லொட்டரியில் பரிசு விழுந்ததாக கனவு கண்ட பெண்: கண் விழித்தபோது காத்திருந்த இன்ப அதிர்ச்சி
லொட்டரியில் பரிசு விழுந்ததாக கனவு கண்ட ஒரு பெண், தூக்கத்திலிருந்து கண் விழித்தபோது, தங்களுக்கு ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்திருப்பதாக அவரது கணவர் கூற, வியப்பில் ஆழ்ந்துள்ளார்.
சார்லஸ் ((Charles Wolthuis, 78) ஜீன் (Jean) தம்பதியர் அமெரிக்காவின் மிச்சிகனில் வாழ்ந்துவருகிறார்கள். சார்லஸ் லொட்டரிச்சீட்டு வாங்கும் வழக்கம் உடையவர்.
சென்ற மாதம் தான் வாங்கியுள்ள லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதை அறிந்த சார்லஸ், தன் மகளை அழைத்து, தனக்கு பரிசு விழுந்துள்ளதை உறுதி செய்யுமாறும், தனக்கு எவ்வளவு பரிசு விழுந்துள்ளது என்பதை கண்டுபிடித்துக் கூறுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறிது நேரத்தில் சார்லசை திரும்ப அழைத்த அவரது மகள், அப்பா, உங்களுக்கு ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளது என்று கூற, தூங்கிக்கொண்டிருந்த தன் மனைவியை எழுப்பிய அவர், மனைவியிடம் தங்களுக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகக் கூறியுள்ளார் சார்லஸ்.
ஆனால், கணவர் தன்னிடம் வம்பு செய்வதாக நினைத்த ஜீன், திரும்பிப் படுத்து மீண்டும் படுத்துத் தூங்கிவிட்டாராம்.
பின்னர் தூக்கத்திலிருந்து விழித்த ஜீன், தன் கணவரிடம் தங்களுக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதாக கனவு கண்டதாகக் கூறியுள்ளார். உடனே சார்லஸ், அது கனவல்ல, உண்மைதான், நமக்கு லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளது என்று கூறியுள்ளார்.
Iதான் உண்மையில் கனவு கண்டேனா, அல்லது, கணவர் பரிசு விழுந்ததாகக் கூறியதை கனவு என எண்ணிவிட்டேனா என்பது புரியாமல் திகைத்திருக்கிறார் ஜீன்.
எப்படியும், தூக்கத்திலிருந்து விழித்த தான் ஒரேநாளில் கோடீஸ்வரியாகிவிட்டதை அறிந்து ஒரே குஷியில் இருக்கிறார் ஜீன்.