சஹ்ரான் பற்றி மூடிய அறைக்குள் நாலக டி சில்வா சொன்னது என்ன?

“முகப் புத்தகத்தில் பதிவேற்றப்பட்ட விடயங்கள் மற்றும் பரப்புரைகள் என்பவற்றைக் கண்காணித்து சஹ்ரான் ஹாசீம் என்ற நபருக்கு ஐ. எஸ். ஐ. எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகித்தேன். அவர் எதிர்காலத்தில் நாட்டுக்கு அச்சுறுத்தலான நபர் என்பது குறித்தும் ஆரம்பத்தில் அறிந்துகொண்டேன். ஆனால், அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்தமை குறித்தோ அல்லது சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தமை தொடர்பிலோ எந்த நேரடி ஆதாரங்களையும் எங்களால் கண்டறிய முடியவில்லை. ஆனால் சஹ்ரான் தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு தொடர்ச்சியாக அறிக்கை வழங்கியுள்ளேன்.”

– இவ்வாறு பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நாலக டி சில்வா நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கினார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றச் சிறப்புத் தெரிவுக் குழுவின் இரண்டாவது விசாரணை நேற்று பிற்பகல் நாடாளுமன்ற குழு அறை 3 இல் இடம்பெற்றது.

நேற்று விசாரணைக்காக பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நாலக டி சில்வா வரவழைக்கப்பட்டிருந்தார். சக்கர நாற்காலியில் அவர் வாக்குமூலமளிக்க வந்திருந்தார். அவருடனான விசாரணையில் பல்வேறு விடயங்கள் ஊடகங்கள் முன்னிலையில் தன்னால் தெரிவிக்க முடியாது என அவர் ஆரம்பத்தில் தெரிவித்ததை அடுத்து குறித்த சில கேள்விகளுக்கு மட்டும் அவர் ஊடகங்கள் முன்னிலையில் வாக்குமூலம் வழங்கினார். பின்னர் அவர் தனியாக மூடிய அறைக்குள் விசாரணைக்குழுவிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

ஊடகங்கள் முன்னிலையில் அவர் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்ததாவது:-

“சஹ்ரான் தொடர்பாகவும் தேசிய தௌஹீத் ஜமா அத் குறித்தும் 2013 – 2014 ஆம் ஆண்டுகளில் இருந்தே கண்காணிக்கப்பட்டது. சஹ்ரான் கையாண்ட முகப் புத்தகக் கணக்குகள் மற்றும் தளப்பதிவுகள் ஆகியவற்றில் அவர் பதிவேற்றிய விடயங்களை அவதானிக்கையில் அவை அடிப்படைவாத செயற்பாடுகளாக அப்போதே தெரிந்தது.

உண்மையில் தௌஹீத் ஜமா அத் ஆரம்பத்தில் மதவாத அமைப்பாக இருந்தது. பின்னர் அடிப்படைவாத அமைப்பாக செயற்பட்டுள்ளனர். பல குளறுபடிகள் காரணமாக பல்வேறு அமைப்புகளாக இவர்கள் பிளவுபட்டுள்ளனர். அவ்வாறே இவர்களை மேற்பார்வை செய்யப்பட்டது.

எவ்வாறு இருப்பினும் இவர்கள் பயங்கரவாத அமைப்பு என்பது 21 ஆம் திகதி தாக்குதலை வைத்துதானே கூறப்படுகின்றது. அதற்கு முன்னர் அவ்வாறு ஒரு செயற்பாடு இருந்ததாகக் கருதப்படவில்லை. சில சில சம்பவங்களை வைத்துக்கூற அப்போது முடியவில்லை.

காத்தான்குடிச் சம்பவத்தை அடுத்து சஹ்ரான் என்ற நபர் தேடப்பட்டு வந்தார். அப்போது சஹ்ரான் தொடர்பாக அதற்கு முன்னர் நாம் சேகரித்தும், மேற்பார்வை செய்தும் வைத்திருந்த காரணிகளும் காத்தான்குடிச் சம்பவத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் அவர் நாட்டுக்கு அச்சுறுதலான நபர் என்பதை நாம் அறிந்துகொண்டோம். அதன் பின்னர் சஹ்ரான் தேடப்படும் நபராக மாறினார்.

கிழக்கிலும் ஏனைய சில இடங்களிலும் அவர் தேடப்பட்டபோதும் அவர் தலைமறைவாக இருந்தார். ஆகவே, அவர் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம் என்ற நிலைபாட்டுக்கு வந்தோம். எனினும், சஹ்ரான் வெளிநாடு போனதற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை. கடவுச்சீட்டை விசாரணை செய்தபோதும் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டமைக்கான ஆதாரங்கள் இருக்கவில்லை. சட்டவிரோதமாக அவர் வெளிநாடு சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இந்தியாவுக்கு அவர் சென்றார் என்று கூறப்பட்ட போதும் கூட அதற்கான ஆதாரங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு சஹ்ரானைத் தேடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இவை இரகசியமாக முன்னெடுக்கப்பட்டது. சஹ்ரானுக்கே தெரியாது அவரைத் தேடும் திட்டம் இயங்கியது.

அதேபோல் சர்வதேசப் பொலிஸாரின் உதவியைப் பெற்றும்கொள்ளத் தீர்மானம் எடுக்கபட்டாலும் அதற்கு முன்னர் அறிவிப்பு விடுவிக்க வேண்டும். ஆகவே, அதனையும் கையாண்டுள்ளோம். சஹ்ரான் மட்டுமல்ல இந்த அமைப்புடன் தொடர்பில் இருந்த பலர் கண்காணிக்கப்பட்டனர்.

சஹ்ரானின் முகப் புத்தகதில் பதிவேற்றிய காணொளிகள் அவரது பரப்புரைகள் அனைத்துமே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை நியாயபடுத்தும் வகையில் அமைந்தது. அவர் ஐ. எஸ் பக்கம் சென்றுள்ளார் என்ற நிலைப்பாட்டுக்கு எம்மால் வர முடிந்தது. தவறான பாதையில் இளைஞர்களை அவர் வழிநடத்துகின்றார் என்பதும் எம்மால் கவனிக்க முடிந்தது.

அவரது பரப்புரைகள் அனைத்தும் தமிழ்மொழியில் இருந்தாலும் அவற்றைக் கண்காணிக்க எமக்கு தனிக் குழு இருந்தது. 24 மணிநேரம் அவரைக் கண்காணிக்கும் வேலைத்திட்டம் கையாளப்பட்டது. அதேபோல் சஹ்ரானின் குடும்பத்தினர் சார்ந்த தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. திறந்த பிடியாணை ஒன்று உள்ளது என்பதைக் காட்டிக்கொள்ளாது அவரைக் கண்காணித்தோம்.

சஹ்ரான் அரசியல்வாதிகளின் தொடர்பில் இருந்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அவ்வாறு இருந்ததாக நான் நினைக்கவில்லை. அது குறித்து நாம் தேடவும் இல்லை. எமது இலக்கு முழுவதும் சஹ்ரான் மீதே இருந்தது. அதேபோல் சர்வதேச நிதி வருகின்றது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் நேரடியாகத் தொடர்பில் இருந்தார் என்ற சந்தேகங்கள் இருந்தும்கூட அவை எதுவுமே ஆதாரமாக எமக்குக் கிடைக்கவில்லை.

நிதி வருகின்றமைக்கான வங்கிக்கணக்குகள் இருக்கவில்லை. அதனால் அவரை நேரடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. ஆனால், சஹ்ரான் எதிர்காலத்தில் நாட்டுக்கு அச்சுறுத்தலான நபர் என்பதை நாம் ஆரம்பத்தில் கண்டறிந்துவிட்டோம்.

இது தொடர்பாக 2017ஆம் ஆண்டு இறுதியில் இருந்து வாராந்தம் ஒரு அறிக்கையை பொலிஸ்மா அதிபருக்கு வழங்கினேன். அதற்கான சகல ஆதாரங்களும் கோப்புகளாக உள்ளன. எனினும், எதிர்பாராத நேரத்தில் என்னைக் கைதுசெய்தனர். அதன் பின்னர் எனக்கு இந்த நகர்வுகள் தொடர்பாக ஒன்றும் தெரியாது. சுமார் ஏழு மாத காலம் என்னால் இது குறித்து எதையும் அறிந்துகொள்ள முடியாது போய்விட்டது.

உண்மையில் சஹ்ரான் குறித்து நான் தனிப்பட்ட திட்டம் ஒன்றை வகுத்தேன். என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பிலும், எவ்வாறு முன்னகர்த்துவது என்பது குறித்தும் எனது மனதில் இருந்தது. அவற்றை வெளிப்படையாகக் கூற முடியாது. எனது கைதுடன் அவை அப்படியே கைவிடப்பட்டன. ஆனால், நான் கைதுசெய்யப்பட்டவுடன் விசாரணைகள் அப்படியே கைவிடப்பட்டிருக்கும் என நான் நினைக்கவில்லை.

நான் முன்னெடுத்த அளவுக்கு விசாரணைகளை கையாளப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் என் அளவுக்கு ஏனைய அதிகாரிகள் சர்வதேசப் பயங்கரவாத நகர்வுகள் குறித்து அறிந்திருக்கவில்லை. அவர்கள் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் குறித்து தேடுவதில் சிறந்தவர்களாக இருந்தாலும் இவ்வாறான ஒரு விடயம் அவர்களுக்குப் புதிது. நான் வந்தவுடன் பயிற்சிகளை வழங்கி எனது வேலையையும் செய்து கொண்டேன். எனது கைதின் பின்னர் இது குறித்து சிறைந்த விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டிருக்காது” – என்றார்.

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் மூன்றாம் விசாரணை நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் வாக்குமூலமளிக்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *