போர்க்குற்றம் இழைக்கும் இஸ்ரேல்; ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்ததையும், அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும் கருத்தில் கொண்டு, இவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என கருதுகிறோம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் இன்று 27 ஆவது நாளாக நீடித்துவருகிறது. கடந்த காலங்களில் இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட 4 போர்களை விடவும் இந்த போர் அதிக உயிரிழப்புகளையும், கடுமையான மனிதாபிமான நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், இதனை திட்டவட்டமாக நிராகரித்த இஸ்ரேல், ஹமாசை முழுவதுமாக ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என சபதம் செய்து தாக்குதல் நடத்திவருகின்றது.

இந்நிலையில் காஸாவில் அகதி முகாம்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை முஸ்லிம் நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. ஹமாஸ் தளபதி ஒருவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலை ஐ.நாவும் கண்டித்துள்ளது.

மத்திய கிழக்கில் எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையிலான ராஃபா எல்லைப் பகுதி ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பிறகு முதல் முறையாக நேற்று புதன்கிழமை திறக்கப்பட்டது.

அதன் வழியாக 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் இஸ்ரேல் தாக்குதலால் காயமடைந்த பலஸ்தீனர்களும் காஸாவைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக காஸா எல்லை, எல்லைக் கடப்பு ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்ததாக அல் ஜசீரா ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *