ஐந்து ஆண்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓய்வூதியம் நிறுத்தம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓய்வூதியத்தொகை பல்வேறு காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையின் போதே ஓய்வூதிய திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த ஐந்து ஆண்டுகளில் 53,813 பேரின் ஓய்வூதியத் தொகை ஓய்வூதிய திணைக்களத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலானோரின் ஓய்வூதியம் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த எட்டு மாதங்களில் 14,742 பேரின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, 2018 ஆம் ஆண்டில் 5454 பேரும், 2019 ஆம் ஆண்டில் 5570 பேரும், 2020 ஆம் ஆண்டில் 6155 பேரும், 2021 ஆம் ஆண்டில் 8949 பேரும், 2022 ஆம் ஆண்டில் 12,943 பேரும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஓய்வூதியம் தற்காலிகமாக இடைநிறுத்தம், மறுமணம், வசிப்பிடத்தை உறுதிப்படுத்தாமை, பாதுகாவலர் மாற்றம், உள் தணிக்கை அறிவிப்பின் பேரில், சார்புடையவர்களை மாற்றுதல், மீண்டும் பணிக்கமர்த்தல், அதிக பணம் செலுத்துதல், விளக்கமறியல், நேர்காணலுக்கு சமூகமளிக்காமை, ஆயுள் சான்றிதழ் பெறாமை, ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஓய்வூதியத்தை நிறுத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகளில் 12,944 வெளிநாட்டு ஊழியர்களின் ஓய்வூதியத்தை ஓய்வூதிய திணைக்களம் நிறுத்தியுள்ளது.

அதன்படி, 2018 ஆம் ஆண்டில் 1289, 2019 ஆம் ஆண்டில் 937, 2020 ஆம் ஆண்டில் 95, 2021 ஆம் ஆண்டில் 2490, 2022 ஆம் ஆண்டில் 4108, 2023 ஆம் ஆண்டில் 3,825 பேருக்கான ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *