மஹிந்த கௌரவமாக வெளியேற வேண்டும் இறுதி எச்சரிக்கையை விடுத்தார் விமல்!

” 2015 ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, கௌரவமான முறையில் மஹிந்த ராஜபக்ச வெளியேறினார். அதனால்தான் மக்கள் அவரை மறுபடியும் ஆதரித்தார்கள். எனவே, மக்கள் விரட்டும்வரை காத்திருக்காமல், பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும். “

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை முன்வைத்து நிறைவேற்றிக்கொள்ளும் நடைமுறையென்பது சவாலுக்குரிய விடயமாகும். எனவேதான், புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைத்து, நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம். அதற்கு பிரதமர் பதவி விலக வேண்டும். புதிய பிரதமர் தலைமையில் நாட்டு மக்கள் ஏற்கும் அரசு அமைய வேண்டும்.

இந்த நோக்கில்தான் 11 கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினர். அடுத்த சுற்று பேச்சு நடத்தப்படுவதற்குள் எமது அணியில் உள்ள உறுப்பினரை விலைக்கு வாங்கிவிட்டனர். இந்த சில்லறைத்தனமான அரசியலை பஸில் ராஜபக்ச தனது சகாக்கள் ஊடாக ஆரம்பித்துள்ளார். ராஜபக்சக்களின் இந்த சலுன் கதவு விளையாட்டு எடுபடாது. உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது.

எனவே, சாந்த பண்டாரவுக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சு பதவியை ஜனாதிபதி உடன் பறித்து, அவரை அரசியல் ரீதியில் அநாதையாக்க வேண்டும். அதனை செய்தால் நாளை வேண்டுமானாலும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தயார். ஆனால் தொடர்ந்து அடம்பிடித்துக்கொண்டிருந்தால் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *