இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களை இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்க வேண்டும் என உத்தரவு!

 

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களை இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கரூர் – இரும்பூதிப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த டி.கணேசன் என்பவர் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

மனுதாரர் இந்திய குடியுரிமைக்காக தாக்கல் செய்துள்ள ஆவணங்கள், மனுதாரர் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க போதுமானதாக இல்லை என மத்திய உள்துறை செயலாளர் கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி தீர்ப்பளித்தார்.

இந்த உத்தரவை இரத்து செய்து தன்னையும், தனது குடும்பத்தினரையும் இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்கக் கோரி கணேசனால் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களில் பெரும்பாலானோர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்வதாகவும், தமிழகத்திலிருந்து 19 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு சென்றவர்கள் அந்நாடு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து நாடற்றவர்களாக மாறி விட்டதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வாழும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களின் நலன் தொடர்பில் இந்தியா, இலங்கை இடையே 03 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், 1964 ஆம் ஆண்டில் முதல் ஒப்பந்தத்தில் இலங்கையிலிருந்து 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை இந்தியாவிற்கு திரும்ப அனுப்பி, அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனவும்,

1974 ஒப்பந்தத்தில் ஒன்றரை இலட்சம் பேரில் 50 சதவீதம் பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கும் இணக்கப்பாட்டிற்கு அமைய, 75,000 பேரை இந்தியாவிற்கு திரும்ப அனுப்பி, இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பும் 6 இலட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதுவரை 4,61,639 பேரின் இந்திய குடியுரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, மனுதாரர் தரப்பில் பல்வேறு நியாயங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன், இந்திய குடியுரிமையை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடவில்லை எனவும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருப்பதை நிறைவேற்ற வேண்டுமென்றே வலியுறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *