தர்பூசணி பழம் இஸ்ரேலை எதிர்க்கும் போராட்ட ஆயுதமாக மாறியது எப்படி?

“பாலத்தீனிய கொடியை உயர்த்திப் பிடிப்பது குற்றமாகக் கருதப்பட்ட பாலத்தீனத்தில், இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கு எதிராக பாலத்தீனிய கொடியின் நிறங்களைப் பிரதிபலிக்கும் சிவப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் அடங்கிய தர்பூசணி உயர்த்தி பிடிக்கப்பட்டது.”

அமெரிக்க கவிஞர் அரசெலிஸ் கிர்மேவால் எழுதப்பட்ட ‘ஓட் டூ தி வாட்டர்மெலன்’ என்ற பாடல் வகை கவிதையின் வரிகள் இவை. இது பாலத்தீனிய பிரச்னைகளைக் குறிக்கும் தர்பூசணியின் குறியீட்டு விளக்கத்தைப் பாடும் கவிதை.

தர்பூசணி பழத்தில் உள்ள சிவப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை ஆகிய நிறங்கள் அதற்கு மட்டுமே சொந்தமானது அல்ல. பாலத்தீனிய கொடியிலும் இந்த நிறங்களை ஒருசேரப் பார்க்கலாம். எனவே, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியில் பாலத்தீனத்திற்கு ஆதரவாக உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பேரணிகள் மற்றும் எண்ணற்ற சமூக ஊடக பதிவுகளில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

இப்படியாக, பாலத்தீன பிரச்னைக்கு தர்பூசணி உருவகமாகச் சொல்லப்பட்டதற்கு ஒரு வரலாறு உள்ளது.

  • பாலத்தீன கொடிக்கு தடை
பாலத்தீனின் அடையாளமாக தர்பூசணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 1967ஆம் ஆண்டில் நடந்த அரபு – இஸ்ரேல் போருக்குப் பிறகு காஸா மற்றும் மேற்குக் கரையை இஸ்ரேல் கையகப்படுத்தியது. அதற்குப் பிறகு பாலத்தீனிய தேசிய அடையாளங்களான பாலத்தீனிய கொடி மற்றும் அதன் நிறங்களை, கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பயன்படுத்துவதற்குத் தடை விதித்தது.

பாலத்தீனிய கொடிகளைக் கையில் வைத்திருப்பதே குற்றமாக்கப்பட்டதால் அதற்கு எதிரான போராட்டத்தில் பாலத்தீனியர்கள் தர்பூசணித் துண்டுகளை பயன்படுத்தத் தொடங்கினர்.

இஸ்ரேல் மற்றும் பாலத்தீனியர்களுக்கு இடையில் 1993ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒஸ்லோ இடைக்கால ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக கரை பகுதிகளை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்ட பாலத்தீனிய அதிகார மையத்தின் கொடியாக இந்த சிவப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிற கொடி அங்கீகரிக்கப்பட்டது.

ஒஸ்லோ ஒப்பந்தம் கையெழுத்தான நேரத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளரான ஜான் கிஃப்னர், “எந்த காஸாவில் சிவப்பு, கருப்பு மற்றும் பச்சை பாலத்தீனிய நிறங்களைப் பிரதிபலிக்கும் தர்பூசணித் துண்டுகளை வைத்திருந்ததற்காக சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்களோ, அதே இடத்தில் முன்பு தடை செய்யப்பட்ட கொடியை வீசிக்கொண்டே பேரணியாகச் செல்லும் மக்களை ராணுவ வீரர்கள் அலட்சியமாகப் பார்த்து நின்றனர்,” என்று எழுதியிருந்தார்.

சில மாதங்கள் கழித்து 1993ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கைது நடவடிக்கை குறித்த தகவல்களை உறுதிபடுத்த முடியவில்லை என்று அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

இருப்பினும், இஸ்ரேலிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவரிடம் இது குறித்துக் கேட்டபோது, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றிருக்கக் கூடும் என்பதை மறுக்க முடியாது என்று கூறியதாகவும் அதில் இடம்பெற்றிருந்தது.

  • பாலத்தீனின் அடையாளமாக தர்பூசணி

பட மூலாதாரம்,INSTAGRAM/KHALED HOURANI

அப்போதிருந்தே பாலத்தீனத்திற்கு ஆதரவாக கலைஞர்கள் பலரும் தர்பூசணியையும் சேர்த்துக்கொண்டே தங்களது கலைப் படைப்புகளைப் படைத்து வருகின்றனர்.

அதில் மிகவும் பிரபலமான படைப்பு காலீத் ஹூரானியுடையது. 2007ஆம் ஆண்டு சப்ஜெக்ட்டிவ் அட்லஸ் ஆஃப் பாலத்தீன் என்ற புத்தகத்திற்காக அவர் வரைந்த ஒரு துண்டு தர்பூசணி மிக முக்கியமான பாலத்தீன படைப்பாகும்.

இந்த ஓவியம் தர்பூசணியின் கதை என்ற தலைப்பிடப்பட்டு உலகம் முழுவதும் பிரபலமாக வலம் வந்தது. அதிலும் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நேரத்தில்தான் அதிகமாகத் தொடர்புப்படுத்தி பேசப்பட்டது.

தர்பூசணியை அடையாளமாகப் பயன்படுத்துவதில் இந்த ஆண்டு மேலும் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் – ஜிவிர் பொது இடங்களில் இருக்கும் பாலத்தீனிய கொடிகளை அகற்ற உத்தரவிட்டது மற்றும் அவற்றை பயன்படுத்துவது அல்லது பறக்கவிடுவது ‘பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் செயல்” என்று அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் எதிர்ப்பு அமைப்புகள் நடத்தும் பேரணிகளில் பெரும்பான்மையான தர்பூசணியின் படங்கள் இடம்பெற்றிருந்தது.

இஸ்ரேல் சட்டப்படி பாலத்தீனிய கொடிகளுக்கு தடையேதுமில்லை. ஆனால், காவல்துறையினரோ அல்லது ராணுவத்தினரோ சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அதைக் கருதும் சூழலில் அகற்றிக்கொள்ள உரிமை உள்ளது.

ஜெருசலேமில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தில்கூட இஸ்ரேலிய போராட்டக்காரர்கள் பாலத்தீனிய கொடியின் நிறங்கள், தர்பூசணி வரையப்பட்ட அல்லது சுதந்திரம் என்று எழுதப்பட்ட அட்டைகளைக் கையில் ஏந்திக் கொண்டிருந்தனர்.

ஆகஸ்ட் மாதத்தில் மற்றுமொரு குழு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீதித்துறை சீர்திருத்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தர்பூசணியின் விதவிதமான ஓவியங்களை தாங்கிய டி-ஷர்ட்டுகள் அணிந்துகொண்டு டெல் அவிவ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

  • பாலத்தீனின் அடையாளமாக தர்பூசணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சமீபகாலமாகவே காஸாவில் நடக்கும் போருக்கு எதிராகப் பகிரப்படும் பெரும்பான்மையான பதிவுகளில் தர்பூசணி இடம்பெற்றுள்ளது.

உதாரணத்திற்கு, பிரிட்டிஷ் இஸ்லாமிய நகைச்சுவைக் கலைஞர் ஷுமிருன் நெஸ்ஸா தனது டிக்டாக் பக்கத்தில் வாட்டர்மெலன் ஃபில்டர்களை பயன்படுத்தி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் தனது முழு வருமானத்தை காஸாவில் இயங்கும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப் போவதாகக் குறிப்பிட்டு தனது ரசிகர்களையும் வாட்டர்மெலன் ஃபில்டர்களை பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கி பகிருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சில சமூக ஊடக பயனர்கள் எங்கு பாலத்தீன கொடியை பதிவிட்டால் தங்களது சமூக ஊடக கணக்கு அல்லது வீடியோக்கள் நீக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் தர்பூசணிகளை பயன்படுத்துகின்றனர்.

கடந்த காலங்களில், பாலத்தீனிய ஆதரவு பயனர்கள் இதேபோல ஒரு குற்றச்சாட்டைக்கூட முன்வைத்தனர். இன்ஸ்டாகிராம் தளம் தங்களது பதிவுகளை வேறு யாருக்கும் தெரியாமல் செய்யும் ஷேடோ பேனிங் செய்கிறது என்று விமர்சனம் செய்தனர்.

ஆனால், அது போன்று தற்போது நடக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகிறார் பிபிசி டெக்னாலஜி செய்தியாளர் ஜோ டெடி.

“பாலத்தீன ஆதரவு பதிவுகளைப் பகிரும் கணக்குகளை ஃபீடில் வராமல் தடுப்பது போல எந்தச் செயலும் நடப்பதாகத் தெரியவில்லை,” என்று அவர் கூறுகிறார்.

“மக்கள் தங்களது சமூக ஊடக பதிவுகளில் தர்பூசணியின் படங்களைப் பயன்படுத்துகின்றனர். அதே நேரம் பாலத்தீனிய கொடியைப் பகிர்வது மற்றும் போர் குறித்து எழுதுவது போன்றவற்றையும்கூட வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் செய்து வருவதாக” கூறுகிறார் அவர்.

பாலத்தீனிய பகுதிகளில் பல தசாப்தங்களாகவே, குறிப்பாக முதல் மற்றும் இரண்டாவது பாலத்தீனிய எழுச்சி முதலே, தர்பூசணி அரசியல் அடையாளமாகக் கருதப்பட்டு வருகிறது.

இன்றைய நிலையில் தர்பூசணி என்பது அந்தப் பகுதிகளில் பிரபலமான உணவு மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையாகத் தங்களது போராட்டத்தை ஆதரிக்கும் ஒவ்வொரு பாலத்தீனியர்களின் சக்தி வாய்ந்த அடையாளமாகவும் மாறியிருக்கிறது.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *