சஜித் அணியில் தயாசிறி மற்றும் ரொஷான்?
அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி தயசேகர ஆகியோர் விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொள்ள கூடுமென அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவிருந்த ரொஷான் ரணசிங்க, நேற்றைய தினம் அமைச்சரவை கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அமைச்சுப் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களாக இவர் இலங்கை கிரிக்கெட் சபையில் நிலவிய ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன், நிர்வாக சபையை பாராளுமன்றத்தின் அனுமதியுடன் நீக்க இடைக்கால நிர்வாக சபை ஒன்றையும் ஸ்தாபித்திருந்தார்.
இவரது சில நடவடிக்கைகளால் ஆளுங்கட்சிக்குள் கடும் எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிட்டது. இவர் விரைவில் எதிர்க்கட்சியில் இணைந்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தகவல் அறியும் வாட்டரங்களில் அறிய முடிந்தது.
இதேவேளை, சு.கவின் உறுப்புரிமை பறிக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ள கூடுமென தெரிய வருகிறது.
இந்நிலையில், பல அரசியல் கட்சிகளுடன் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணி ஜனவரி நடுப்பகுதியில் உருவாக்கப்படும். ஆளும் கட்சியின் தற்போதைய அமைச்சர்கள் பலர் புதிய கூட்டணியில் இணையவுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.