்வை, நினைவுத்திறம் உள்ளிட்ட செயல்பாடுகளோடு உயிருக்குத் தீங்கு விளைவிக்கலாம்.

திண்ம மற்றும் நீர்மப்புற்றுக்கட்டிகள் (Solid and Liquid Tumours)

பொதுவாக, புற்றுக்கட்டிகள் அவைத் தோன்றுமிடத்தைக் கொண்டு, திண்மப்புற்று (Solid Tumours) மற்றும் நீர்மப்புற்று (Liquid Tumours) கட்டிகள் என்று வகைப்படுத்தலாம். சற்று கடினமான செல்களைக்கொண்ட உறுப்புகளான எலும்பு, மார்பகம், நுரையீரல், மண்ணீரல் போன்ற உடலுறுப்புகளில் உருவாகும் திண்மப்புற்றுக்கட்டிகளை Carcinoma வகை என்றும், சற்று மெல்லிய அல்லது இணைப்புத்திசுக்களைக் கொண்ட தசைகள், எலும்புச்சவ்வுகள், கொழுப்புப்படலம் மற்றும் இரத்தக்குழாய்ச் சுவர்களில் தோன்றுபவற்றை Sarcoma வகை திண்மப்புற்றுகள் என்றும் கூறுவார்கள்.

அதோடு ரத்தம், எலும்புநல்லி (Bone marrow) மற்றும் நிணநீர் (Lymph) போன்ற உடலியல் நீர்மங்களில் உருவாகும் புற்றுக்கட்டிகள் நீர்மப்புற்று (ரத்தப்புற்று – Leukemia, எலும்புநல்லிப்புற்று- Myeloma மற்றும் நிணநீர்க்குழியப்புற்று-Lympoma) என்றும் அழைக்கப்படுகின்றன.

  • புற்றுநோய் வகைகள்

மேற்சொன்னவாறு, புற்றுக்கட்டிகளை அவற்றின் தோற்றுவாயைக் கொண்டு வகைப்படுத்தும் மருத்துவ அறிவியல், ஏறக்குறைய 200 வகைகளுக்கும் மேலான புற்றுநோய்கள் இருக்கின்றன என்றும் சொல்கிறது. அதாவது, இரண்டு வெவ்வேறு ஆண் (அ) பெண்களுக்கு ஒரே உறுப்பில் புற்றுநோய் வந்திருந்தாலும், அவை ஒரேவகையான புற்றுநோயாகத்தான் இருக்கவேண்டுமென்று அவசியமில்லை.

அதாவது, புற்றுசெல்கள் தோன்றுமிடங்கள், அவற்றின் புற மற்றும் அக வடிவங்கள், அவற்றுள் சுரக்கும் அல்லது உள்வாங்கும் உயிர்வேதிப்பொருள்களின் தன்மைகளைப் பொறுத்து அவற்றின் உள்வகைகள் பிரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பெண்களுக்கு வரும் மார்பகப்புற்றுநோய் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், இயல்பிடப் பால்குழாய்ப்புற்று (Ductal Carcinoma in situ), வன்புகு பால்குழாய்ப்புற்று (Invasive Ductal Carcinoma), அழற்சி (Inflammatory) மற்றும் உட்பரவிய மார்பகப்புற்று (Metastatic Breast Cancer) என்று நான்கு உள்வகைகளாகப் பகுத்துக் கூறப்படுகிறது. இந்த நான்கு வகையான மார்பகப்புற்று நோய்களில் ஏறக்குறைய எண்பதுக்கும் மேற்பட்ட மார்பகப்புற்று செல் வகைகள் இருக்கின்றன என்றும் கண்டுபிடித்திருக்கிறது இன்றைய புற்றுநோய் அறிவியல்.

புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில், அதிகமான எண்ணிக்கையில் தோன்றும் அரியவகைப் புற்றுநோய்களில் “மேசொதெளியோமா”வும் ஒன்று. கட்டுமானங்களில், வீட்டுக்கூரைகளில், தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் ஆசுபெசுடாசு (Asbestos)-வை நுகர்வதால், நுரையீரலிலும், அடிவயிறு மற்றும் இதயத்தில் உருவாகும் புற்றுநோய்தான் இது. இவ்வகையான புற்றுநோயானது, பெரும்பாலும் பணியிட மாசு நுகர்வால் (Occupational Exposure) உண்டாகும் கொடுநோயாகும். உலக அளவில், பெரும்பாலான நாடுகளில், ஆசுபெசுடாசுப் பயன்பாடு தடைசெய்யப்பட்டிருந்தாலும், இந்தியாவில் தொழிலகங்களில்/வீடுகளில் மேற்கூரையாக, பந்தல்களாகப் பயன்படுத்தப்படுவதும், வேலைக்குச் செல்லும் மக்கள் நுகர்வதும் குறையவில்லை என்றுதான் தோன்றுகிறது.

அதோடு, “மேசொதெளியோமா” இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட ஒருவர் ஓராண்டுக்கும் மேலாக உயிர்வாழ்வதில்லை என்கிறது மருத்துவப் புள்ளிவிவரம். ஆனால், இந்த நோய்க்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகையால், இந்த நோயைப்பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தே உண்டாக்கி, ஆசுபெசுடாசு பயன்பாட்டை முழுமையாகத் தடைசெய்தால் மட்டுமே மக்களைக் காக்கமுடியும்.

புற்றுநோய் மருந்தாக்கம்

புற்றுநோய் ஆராய்ச்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகெங்கும், ஆயிரக்கணக்கான ஆய்வறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோர் உதவியோடு பல்லாயிரம் கோடிகள் செலவிடப்பட்டு புற்றுநோய் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும், மேற்சொன்ன காரணங்களால்தாம் புற்றுநோய்க்கு மருந்தாக்கம் என்பது எளிதாக இல்லை. ஆகவே, கடந்த நூற்றாண்டு முதலாக இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்ட புற்றுநோய்களுக்கான மருந்துகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அதிலும் குறிப்பாக, வேதிச்சிகிச்சையில் (Chemotherapy) பயன்படுத்தப்படும் பெரும்பாலான மருந்துகள், புற்றுசெல்களை அழிப்பதோடு நல்லசெல்களையும் அழிப்பதால், புற்றுசெல்களைப்போல வேகமாக வளரும் முடி மற்றும் நகச்செல்கள் உதிர்வது தவிர்க்கமுடியாத பக்கவிளைவுகளாகும். ஆனாலும், அதைத் தொடர்ந்து, ஒவ்வாமை, வாந்தி, இரத்த உற்பத்தி குறைந்து உடல் நலிதல், பசியின்மை, நினைவாற்றல் குறைபாடு, உயிரிழப்பு போன்ற தீவிரமான பக்கவிளைவுகளை உண்டாக்குவதால் வேதிச்சிகிச்சை என்பதே வேண்டாம் என்னும் நிலைக்கு நோயாளிகள் தள்ளப்படுகின்றனர். ஆகவே, அறிவியலாளர்கள், மேற்சொன்ன குறைகளற்ற அல்லது தீவிர பக்கவிளைவுகள் குறைந்த, நல்லசெல்களை விட்டுவிட்டு புற்றுசெல்களை மட்டும் தாக்கி அழிக்கவல்ல மருந்துகளை ஆய்ந்து ஆக்க முயல்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக, அறிவியலாளர்களின் சீரிய முயற்சிகளால், Antibody Drug Conjugates (நோயெதிர்ப்பி மருந்திணைமம்) எனப்படும் புற்றுசெல்களை மட்டும் தாக்கியழிக்கும் புதுவகை மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

நோயெதிர்ப்பி மருந்திணைமங்கள்

இந்த வகையான மருந்துகளை பற்றித் தெரிந்துகொள்ளும் முன்னர் ‘ஒற்றைக்குளோன் நோயெதிர்ப்பி’ எனப்படும் Monoclonal Antibody பற்றித் தெரிந்துகொள்வோம். ஒற்றைக்குளோன் நோயெதிர்ப்பி என்பது புற்றுச்செல்களிலிருந்து, ஆய்வகச்சூழலில் (குளோனிங் முறையில்) பிரித்தெடுக்கப்படும் ஒருவகை புரதம் (Protein) ஆகும். இந்தப்புரதங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், புற்றுச்செல்களை அழிக்கவல்ல வேதிமருந்தை இணைத்து நோயெதிர்ப்பி மருந்திணைமம் செய்யப்படுகிறது.

அவ்வாறு, மருந்திணைக்கப்பட்ட புரதம், புற்றுநோயாளியின் உடலுக்குள் ஊசிமூலமாகச் செலுத்தப்படும்போது, நேரடியாக மீண்டும் அதே புற்றுச்செல்களுக்கே செல்கிறது. அதாவது, புற்றுசெல்களிலிருந்தே இந்த வகைப் புரதங்கள் பிரித்தெடுக்கப்பட்டது என்பதால், நோயெதிர்ப்பி மருந்திணைமம் அந்தப் புற்றுச்செல்களை மட்டுமே நாடிச்செல்லும். புரதத்துடன் இணைந்த மருந்தானது, வெகு எளிதாக புற்றுச்செல்களுக்குள் மட்டும் உள்ளே சென்று DNA அழிப்பு, பிறழ்ச்சி (Mutation) போன்ற முறைகளில் செல்களைச் சுருக்கி அழிக்கும். இதனால், நல்ல செல்கள் குறைவாக அழிவதால், பக்கவிளைவுகள் குறைகின்றன.

நோயெதிர்ப்பி மருந்திணைமங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்றுவரை, ஏறக்குறைய பதினோரு நோயெதிர்ப்பி மருந்திணைமங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன என்பதால் 2015ஆம் ஆண்டு முதலாக இன்றுவரை பல்வேறு புற்றுநோயாளிகளின் வாழ்நாள் எண்ணிக்கை ஐந்து முதல் பத்தாண்டுகள் உயர்ந்துள்ளது. அதோடு, எண்பதுக்கும் மேலான நோயெதிர்ப்பி மருந்திணைமங்கள் கடைநிலை மருத்துவச்சிகிச்சைச் சோதனைகளில் இருக்கின்றன.

அண்மையில், அமெரிக்காவில் (Memorial Sloan Kettering Cancer Center, New York, USA) மலக்குடல்ப்புற்று (Rectal Cancer) நோயினால் பாதிக்கப்பட்ட பதினான்கு நோயாளிகளுக்கு dostarlimab-gxly என்னும் நோயெதிர்ப்பி மருந்திணைமம் (சோதனைக்காக) செலுத்தப்பட்டது. (N. Engl. J. Med. 2022, 386, pp 2363; DOI: 10.1056/NEJMoa2201445). இந்தச் சோதனையில், பதினான்கு நோயாளிகளும் 100% மலக்குடல் புற்றுநோயிலிருந்து மீண்டிருக்கின்றனர். புற்றுநோய் மருந்தாக்கத்துறையில் இதுவொரு பெருஞ்சாதனை என்பதோடு, வெவ்வேறு வகைப் புற்றுநோய்களுக்கும் நோயெதிர்ப்பி மருந்திணைம முறையில் மருந்தாக்கலாம் என்ற நம்பிக்கையை அறிவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இன்னும் 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான புற்றுநோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு புற்றுநோய்களுக்கு முடிவு கட்டப்படலாம் என்று எதிர்பார்க்கலாம்.

(முனைவர் செ. அன்புச்செல்வன், திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே தேவனூர்புதூரில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் உயிர்க்கனிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று, பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகம், போர்ச்சுகல்-இலிசுபன், இங்கிலாந்து-பர்மிங்காம் மற்றும் ஹல் பல்கலைக்கழகங்களில் புற்றுநோய் மருந்தாக்கம் மற்றும் MRI வேதியியலில் முதுமுனைவராகப் பணியாற்றியவர். ஐரோப்பிய ஆணையத்தால் வழங்கப்பெறும் மேரி-கியூரி முதுமுனைவு ஆராய்ச்சி விருதாளராகிய இவர் தற்போது பிரித்தானியாவில் Antibody Drug Conjugate Cancer Therapeutics துறையில் அறிவியலாளராகப் பணியாற்றுகிறார்.)

தயாரிப்பு: சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *