பாலத்தீனர்கள் சாவிகளை கையில் ஏந்தி போராடுவது ஏன்?

அவை சாதாரணமான மற்றும் கனமான தன்மையில் இருந்தன. அவற்றில் சில துருப்புடித்தும் இருந்தன. ஆனால், அவை வெறும் உலோக துண்டுகள் மட்டும் கிடையாது.

ஒவ்வொரு ஆண்டின் ‘நக்பா தினத்தின்’ போதும் பாலத்தீனர்கள் தங்களின் மிகவும் மதிப்புமிக்க நினைவு சின்னங்களான அவற்றை வீதிகளுக்கு எடுத்து வருகிறார்கள்.

அவற்றை தலைமுறை தலைமுறையாக அவர்கள் பாதுகாத்து வருகின்றனர். அந்த சாவிகள் 75 வருடத்திற்கு முன்பு எந்த வீட்டிலிருந்து அவர்கள் வெளியேற்ற பட்டார்களோ அந்த வீட்டிற்குச் சொந்தமானது ஆகும். அதற்கு பின் அவர்களால் அந்த வீடுகளுக்கு திரும்பிச் செல்லவே முடியவில்லை.

லுப்னா சோமாலி மேற்கு கரையில் உள்ள குடியுரிமை மற்றும் அகதிகள் உரிமைக்கான பாலத்தீன மையத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் ஆவார்.

“தங்களது வீடுகளுக்கு திரும்பி செல்வோம் என்ற ஆசை மற்றும் நம்பிக்கையோடும், அவற்றின் நினைவு சின்னங்களாகவும் அந்த மக்கள் அதன் சாவிகளை எடுத்து வந்ததாக” பிபிசியிடம் கூறினார் அவர்.

சாவிகளைக் கையில் ஏந்திப் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சொந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதன் நினைவாக சாவிகளுடன் போராடும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.

“இன்னும் அந்த வீடுகள் இருக்கின்றனவா அல்லது அழிந்து விட்டனவா என்பது முக்கியமில்லை. சர்வதேச சட்டம் வீடுகளுக்கு திரும்புவதற்கான உரிமையை அவர்களுக்கு அளித்துள்ளது” என்கிறார் அவர்.

1948 மே 14ம் தேதி பிரிட்டிஷிடமிருந்து விடுதலையான அடுத்த நாளே போரை அறிவித்தது இஸ்ரேல். இந்த அரபு-இஸ்ரேலி போரின்போது 7,50,000க்கும் மேற்பட்ட பாலத்தீன மக்கள் வெளியேறினர் அல்லது தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த போர் 15 மாதங்களுக்கு நீடித்தது.

அரபு மக்கள் இதை ‘நக்பா’ அல்லது ‘பேரழிவு’ என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மே 15-ஆம் தேதி இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்வுகளில் சாவிகள் பெரும் பங்கை வகிக்கின்றன.

இஸ்ரேலாக மாறிய பாலத்தீன பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வீரர்கள் தங்களை வெளியேற்றியதாக குற்றம் சாட்டுகின்றனர். இவர்கள் அதற்கு பிறகு திரும்பி செல்வதற்கு அனுமதிக்கப்படவே இல்லை.

  • சாவிகளைக் கையில் ஏந்திப் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாலத்தீனத்தின் 80 சதவீத மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் சொல்ல வேண்டியது என்ன?

இஸ்ரேலை சேந்த அதிகாரிகள் இதை மறுக்கின்றனர்.

புதிதாக உருவாகியுள்ள நாடான இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பிறகு ஏற்படும் எதிர் விளைவுகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரபு நாடுகள்தான் பாலத்தீனர்களை அவர்களின் நிலம் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற அறிவுறுத்தியதாகக் கூறுகின்றனர்.

தற்போதைய நிலையில் ஐக்கிய நாடுகள் சபை தோராயமாக 60 லட்சம் பாலத்தீன அகதிகள் இருப்பதாக அங்கீகரித்துள்ளது. இவர்களில் பலரும் ஜோர்டான், காஸா, மேற்கு கரை, சிரியா, லெபனான் மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய நகரங்களில் உள்ள முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

“அப்போது பாலத்தீனர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியது. அவர்கள் கைகளில் கிடைத்ததை எடுத்து கொண்டு வெளியேறினார்கள். குறிப்பாக, அவர்களது சாவிகளையும் சேர்த்துதான் எடுத்துச் சென்றார்கள்” என்று கூறுகிறார் சோமாலி.

போர் முடிந்ததும் மீண்டும் வீடுகளுக்கு வந்து விடலாம், தங்களது வாழ்க்கையை மீண்டும் தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் தங்களது வீடுகளை பூட்டி விட்டு சென்றனர். ஆனால், அது நடக்கவே இல்லை.

  • சாவிகளைக் கையில் ஏந்திப் போராட்டம்

பட மூலாதாரம்,COURTESY OF MOHAMED KAYYA

பல நேரங்களில், பாலத்தீன கவிஞர் மஹ்மூத் தர்வீஷின் பிறந்த ஊரான அல்-பிர்வா கிராமத்திற்கு ஏற்பட்ட அதே நிலைமைதான் பிற இடங்களுக்கும் ஏற்பட்டது. அங்கு திரும்புவதற்கு கூட எதுவுமே இல்லாத வகையில் அழிக்கப்பட்டது.

ஜூன் 11-ஆம் தேதி இஸ்ரேலிய படைகள் அல்-பிர்வாவுக்கு வந்திறங்கிய போது 10 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் 1500 மக்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். ஆனால், ஒருகாலத்தில் இங்கிருந்த பள்ளி மட்டுமே தற்போது நின்று கொண்டிருக்கிறது.

கலிலீயில் உள்ள அல் மக்கரில் வசித்து வரும் முகமத் கயலின் குடும்பமும் அல்-பிர்வாவில் இருந்து வெளியேறியதுதான்.

ராணுவ வீரர்கள் அங்கு வந்தபோது, தன்னுடைய பெற்றோர்கள் கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு பக்கத்து நகரத்திற்கு சென்றதாகவும், அங்கு தனது தாத்தா பாட்டி மற்றும் மூத்த சகோதரர்களுடன் ஆலிவ் மரங்களின் அடியில் வாழ்ந்து வந்ததாகவும் பிபிசியிடம் யுதேடியில் தனது வீட்டிலிருந்தபடி கூறியுள்ளார் முகமத்.

அவரின் பெற்றோர்கள் அப்துல் ராசிக் மற்றும் அமினா அல்-பிர்வாவில் நிறைய நிலங்களை வைத்திருந்ததாகவும், அவர்களின் தோட்டத்தில் பழ மரங்கள், ஆலிவ் மரங்கள் மற்றும் இதர பயிர்களை வளர்த்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

அப்போது தாங்கள் எந்த குறையும் இல்லாத நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக கூறுகிறார் பத்திரிக்கையாளரும், மொழிபெயர்ப்பாளருமான கயல்.

அந்தக் காலத்தில் அரபு நட்சத்திரங்களாக இருந்த உம்மு குல்ஜூம் அல்லது முகமது அப்தெல் வஹாப் போன்றவர்களின் படங்கள் அல்லது நிகழ்ச்சிகளை காண ஹைஃபா சென்று வந்தது தனக்கு ஞாபகம் இருப்பதாக அவர் கூறுகிறார்.

ஆனால், அந்த வசதியான வாழ்க்கை ஒரே இரவில் முடிவுக்கு வந்தது.

“அங்கு வெறும் 50 மக்கள் மட்டுமே எஞ்சியிருந்ததாக” கூறுகிறார் கயல். அவர்கள் அங்கிருந்த தேவாலயத்தில் பாதிரியாருடன் இருந்ததாகவும், சில நாட்கள் கழித்து அவர்களும் வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

பல ஆண்டுகளாக முதலில் ஒரு ட்ரூஸ் குடும்பம், அடுத்து கிறிஸ்தவ குடும்பம் இறுதியாக இஸ்லாமிய குடும்பத்தால் வரவேற்கப்பட்ட பக்கத்து கிராமங்களில் இருந்து கயல் குடும்பம் தனது யாத்திரையை தொடங்கியது.

  • சாவிகளைக் கையில் ஏந்திப் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வீட்டில் இருக்கும் பாலத்தீனப் பெண் ஒருவர் கையில் சாவியை எடுத்துக்காட்டுகிறார்.

நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

அப்துல் ராசிக் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்தார். பகலில் ஆலை பணியாளராகவும் இரவில் அதன் காவலாளியாகவும் பணியாற்றினார்.

இப்படி வேலை செய்ததால் மட்டுமே தான் பிறந்த கிராமத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள யுதேடியில் ஒரு சிறிய நிலத்தை வாங்கி வீடு ஒன்றை கட்ட அவரால் முடிந்தது.

முகமத் அங்கேயே பிறந்து 67 வருடங்களாக அங்கேயே வாழ்ந்தவர். இருப்பினும், நீங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று அவரை கேட்டால், இதர பாலத்தீனர்களைப் போலவே “அல்-பிர்வா’ என்று பதிலளிப்பார் அவர்.

“என்னுடைய பெற்றோர்கள் அல்-பிர்வாவுக்கு திரும்பும் நம்பிக்கையை எப்போதும் இழக்கவே இல்லை, ஆனால், மீண்டும் அவர்களால் அந்த மண்ணில் கால்பதிக்கவே முடியவில்லை” என்று கூறுகிறார் கயல்.

அவர்கள் இறந்தபோது கூட அவர்கள் பிறந்த மண்ணில் அவர்களை அடக்கம் செய்ய முடியவில்லை. அந்த நகரத்தில் இருந்த கல்லறைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன. 1948க்கு பிறகு அங்கு யாருமே புதைக்கப்படவில்லை. இவரின் பிரபலமான அண்டைவீட்டுக்காரர் மஹ்மூத் தர்வீஷ் கூட இதில் அடங்குவார்.

பாலத்தீனர்களின் தேசிய உணர்வோடு கலந்த ஆயிரக்கணக்கானோர்களின் கதையில் ஒன்றுதான் இந்த தர்வீஷ் அல்லது கயலின் கதை.

பாலத்தீனர்களுக்கு தங்களது வீடுகளும், பல கிராமங்களும் அழிந்திருக்க கூடும் என்பது தெரியும் என்று சொல்கிறார் பாலத்தீன – அமெரிக்க வரலாற்றாளர் ரஷீத் காலிடி. ஆனால் அந்த சாவி என்பது பாலத்தீனத்திற்கு திரும்ப வேண்டும் என்ற ஆசையின் நினைவு சின்னமாக இருக்கிறது என்று தனது கொலம்பிய பல்கலைக்கழக அறையில் இருந்தபடி விவரிக்கிறார் அவர். இங்குதான் அவர் அரபு ஆய்வுகளின் பேராசிரியராக பணிபுரிகிறார்.

  • சாவிகளைக் கையில் ஏந்திப் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

போர் தொடங்கிய போது 3 லட்சம் பாலத்தீனர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அல்-பிர்வாவை போலவே 400க்கும் மேற்பட்ட நகராட்சிகள் பாதிக்கப்பட்டன.

பேராசிரியர் காலிடியின் கூற்றுப்படி, 1947இன் இறுதி்ப் பகுதியில் போர் தொடங்கியது முதல் (பாலத்தீனத்தை இரண்டாக பிரித்து ஒன்றை அரபு நாடாகவும், மற்றொன்றை யூத தேசமாகவும் பிரித்த ஐக்கிய நாடுகள் சபையின் பாலத்தீன் பிரிவுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டபோது) மே 14, 1948ம் ஆண்டு இஸ்ரேல் தேசம் உருவெடுக்கும் வரை “3,00,000 பாலத்தீனர்கள் வரை தங்களது வீடுகளில் இருந்து சியோனிஸ ராணுவத்தால் வெளியேற்றப்பட்டனர்.”

போர் தொடங்கியதற்கு பிறகு, நுட்பமான முறையில் இஸ்ரேல் படை பாலத்தீனர்களை வெளியேற்றியதாகவும், 4,50,000 பேர் வரை தங்களது வீடுகள் மற்றும் நிலங்களை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர் என்றும் கூறுகிறார் “பாலத்தீன, நூற்றாண்டு காலனியாதிக்கம் மற்றும் எதிர்ப்பு” என்ற புத்தகத்தின் ஆசிரியர் காலிடி.

இந்த கணக்குகள் எல்லாமே தோரயமானவை, ஆனால், 80 சதவீதத்திற்கும் அதிகமான பாலத்தீனர்கள் வெளியேற்றத்தால் பாதிக்கப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் தரவுகளின் அடிப்படையில் நம்பப்படுகிறது.

இஸ்ரேலிய முதல் கணக்கெடுப்பில் பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே இஸ்ரேல் குடிமக்களாகக் கருதப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் இஸ்ரேலியர்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்டு அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிழக்கு ஜெருசலேமை சேர்ந்தவர்களின் வீடுகள் சில மீட்டர் தொலைவில் நகரின் வேறு பகுதிகளில் இருந்தால் கூட அவர்களும் இஸ்ரேலியர்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்டார்கள் என்று விளக்குகிறார் காலிடி.

எங்கெல்லாம் மக்கள் எதிர்த்து நின்றார்களோ அங்கெல்லாம், நூற்றுக்கணக்கான பாலத்தீனர்கள் கொல்லப்பட்ட டெய்ர் யாசின் போல படுகொலைகள் நடந்தன அல்லது சமீபத்தில் வெளியான இஸ்ரேலிய ஆவணப்படத்தில் காட்டப்பட்டிருந்த தகவலான போர் தொடங்கிய சில நாட்களில் 200க்கும் மேற்பட்ட ஆண்கள் கொலை செய்யப்பட்டது போன்ற நிகழ்வுகள் நடந்ததாக பதிவு செய்துள்ளனர் வரலாற்றாளர்கள்.

1948-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கீழ் இருந்த பாலத்தீன மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் யூதர்கள். அதாவது 6,00,000 மக்கள் என்று பல வரலாற்றாளர்களும் கூறுகின்றனர். பெரும்பான்மையான நிலங்கள் அரசு அல்லது அரபு முதலாளிகளிடம் இருந்த சமயத்தில் 6% – 7% நிலங்கள் தனியார் கைகளில் கூட இல்லை. யூத தேசிய நிதியம் அல்லது யூத காலனித்துவ ஏஜென்சிகளான சியோனிச அமைப்புகளிடமே இருந்ததாக கூறுகிறார் காலிடி.

  • சாவிகளைக் கையில் ஏந்திப் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மீண்டும் சொந்த வீடுகளுக்குத் திரும்பி வரும் நம்பிக்கையுடன் அகதிகளாக வெளியேறியவர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

“திட்டமிடப்பட்ட கொள்கை”

“இந்த வெளியேற்றம் ஒன்றும் போரில் நடைபெற்ற ஏதோ ஒரு பகுதி தன்னிச்சை நிகழ்வல்ல. மாறாக திட்டமிடப்பட்ட கொள்கை. மக்கள்தொகை அமைவை மாற்றாமல் உங்களால் பெரும் அரேபிய தேசத்தை யூத தேசமாக மாற்ற முடியாது. 1930ம் ஆண்டுகளில் இருந்தே யூத தலைவர்கள் வெறும் புலம்பெயர்தல் மூலமாகவே யூத பெரும்பான்மையை உருவாக்க முடியாது. அரேபியர்களை வெளியேற்றியாக வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருந்தனர்,” என்று குறிப்பிடுகிறார் பாலத்தீன ஆய்வுகள் பத்திரிகையின் இணை-இயக்குனராகவும் இருந்து வரும் காலிடி.

இருப்பினும், இஸ்ரேலை ஆண்ட முதல் ஆட்சியாளர்கள் வேறு கதையை உருவாக்கி வைத்துள்ளனர்.

“உலகில் பல மூலைகளில் இருக்கும் யூதர்கள் இன்னும் நம்பிக் கொண்டிருப்பது, பாலத்தீனர்களின் வெளியேற்றத்தில் இஸ்ரேலுக்கு எந்த பொறுப்பும் இல்லை, அவர்கள் சுயமாகவோ அல்லது அரேபியர்களின் ஆணைக்கிணங்கவோ வெளியேறியதாகவும், அவர்கள் வெளியேறாமல் தடுக்க இஸ்ரேல் எவ்வளவோ முயற்சி செய்தார்கள் என்று 1950 காலகட்டங்களிலும் இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட கதையைத்தான்,” என்று பிபிசியிடம் விவரிக்கிறார் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் யூத வரலாற்று பேராசிரியராக இருக்கும் டெரிக் பென்ஸ்லர்.

தற்போதைய காலத்தில் வரலாற்றாளர்களின் பார்வை மாறிவிட்டது.

பாலத்தீனர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் வெளியேறவில்லை. ரம்லா மற்றும் லோட் நகரங்களில் நடைபெற்றது போலவே தெளிவான வெளியேற்றம் நடைபெற்றுள்ளது என்றும், இதில் 7,50,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும்கூறுகிறார், “இஸ்ரேலின் தோற்றம் 1882 – 1948 : ஒரு வரலாற்று ஆவணப்படம்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் பென்ஸ்லர்.

“எப்படியானாலும் இந்த வெளியேற்றங்களுக்கு மாற்று என்ன என்பதை இஸ்ரேலிய ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ‘அப்போது இஸ்ரேலியர்கள் வேறு என்ன செய்திருக்க முடியும்? 7,50,000 அரேபியர்களுடன் யூத நாடு சாத்தியமா இல்லையா? என்பதுதான் தற்போதைய விவாதமாக இருந்து வருகிறது” என்கிறார் பென்ஸ்லர்.

பாலத்தீனர்களை நக்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

1967ல் புலம்பெயர்ந்த மக்கள்

இந்த நாடகம் 1948ம் ஆண்டோடு முடியவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையின்(UNRWA) தரவுகளின்படி, 1967ம் ஆண்டு போரின் ஆறு நாட்களுக்கு பிறகு 3,00,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

லுப்னா ஷோமாலியின் கணவருக்கு ஏற்பட்டது போலவே வெளிநாடுகளுக்கு படிப்புக்காகவும், உறவினர்களை பார்க்கவும் சென்றிருந்த பல பாலத்தீனர்களால் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியவில்லை. அவர்கள் அகதிகள் ஆகிப் போனார்கள் என்று விவரிக்கிறார் இந்த செயற்பாட்டாளர்.

அப்போதிலிருந்து பாலத்தீன எல்லைகளுக்குள் 6,00,000 யூதர்கள் வசிக்கக்கூடிய 140 குடியிருப்புகளை கட்ட அனுமதித்தது இஸ்ரேல். இதை சர்வதேச சமூகம் சட்ட விரோதம் என்று கருதியது.

பாலத்தீன மக்கள் மற்றும் அவர்களது தலைவர்களின் கோரிக்கையான வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் வீடு திரும்பும் உரிமை ஐக்கிய நாடுகள் சபையின் 1948 டிசம்பர் 11 தீர்மானம் 194ன் படி அங்கீகரிக்கப்பட்டது. இதன்படி, மீண்டும் வீடு திரும்பி தங்களது அண்டை நாட்டாரோடு அமைதியாக வாழ விரும்பும் அகதிகள் விரைவில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், வீடு திரும்ப விரும்பாதவர்களுக்கு அவர்களது சொத்துக்களுக்கு ஏற்ற இழப்பீட்டை தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

இஸ்ரேலிய அரசாங்கங்களோ ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் 194 குறிப்பாக பாலத்தீனர்களின் உரிமைகளை வலியுறுத்தவில்லை என்றும், மாறாக அகதிகள் திரும்ப வருவதை அனுமதிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது என்று கருதுகின்றன.

“சர்வதேச மாநாடுகளோ அல்லது ஐ.நா.-வின் முக்கிய தீர்மானங்களோ அல்லது இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பங்கள் அல்ல; இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்திலேயே, பாலத்தீன அகதிகளுக்கு நாடு திரும்ப உரிமை உண்டு” என்பதை நம்மால் பார்க்க முடியும்.

1950-இல் இஸ்ரேல் அரசால் உருவாக்கப்பட்ட ‘அரேபியர்கள்தான் இந்த போரை தொடங்கினார்கள். அதற்கான எதிர்வினையை அவர்கள் தாங்கித்தான் ஆக வேண்டும்’ என்ற கதை இன்னமும் கூட நம்பப்பட்டு வருவதாக கூறுகிறார் டெரிக் பென்ஸ்லர்.

இதுவே அரபு-இஸ்ரேலிய சண்டைக்கு தீர்வு காண்பதில் முக்கிய தடையாக இருக்கிறது.

9 மில்லியன் மக்கள்தொகையை மட்டுமே கொண்ட இஸ்ரேல் 5 மில்லியனுக்கும் அதிகமான அகதிகளை உள்ளே விட முடியாது என்று கூறுகிறது. காரணம், அதிகமான அகதிகள் வந்தால் இது ஒரு யூத நாடு என்பது மாறி விடும் என்று கருதுகிறது.

( பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *