ரணில், மைத்திரி ஆட்சியில் பொருளாதாரம் மோசமடைந்ததாக மஹிந்த குற்றச்சாட்டு!

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான வீழ்ச்சியை சந்தித்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் காரசாரமான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. மத்திய வங்கியின் அறிக்கைகளின்படி, நான் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒன்பது வருட காலப்பகுதியில் 2006 முதல் 2009 வரையிலான நான்கு வருட யுத்தத்தின் போது இலங்கையின் சராசரி வருடாந்த பொருளாதார வளர்ச்சி 6 வீதமாக இருந்தது.

2010 முதல் 2014 வரையிலான போருக்குப் பிந்தைய ஐந்து ஆண்டுகளில், இது 6.8% ஆக அதிகரித்துள்ளது. இந்த தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு வருமானம் 2005 ஆம் ஆண்டின் இறுதியில் 1,242 அமெரிக்க டொலர்களில் இருந்து 2014 ஆம் ஆண்டின் இறுதியில் 3,819 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது மூன்று மடங்கு அதிகரிப்பாகும்.

1948 முதல் 2005 வரை இலங்கையை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களின் பங்களிப்பையும் விட இந்த நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு வருமானத்தை அதிகரித்தில் எனது அரசாங்கத்தின் பங்களிப்பு இரண்டு மடங்கு அதிகம்.

கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதாரச் சுருக்கம் காரணமாக, 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு வருமானம் 3,474 ஆகக் குறைந்தது.

2005 ஆம் ஆண்டின் இறுதியில் ஆண்டின் வருமானத்தில் 90 வீத அரச வருமானம் இலங்கையின் கடனை செலுத்தவே செலவிடப்பட்டது. ஆனால், 2014 ஆம் ஆண்டின் இறுதியில் 69 வீதமே கடன் செலுத்த தேவைப்பட்டது.

2005 ஆம் ஆண்டின் இறுதியில் 1,922 ஆக இருந்த அனைத்து பங்கு விலைக் குறியீடும் 2014 ஆம் ஆண்டின் இறுதியில் 7,299 ஆக உயர்ந்துள்ளது.

புலிகளுடனான போர், 2007 இல் உலகளாவிய உணவு நெருக்கடி மற்றும் 2008-2009 உலக நிதி நெருக்கடி ஆகியவற்றின் மத்தியிலேயே பொருளாதார வளர்ச்சியை அடைய முடிந்தது.

இந்த காலக்கட்டத்தில் கச்சா எண்ணெய் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருந்தது.

2015 மற்றும் 2019 க்கு இடையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு வெளிப்புற காரணங்கள் எதுவும் இல்லை. இந்த காலகட்டத்தில் நமது அண்டை நாடுகள் அனைத்தும் தீவிரமான பொருளாதார வளர்ச்சியை அடைந்திருந்தன.

அதே காலகட்டத்தில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் சராசரி பொருளாதார வளர்ச்சி 7 வீதத்துக்கும் அதிகமாகக் காட்டியது. மாலைத்தீவின் சராசரி பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 வீதமாக இருந்தது. ஆனால், இலங்கையின் சராசரி பொருளாதார வளர்ச்சி 3.5 வீதமாக இருந்தது.

இது 2021 இல் பதிவுசெய்யப்பட்ட வளர்ச்சி விகிதத்தைப் போன்றது. 2021ஆம் ஆண்டு கொவிட் தொற்றுநோய் உச்சம் தொட்ட ஆண்டாகும்.

2015 மற்றும் 2019 க்கு இடையில், சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் மூலம் தாங்க முடியாத அளவு வெளிநாட்டு வர்த்தகக் கடன் திரட்டப்பட்டமை, அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட மிக மோசமான பாதிப்பாகும்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *