தபால் சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்; அதிவிசேட வர்த்தமானி வெளியானது

தபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (நவம்பர் 08) மாலை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நேற்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளது.

நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்யும் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என அதன் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

தபால் ஊழியர்களின் போராட்டம் காரணமாக இன்று நாடு முழுவதும் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தபால் ஊழியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள, தபால் திணைக்களம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் நேற்று இரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையிலேயே தபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிடவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *