உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் உள்நாட்டு அரசியல் சக்திகள் தொடர்பு! 53% இலங்கையர்கள் நம்பிக்கை!!

 

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன், உள்நாட்டு அரசியல் சக்திகள் தொடர்புபட்டுள்ளதாக இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர், அதாவது 53 வீதமானோர் நம்புவதாக கருத்துக்கணிப்பில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.

Verité Research நிறுவனமும், Vanguard Survey நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் வௌிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வின் போது, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் உள்நாட்டு அரசியல் சக்திகளுக்கு தொடர்புள்ளதாக 53 வீதமானோர் நம்புவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் 30 வீதமானோர் உள்நாட்டு அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உள்ளூர் அரசியல் சக்திகள் மற்றும் ஆபத்தான வௌிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால் 2019 ஏப்ரல் 21 தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நம்புவதாக 23 சதவீதமானோர் கூறியுள்ளனர்.

உள்நாட்டு அரசியல் சக்திகளின் தலையீடு இன்றி இது மேற்கொள்ளப்பட்டதாக 8 சதவீதமானோர் மாத்திரமே நம்புகின்றனர்.

39 வீதமானோர் இது தொடர்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறியுள்ளனர்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் கொல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *