போப் பிரான்சிஸ் மற்றும் பழமைவாத கிறிஸ்தவர்கள் இடையே வலுக்கும் மோதல்

போப் பிரான்சிஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் சக்திவாய்ந்த தீவிர பழமைவாத மதகுருமார்களுக்கு இடையேயான பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

தனது நிர்வாகத்தை வெளிப்படையாக விமர்சிக்கும் ஓய்வுபெற்ற அமெரிக்க கார்டினல் ரேமண்ட் லியோ பர்க்கை வத்திக்கானில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்ற இந்த வாரம் போப் பிரான்சிஸ் முடிவு செய்தார் .

அவரது அணுகுமுறைகள் மற்றும் சீர்திருத்தங்களை எதிர்த்த மற்றொரு கடுமையான விமர்சகரும், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டைலர் மறை மாவட்டத்தின் பிஷப்பாக இருந்த ஜோசப் ஸ்ட்ரிக்லேண்டை நீக்கிய மூன்று வாரங்களுக்குப் பிறகு அவர் அந்த முடிவை எடுத்தார்.

இந்த இரண்டு நடவடிக்கைகளும் கத்தோலிக்கத் திருச்சபையில் மிகவும் வெளிப்படையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பார்வையை ஊக்குவிக்கும் போப் ஆண்டவரின் கருத்தியல் போராட்டத்தில் மற்றொரு திருப்பத்தை பிரதிபலிக்கின்றன.

கத்தோலிக்கத் திருச்சபையின் பாரம்பரியக் கோட்பாடுகளைக் கண்டிப்பாகச் செயல்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ள தீவிரப் பழமைவாதக் கருத்தியல்வாதிகள் போப்பின் நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகவில்லை.

இதற்குப் பின்னால் என்ன நடந்தது என்பதை பகுப்பாய்வு செய்வோம்.

  • போப் பிரான்சிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

போப் பிரான்சிஸ் கத்தோலிக்க மதக் கோட்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக பழமைவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர்

கார்டினல் ரேமண்ட் பர்க் செய்த விமர்சனம்

கத்தோலிக்க திருச்சபையில் ஒரு செல்வாக்கு மிக்க நபரான ரேமண்ட் பர்க், போப் பிரான்சிஸை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக விமர்சித்து வந்தார். திருச்சபையின் தீவிர பழமைவாத எதிர்ப்பின் மைய நபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

போப் பிரான்சிஸின் பல்வேறு முன்முயற்சிகளுக்கு, குறிப்பாக முற்போக்கான சீர்திருத்தங்களை ஆதரிப்பவர்களுக்கு அவர் குரல் கொடுத்ததை அவர் விமர்சித்தார்.

அதே போல் திருச்சபைக் கோட்பாடு மற்றும் நடைமுறையில் போப்பின் முற்போக்கான அணுகுமுறையுடன் அவர் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். இவை சமீபத்திய ஆண்டுகளில் பதட்டத்திற்கு முக்கிய ஆதாரங்களாக இருந்தன.

  • போப் பிரான்சிஸ்

பட மூலாதாரம்,REUTERS  கத்தோலிக்கத் திருச்சபையில் ஒரு செல்வாக்கு மிக்க நபரான ரேமண்ட் பர்க், பல சந்தர்ப்பங்களில் போப் பிரான்சிஸை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்

யார் இந்த கார்டினல் ரேமண்ட் பர்க்?

75 வயதான ரேமண்ட் பர்க், ஓரின ஈர்ப்பாளர் சமூகத்தின் மீதான கிறித்தவத் திருச்சபையின் தற்போதைய நிலைப்பாடு குறித்து விமர்சித்து வருகிறார்.

பிரான்சிஸ் போப்பாக பொறுப்பேற்றுக்கொண்ட பின் இதனை வெளிப்படையாக எதிர்த்துவந்தார்.

இதேபோல் திருச்சபை விவகாரங்களில் பாமரர்களின் பங்கு குறித்த பிரச்சினைகளில் வத்திக்கானின் அணுகுமுறையை வெளிப்படையாக தொடர்ந்து எதிர்த்துவந்தார்.

திருச்சபையின் நிறுவப்பட்டத் தலைமையை ஏற்க வெளிப்படையாக மறுக்கும் தீவிர பழமைவாத கத்தோலிக்க இயக்கங்களிலும் அவர் இணைந்து பணியாற்றிவருகிறார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், பிரான்சிஸ் அவரை வத்திக்கான் குடியிருப்பில் இருந்து வெளியேற்றவும், அவரது சம்பளத்தை ரத்து செய்யவும் முடிவு செய்தார். இது அர்ஜென்டினாவைச் சேர்ந்த போப் பிரான்சிஸின் பதவிக்காலத்தில் மிகவும் அதிரடியான நடவடிக்கையாகும்.

கத்தோலிக்கத் திருச்சபையில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க இறையியலாளர் மற்றும் நியதி வழக்கறிஞரான டான் கோல்ட்ஸ்டைன், “பிரான்சிஸை விமர்சித்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, போப்பின் உயர்ந்த தார்மீக அதிகாரியாக தன்னை நிலைநிறுத்த முயன்ற பிறகு ரேமண்ட் பர்க் தண்டிக்கப்பட்டார்,” என்று பிபிசி முண்டோவிடம் கூறினார்.

வத்திக்கானின் முக்கிய நபராக உள்ள ஒருவர், அவர் பங்கிற்கு, இந்த முடிவு தனிப்பட்ட தண்டனை அல்ல என்றும், திருச்சபையின் தலைவரை விமர்சிக்கும் போது ஒரு நபர் கார்டினலுக்கான சலுகைகளை அனுபவிக்கக்கூடாது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலானது என்றும் விளக்கினார்.

பிஷப் ஸ்ட்ரிக்லேண்ட் மீதான நடவடிக்கை

நவம்பர் 11-ஆம் தேதி, டெக்சாஸ் மாகாணத்தின் டைலர் மறைமாவட்டத்தின் பிஷப் ஜோசப் இ ஸ்ட்ரிக்லேண்ட், வத்திக்கான் விசாரணையைத் தொடர்ந்து ராஜினாமா செய்ய மறுத்ததால், போப் பிரான்சிஸ் அவரை பதவியில் இருந்து நீக்கினார்.

ஸ்டிரிக்லேண்டின் நிதி நிர்வாகத்தில் முறைகேடுகளை கண்டறிந்த விசாரணையின் இறுதியில், அவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்ற முடிவை வத்திக்கான் எடுத்திருந்தது.

  • போப் பிரான்சிஸ்

பட மூலாதாரம்,REUTERS

ஸ்ட்ரிக்லேண்ட் தனது மறைமாவட்டத்தைத் தவறாக நிர்வகித்தது மட்டுமின்றி போப் பிரான்சிஸ்க்கு எதிரான விமர்சனங்களையும் முன்வைத்துவந்தார்.

“குற்றம் எதுவும் கண்டறியப்படவில்லை, தவறான நிர்வாகம் மட்டுமே இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. வேறு எந்த பிஷப் இந்த இடத்தில் இருந்திருந்தாலும், அவர் நீக்கப்பட்டிருக்க மாட்டார்,” என்கிறார் கோல்ட்ஸ்டைன்.

பொதுவான கருத்து என்னவென்றால், பிஷப் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு அவர் மீதான குற்றச்சாட்டு காரணமாக அமையவில்லை என்றும், போப் பிரான்சிஸை அவர் எதிர்ப்பது தான் காரணம் என்றும் இறையியலாளர்கள் கூறுகின்றனர்.

“ஸ்டிரிக்லாண்ட் தனது மறைமாவட்டத்தை தவறாக நிர்வகிப்பது மட்டுமல்லாமல், அவர் இணையத்தில் அதிக நேரம் செலவழித்து, போப்பைப் புறக்கணிக்குமாறு விசுவாசிகளிடம் வேண்டுகோள்களை விடுத்துக்கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், அப்போஸ்தலர்கள் மூலம் ஏசுநாதர் வெளிப்படுத்திய நம்பிக்கைகளை குறைத்து மதிப்பிட்டதாகவும் போப் மீது குறைகூறிக்கொண்டிருந்தார்,” என்று இறையியலாளர் கோல்ட்ஸ்டைன் விளக்குகிறார்.

இது குறித்து கோல்ட்ஸ்டைன் வாதிடுகையில், அத்தகைய குற்றச்சாட்டைச் சொல்வது “போப்பைப் பொறுத்தவரை பிளவுகளை ஏற்படுத்துவதாகும்,” என்கிறார்.

“மேலும், அவர் ஒரு மோசமான நிர்வாகியாக இருந்தது, அவரை வெளியேற்ற போப் பிரான்சிஸின் நடவடிக்கைக்கு ஒரு தூண்டுகோலாக இருந்தது என்பது முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கது,” என்று அவர் கூறுகிறார்.

2012-இல் மறைந்த போப் பெனடிக்ட்டால் நியமிக்கப்பட்ட ஸ்டிரிக்லேண்ட், கருக்கலைப்பு, திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் போன்ற சமூகப் பிரச்னைகளில் திருச்சபையின் நிலைப்பாட்டைப் புதுப்பிக்கும் போப் பிரான்சிஸின் முயற்சிகளுக்கு எதிராக தொடர்ச்சியான கருத்துக்களை முன்வைத்து வந்தார்.

திருச்சபை சமூக ஊடகங்களை, அவர் வத்திக்கானின் தற்போதைய தலைவருடன் தனது கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்த ஒரு தளமாக அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்.

இந்த வாரம்தான், அவர் தனது சொந்த யூடியூப் சேனலைத் தொடங்குவதாக அறிவித்திருந்தார். அதில் அவர் கத்தோலிக்க மதத்தைப் பற்றிய தனது கருத்துக்களைப் பெருக்க முயற்சிக்கப்பபோவதாகவும் கூறிவந்தார்.

நிர்வாக ரீதியான நடவடிக்கைகள்

கர்தினால் ரேமண்ட் பர்க் மற்றும் ஸ்டிரிக்லேண்டுடன் போப் பிரான்சிஸ் மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் நிர்வாக ரீதியானவையே தவிர இருவரின் மீதான குற்றச்சாட்டினால் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

“ஆனால் இருவரும் ஒரு பிஷப்பிற்கு தகுந்தாற்போல் செயல்படவில்லை என்பதை தங்கள் தனிப்பட்ட வழியில் நிரூபித்துள்ளனர். அவர் போப் உடன் இணைந்து செயல்படவேண்டும் என்பது தான் நடைமுறையே ஒழிய, அவருக்கு எதிராக ஒருபோதும் செயல்பட முடியாது,” என்று கோல்ட்ஸ்டைன் கூறுகிறார்.

மேலும் அவர் பேசும் போது, “போப்பின் கீழ் உள்ள திருச்சபையின் ஒற்றுமைக்காக, ஒவ்வொரு பிஷப்பின் மனந்திரும்புதலும் பணிவும் தான் சிறந்த பதிலாக இருக்கமுடியும். ஆனால் அது உண்மையில் நடக்குமா இல்லையா என்பது ரேமண்ட் பர்க் மற்றும் ஸ்டிரிக்லேண்டின் விருப்பங்களில் தான் உள்ளது,” என்றார்.

  • போப் பிரான்சிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தவறான நிர்வாகம் என்பதற்காகவே நடவடிக்கை மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், அதே இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கமாட்டார் என இறையியலாளர்கள் கூறுகின்றனர்

அமெரிக்காவை விமர்சித்த போப் பிரான்சிஸ்

எப்படியிருந்தாலும், போப் பிரான்சிஸ் கத்தோலிக்க திருச்சபையின் தீவிரப் பழமைவாதப் பிரிவுகளுக்கு தனது எதிர்ப்பை மேலும் மேலும் வெளிப்படையாகக் காட்டியுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் லிஸ்பனில் (போர்ச்சுகல்) கத்தோலிக்க இளைஞர்கள் கூட்டத்தில் ஜேசுயிட்டுகளுடனான சந்திப்பின் போது போப் ஆண்டவர் அமெரிக்காவில் செயல்படும் கத்தோலிக்கத் திருச்சபையின் கடுமையான போக்கை நேரடியாக சுட்டிக்காட்டி பேசினார்.

“அமெரிக்காவில் நிலைமை எளிதானது அல்ல. மிகவும் வலுவான பிற்போக்கு மனப்பான்மை அங்கே காணப்படுகிறது,” என்று அவர் அப்போது கூறினார்.

“நீங்கள் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளீர்கள், அங்கே ஒரு கடுமையான நடைமுறைகளை உணர்ந்ததாகச் சொல்கிறீர்கள். ஆம், சில சூழ்நிலைகளில் இந்த கடுமையைக் காண முடியும்,” என்று அவர் அங்கிருந்தவர்களிடம் கூறினார்.

“நம்பிக்கை மற்றும் ஒழுக்கம் பற்றிய வாதவிவாதங்களைப் புரிந்துகொள்வதில் பரிணாமம் மாறிவருகிறது,” என்றதுடன், இது போன்ற நிலையில், பின்னோக்கிச் செல்வது ‘பயனற்றது’ என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் தன்னை விமர்சிப்பவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

உதாரணமாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சில போப் ஆண்டவர்கள் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வகையான கருத்துக்கள், திருச்சபையின் தீவிர பழமைவாதிகள் மத்தியில், அதன் தலைமையின் மீது வெளிப்படையான எதிர்ப்பை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும் ஆழமான அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பழமைவாதிகளின் கடும்போக்கு

போப் பிரான்சிஸ் நடவடிக்கை மேற்கொண்ட கார்டினல் மற்றும் பிஷப் இருவரும் அமெரிக்காவில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்குள் பெருகிய முறையில் சக்திவாய்ந்த பழமைவாதிகளாக இருந்துள்ளனர்.

33 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் அமெரிக்காவில், கத்தோலிக்கர்கள் ஏறக்குறைய 20% மக்கள் தொகையாக இருக்கின்றனர். ஆய்வுகளின்படி, முற்போக்கான நிலைப்பாடுகளைக் கொண்ட விசுவாசிகளின் எண்ணிக்கைக்கும் பழமைவாத கருத்துக்களைப் பாதுகாப்பவர்களுக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட சமநிலை உள்ளது.

அமெரிக்கத் திருச்சபை படிநிலையானது 16 கார்டினல்கள் உட்பட 434 செயலில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற பிஷப்புகளால் ஆனது.

மேலும், அமெரிக்காவின் கத்தோலிக்கத் திருச்சபையின் உயர் கட்டளை, அர்ஜென்டினாவைச் சேர்ந்த போப் பிரான்சிஸின் தலைமை அறிமுகப்படுத்தும் சீர்திருத்தங்களை எதிர்த்து வருகிறது.

திருச்சபை வழிபாட்டு முறை மற்றும் அறநெறியில் சீர்திருத்தம் செய்வதற்கான வத்திக்கானின் முயற்சிகளை அமெரிக்கத் திருச்சபையின் உயர் கட்டளை தீவிரமாக எதிர்த்து வருகிறது.

“பிரான்சிஸை எதிர்ப்பவர்கள் பெரும்பான்மையானவர்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் அதிக அதிகாரம் கொண்டவர்கள் என்பதுடன், பல ஆண்டுகளாக அமெரிக்க ஆயர்களைக் கட்டுப்படுத்தும் இடத்தில் இருந்து வருகின்றனர்,” என்று டான் கோல்ட்ஸ்டைன் கூறுகிறார்.

  • போப் பிரான்சிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவில் உள்ள அல்ட்ராகன்சர்வேடிவ் கத்தோலிக்கர்கள் கருக்கலைப்பு மற்றும் ஒரே பாலின திருமணத்தை தீவிரமாக எதிர்க்கின்றனர்

அமெரிக்கத் திருச்சபையின் நிலைப்பாடு

இந்த ‘அல்ட்ராகன்சர்வேடிவ்கள்‘ பாலியல், ஒரே பாலின திருமணம், பிறப்பு கட்டுப்பாடு மற்றும் கருக்கலைப்பு போன்ற பிரச்சினைகளில் பழமைவாதக் கருத்துக்களை மட்டுமே ஆதரிக்கின்றனர்.

மேலும், அவர்கள் பாரம்பரியமாக போப்பின் அதிகாரத்தை ஆதரித்தாலும், பல ஆண்டுகளாக அவர்கள் மிகவும் தாராளவாதமாக கருதும் அணுகுமுறைகளுக்காக — குறிப்பாக LGTBQIA சமூகத்தை ஏற்பது போன்ற சமகால சமூக யதார்த்தங்களைத் தழுவுவது — திருச்சபையின் தலைவர் மீது தங்கள் விமர்சனங்களை எழுப்பிவருகின்றனர்.

காலநிலை மாற்றம், குடியேற்றம், சமூக நீதி, துப்பாக்கிக் கட்டுப்பாடு மற்றும் மரண தண்டனை போன்ற விஷயங்களிலும் அவர்கள் பிரான்சிஸிடமிருந்து வேறுபடுகிறார்கள்.

கோல்ட்ஸ்டைன், இது வர்த்தக உலகில் பெரும்பாலானோரின் ஆதரவுடன் செயல்படும் மிகவும் சக்திவாய்ந்த குழுவாகும் என்றும், போப்பைப் பற்றிய கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை விரிவுபடுத்தும் பரந்த ஊடக வலையமைப்பைக் கட்டுப்படுத்துகிறது என்றும் விளக்குகிறார்.

“பல ஆண்டுகளாக, குறிப்பாக அமெரிக்காவில், அவர்களின் ஊடகங்கள் கத்தோலிக்கர்களின் பேச்சாளர்களாகவும், அவர்களின் கதைகள் அங்கீகரிக்கப்பட்ட கதைகளாகவும் இருக்கிறது,” என்று இறையியலாளர் கோல்ட்ஸ்டைன் கூறுகிறார்.

மற்ற பிரச்சினைகளுக்கு மத்தியில், கருக்கலைப்பு குறித்த சர்ச்சை அமெரிக்கக் கத்தோலிக்க உயரடுக்குகளை தீவிரமானவர்களாக மாற்றி வருகிறது என்று அவர் வாதிடுகிறார்.

கத்தோலிக்கத் திருச்சபை ஒட்டுமொத்தமாக தன்னை ‘ஒரு சார்பானது’ அல்லது கருக்கலைப்புக்கு எதிரானது என்று அறிவிக்கும் அதே வேளையில், பெண்களின் தேர்வு உரிமைக்குச் சாதகமான கருத்தியல் நிலைப்பாடு அமெரிக்க ஜனநாயகக் கட்சியால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கோல்ட்ஸ்டைனின் கூற்றுப்படி, பழமைவாதக் குடியரசுக் கட்சி தன்னை கத்தோலிக்கர்களின் பாதுகாவலராக நிலைநிறுத்தவும், தீவிர பழமைவாத பிஷப்புகளின் ஆதரவுடன், திருச்சபையின் முக்கிய அரசியல் கூட்டாளியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்பதுடன், இரு கருத்தியல்வாதிகளின் தார்மீக நிலைகள் மற்றும் சித்தாந்தத்தை சீரமைக்க உதவியது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *