கருத்தரிக்காமலேயே தாய்ப்பால் கொடுக்க முடியுமா?

தன்பாலின தம்பதியான நூலகர் அலின் தவெல்லாவும் பத்திரிகையாளர் கமிலா சோசாவும் 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என சில காலமாக திட்டமிட்டு வந்தனர்.

2022 ஆம் ஆண்டில், மருத்துவ சிகிச்சையின் மூலம் அலின் தவெல்லா கர்ப்பம் அடைந்தார். அப்போது, குழந்தை வளர்ப்புப் பயணத்தில் தானும் பங்கெடுத்துக்கொள்ள விரும்பிய கமிலா, தான் கர்ப்பம் அடையாமலேயே மருத்துவ சிகிச்சையின் மூலம் தாய்ப்பால் உற்பத்தி செய்வது குறித்து யோசிக்கத் தொடங்கினார்.

“ஏற்கெனவே என்னுடைய தோழி ஒருவர் இதனை முயற்சித்திருந்ததால், அது சாத்தியம்தான் என எனக்குத் தெரியும். ஆனால், அவருடைய விஷயத்தில் இந்த சிகிச்சை வேலை செய்யவில்லை, ஆனால் ‘ஒரு வாய்ப்பு இருந்தால், ஏன் முயற்சி செய்யக்கூடாது?’ என நான் நினைத்தேன். குழந்தை பெற்ற பின்னர் தாயின் பணிகளை பகிர்ந்துகொள்ள வேண்டும் என நான் நினைத்தேன். ஏனெனில், அந்த பணிகளை பகிர்ந்துகொள்ளாவிட்டால் மிகவும் கடினமாக இருக்கும்” என்கிறார் கமிலா.

இதுதொடர்பான நிபுணர்களுடன் கமிலா கலந்தாலோசித்தார். கர்ப்பமாக இருக்கும் கமிலாவின் இணையைவிட அவருக்கு சிகிச்சை மூலம் குறைவான தாய்ப்பாலே சுரக்க வைக்க முடியும் என்றும் எனினும் அந்த பால், தாய்ப்பால் போன்றே சிறப்பானதாக இருக்கும் என்றும் அந்நிபுணர்கள் கமிலாவுக்கு தெரிவித்தனர்.

“பல எதிர்பார்ப்புகள் இல்லாமல் நான் தொடங்கினேன். ஆனால், தாய்ப்பால் சுரப்புக்கான தூண்டல் எனக்கு நன்றாக வேலை செய்தது. சிகிச்சை நடைமுறைகளை தொடங்கி ஒன்பது நாட்களுக்குப் பிறகு பாலின் முதல் துளிகள் தோன்றின. இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் அனைவருக்கும் இது நடக்காது என்று எனக்குத் தெரியும்,” என்று கமிலா விவரிக்கிறார்.

  • தாய்ப்பால்

தாய்ப்பால் எவ்வாறு தூண்டப்படுகிறது?

குழந்தை பிறப்பதற்கு முன்பே தாய்ப்பால் சுரப்பதைத் தடுப்பதற்காக கர்ப்ப காலத்தில், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கும்.

குழந்தையை பிரசவிக்கும் தருணத்தில், இந்த ஹார்மோன்களின் முக்கிய ஆதாரமாக விளங்கும் நஞ்சுக்கொடி வெளியேற்றப்பட்டு, தாய்ப்பால் உற்பத்தியை தூண்டுவதற்கு காரணமான புரொலாக்டின் ஹார்மோன் அதன் செயல்பாட்டை எவ்வித கட்டுப்பாடும் இன்றி செய்கிறது.

தன்பாலின உறவில் குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவர்கள், குழந்தையைத் தத்தெடுப்பவர்களுக்கு இந்த உயிரியல் செயல்முறையைப் பின்பற்றி மருத்துவ சிகிச்சையின் மூலம் தாய்ப்பால் தூண்டப்படுகிறது.

குழந்தை பிறப்பதற்கு பல மாதங்கள் இடைவெளி இருந்தால் கர்ப்பத்தில் நடக்கும் உயிரியல் விளைவுகளை பிரதிபலிக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரான் சுரப்புக்கான ஹார்மோன் சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைக்கலாம். இது தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும் கலக்டகாக் (galactagogue) எனும் மருந்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது.

பிளாசில் போன்ற குமட்டல் எதிர்ப்பு மருந்துகளில் டோம்பெரிடோன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

உடல்நலக் காரணங்களுக்காக சிலர் ஹார்மோன் மருந்துகளைப் பயன்படுத்த முடியாது.

ஆழமான நரம்பு ரத்த உறைவு, இதய நோய், கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மார்பக புற்றுநோய் அல்லது பிற ஹார்மோன் புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களாலும் இந்த ஹார்மோன் மருந்துகளை பயன்படுத்த முடியாது.

  • அதிகளவு தாய்ப்பால் சுரப்பு இருக்காது”

இந்த செயல்முறையின் மிக முக்கியமான பகுதி குழந்தை தாய்ப்பாலை உறிஞ்சுதல் ஆகும். ஹார்மோன்கள் இல்லாவிட்டாலும் கூட, இது நல்ல முறையில் வேலை செய்வதாக குழந்தை மருத்துவரும் தாய்ப்பால் நிபுணருமான ஹானோரினா டீ அல்மெய்டா கூறுகிறார்.

“குழந்தை மார்பகத்தை உறிஞ்சுவதை உருவகப்படுத்த பிரெஸ்ட் ஃபீடிங் பம்ப் மிகவும் பயனுள்ள முறையாகும்” என்று அவர் விளக்குகிறார்.

குழந்தை தாய்ப்பாலை உறிஞ்சினாலோ அல்லது மின்சார பிரெஸ்ட் ஃபீடிங் பம்ப் மூலம் உறிஞ்சினாலோ எதுவாக இருந்தாலும் தாய்ப்பாலை உற்பத்தி செய்யும் புரொலாக்டின் ஹார்மோனும் அவசியம். இதில், புரொலாக்டின் ஹார்மோன் தான் மார்பக காம்புகளின் வழியாக தாய்ப்பால் வெளியே தள்ளப்படுவதற்கு அவசியம்.

இந்த இரண்டு ஹார்மோன்களும் ஒரு சிக்கலான செயல்முறையின் ஒரு பகுதியாகும். இது மூளையின் அடிப்பகுதியில், ஹைபோதாலமஸுக்குக் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பியான பிட்யூட்டரி சுரப்பியால் தூண்டப்படுகிறது. இதன்மூலம், தாய்ப்பால் உற்பத்திக்கான தகவல் மூளைக்குப் பெறப்படுகிறது.

“கர்ப்ப காலத்தில் மார்பகங்கள் முதிர்ச்சி அடையும் என்பதால், குழந்தையை பெற்றெடுப்பவரை விட இந்த செயல்முறையால் அதிகளவு தாய்ப்பால் சுரப்பு இருக்காது” என்று மகப்பேறியல் செவிலியர் மற்றும் பாலூட்டுதல் ஆலோசகர் ரெனாட்டா லாக் கூறுகிறார்.

  • தாய்ப்பால்

“எந்த ஆபத்தும் இல்லை”

இப்போது கமிலா – அலினினுக்கு நிக்கோலா எனும் நான்கு மாத குழந்தை உள்ளது. பிரசவத்தின்போது அலினுக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டதால், அவருக்கு தாய்ப்பால் சுரப்பு குறைந்துபோனது. இதனால், மருத்துவ நடைமுறைகளின் மூலம் கமிலாவுக்கு சுரக்கும் தாய்ப்பாலே போதுமானதாகவும் அவசியமானதாகவும் இருக்கிறது.

ஆனால் பெரும்பாலானவர்களுக்கு “டிரான்ஸ்லேக்டேஷன்” என்ற முறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம் என லாக் விளக்குகிறார். இந்த செயல்முறையில் குழந்தையை பெற்றெடுக்காதவரின் மார்பில் தாய்ப்பால் அடங்கிய குழாய் பொருத்தப்படுகிறது. அதனை குழந்தை உறிஞ்சும்போது அதன்மூலம் தாய்ப்பால் சுரப்பு தூண்டப்பட்டு அதிக பால் உற்பத்தி செய்வதற்கான செய்தியை மூளை பெறுகிறது” என அவர் கூறுகிறார்.

இந்த நடைமுறை மகப்பேறியல் செவிலியரின் மேற்பார்வையுடன் மேற்கொள்ளப்படும்போது, ​​எந்த ஆபத்தும் இல்லை என்று விளக்குகிறார்.

“கர்ப்பிணி அல்லாதவர்களும் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதையும், குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்காமல் இருப்பதையும் உறுதிப்படுத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என அவர் கூறுகிறார்.

திருநங்கைகள் மற்றும் எந்த பாலினத்தையும் சாராதாவர்களும் இம்முறையின் மூலம் தாய்ப்பால் கொடுக்கலாம்.

  • தாய்ப்பால்

திருநங்கைகள் பாலூட்டும் சுரப்பியை முழுமையாக அகற்றாத வரை, பாலூட்டும் திறனைக் கொண்டுள்ளனர் என்று மருத்துவர் ஹொனோரியா டி அல்மேடா விளக்குகிறார்.

“ஆண் மார்பகத்தை உருவாக்க பாலூட்டி சுரப்பியின் ஒரு பகுதி பாதுகாக்கப்படுகிறது. மீதமுள்ள மார்பக திசுக்களின் அளவைப் பொறுத்து, திருநம்பிகள் அதிக அல்லது குறைந்த அளவு பாலை இதன்மூலம் உற்பத்தி செய்யலாம். கூடுதலாக, ஆண் ஹார்மோன்களின் பயன்பாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஏனெனில், டெஸ்டோஸ்டீரான் கர்ப்பம் தரிக்கும் திறனை பாதிக்கும்” என்கிறார் அவர்.

திருநம்பிகளில் தாய்ப்பால் தூண்டப்படுவதைக் கருத்தில் கொள்ளும்போது, ​​மார்பக திசுக்களின் இருப்பு போன்ற உடல்ரீதியான பிரச்னைகளை மட்டுமல்லாமல், ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விருப்பங்களையும் மதிப்பீடு செய்வது அவசியம் என்று நிபுணர் சுட்டிக்காட்டுகிறார்.

“இயற்கையான தாய்ப்பால் மதிப்புமிக்கது, மிகவும் முக்கியமானது என்றாலும், புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அனைத்து திருநம்பிகளும் தாய்ப்பால் கொடுக்க விரும்பவில்லை. ஆண் ஹார்மோன்கள் குறைவது, டிஸ்ஃபோரியாவின் ஆபத்து (மாற்றுப்பாலினத்தவர்கள் அவர்களின் பாலின அடையாளத்திற்கும் பிறக்கும்போது இருந்த பாலினத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் காரணமாக அனுபவிக்கும் துன்பம்) உட்பட பல காரணிகளால் இந்த முடிவு பாதிக்கப்படலாம்” என விளக்குகிறார்.

“திருநங்கைகளுக்கும் சாத்தியம்”

”திருநங்கைகளுக்கு, அதாவது பிறக்கும்போதே பாலினம் ஆணாக இருந்தாலும், பாலின அடையாளம் பெண்ணாக இருந்தால், தாய்ப்பால் கொடுப்பது சற்று சவாலான செயலாக இருக்கலாம். ஆனால் அதுவும் சாத்தியமானதே”.

“ஹார்மோன் சிகிச்சையில் திருநங்கைகள் அதிக நேரம் செலவிடுவார்கள். இதனால் அவர்களின் மார்பகங்கள் மிகவும் வளர்ச்சியடையும். இது ஒரு படிப்படியான செயல்முறையாகும். ஒரு சில மாதங்களிலேயே அவர்களின் மார்பகங்கள் முழுமையாக மாறிவிடாது. ஆண்டுகள் சென்றால், திருநங்கைகளுக்கு முழுமையாக செயல்படும் மார்பகங்களை உருவாக்க முடிகிறது” என்று மருத்துவர் விளக்குகிறார்.

பாலின அடையாளம் அற்றவராக தன்னை கருதும் ஜெனிஃபர்*, அவருடைய துணை கர்ப்பமாக இருப்பதைக் கண்டுபிடித்த அதே மாதத்தில் ஒரு பெண்ணாக மாறுவதற்கான ஹார்மோன் செயல்முறையைத் தொடங்கினார்.

“நான் தாய்ப்பால் உற்பத்தி செய்வதற்கான சிகிச்சையைத் தொடங்கியபோது, ​​​​அது வேலை செய்யுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் எனது பாலூட்டி சுரப்பிகள் அப்போதுதான் வளரத் தொடங்கியிருந்தன. மேலும் எனது துணை ஏற்கனவே ஆறு மாத கர்ப்பமாக இருந்ததால், தாய்ப்பால் சுரப்புக்கு சிறிது காலமே இருந்தது,” என்கிறார்.

இத்தகைய சமயங்களில், லாக்டோகோக் மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர அவர்கள் எடுத்துக்கொள்ளும் பெண் ஹார்மோன்களின் அளவையும் தற்காலிகமாக அதிகரிக்க வேண்டியிருக்கும்.

“இதனால் பிறப்பிலேயே பெண்களாக இருப்பவர்களுக்கு கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் அதிகரிப்பை போன்று இந்த நடைமுறையிலும் அதிகரிக்கும்” என்று அல்மேடா கூறுகிறார்.

ஜெனிஃபர் தனது துணையை விட குறைவான தாய்ப்பாலை உற்பத்தி செய்தாலும் அந்த செயல்பாட்டில் வெற்றி பெற்றார்.

“தாய்ப்பால் கொடுப்பது குழந்தையைப் பராமரிக்கும் பணிகளைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரே வழி அல்ல. ஆனால், எங்கள் விஷயத்தில் அது நன்றாக செயலாற்றியது. எனது துணை ஏற்கனவே 10 ஆண்டுகளாக தாய்ப்பால் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் அவருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்தனர். மேலும் ஒரு குழந்தையைப் பெறுவதைக் கூட கருத்தில் கொள்ளாத நான், குழந்தைக்கு பாலூட்டுவதால் ஏற்படும் நம்ப முடியாத உணர்வை இதன்மூலம் அனுபவிக்க முடிந்தது.”

தாய்ப்பால்

தரமான தாய்ப்பாலா?

கர்ப்பமாக இல்லாதவர்களிடமிருந்து வரும் தாய்ப்பாலின் தரம் ஊட்டச்சத்து ரீதியாக சிறந்தது.

“மனிதனின் மார்பகத்தின் வெளிப்புறப் பகுதியான மார்பகக் காம்பு, தாய்ப்பாலூட்டும் செயலின்போது உணர்ச்சிகரமான முறையில் செயல்படுகிறது. இது குழந்தையின் உமிழ்நீரின் பண்புகளை மதிப்பிடுகிறது. மேலும், குழந்தை என்ன செய்கிறது என்பதை தாய்ப்பால் உற்பத்தி செய்யும் நபரின் உடலுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது” என்கிறார் ரெனாட்டா லாக்.

’ஹியூமன் பிரெஸ்ட்ஃபீடிங்’ எனும் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், கர்ப்பிணி அல்லாத திருநங்கைகள் மற்றும் பாலின அடையாளம் அற்றவர்கள் உற்பத்தி செய்யும் தாய்ப்பால் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்றதாகவும் உள்ளது என தெரியவந்துள்ளது.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *