‘தினேஸ் ஷாப்டரின் கொலை’ சந்தேகநபர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு உத்தரவு

தினேஸ் ஷாப்டரின் மரணம் ஒரு குற்றச்செயல் எனக் கருதி இந்த வழக்கின் சந்தேகநபர்களை கைதுசெய்து உடனடியாக நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு சிஐடி பணிப்பாளருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கழுத்துப் பகுதி மற்றும் முகத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே தினேஸ் ஷாப்டரின் மரணம் இடம்பெற்றுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரிகளின் அறிக்கை மற்றும் ஐந்து பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள தினேஸ் ஷாப்டரின் சடலத்தை அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முந்தைய நீதிமன்ற உத்தரவுகளின்படி, ஜவத்தை மயானத்தில் புதைப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

ஜனசக்தி பிஎல்சி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் 2022 டிசம்பர் 15 அன்று பொரளை பொது மயானத்தில் தனது காரில் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் மறுநாள் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *