”நான் தவறு செய்து விட்டேன்” – மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் பிரதமர்

கடந்த ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக பாதுகாப்புப் படைகளைக் குற்றம் சாட்டியமைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மன்னிப்பு கோரியுள்ளார்.

“நான் தவறு செய்துவிட்டேன். நான் கூறிய விடயங்களைச் சொல்லியிருக்கக்கூடாது, அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று பெஞ்சமின் நெதன்யாகு X தளத்தின் இடுகை ஒன்றில் கூறியுள்ளார்.

“நான் அனைத்து பாதுகாப்பு சேவைகளின் தலைவர்களுக்கும் முழு ஆதரவை வழங்குகிறேன். தலைமைத் தளபதி மற்றும் தளபதிகள் மற்றும் வீரர்களுக்கு பலத்தை வழங்குகின்றேன், அவர்கள் முன்னணியில் இருந்து எங்களுக்காக போராடுகிறார்கள்” என இஸ்ரேலிய பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஹமாஸின் “போர் நோக்கங்கள்” பற்றிய எந்த எச்சரிக்கையும் தனக்கு எந்த கட்டத்திலும் கிடைக்கவில்லை என்று X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

எனினும், அவரது கருத்துகள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியதை அடுத்து அவை நீக்கப்பட்டன.

பல பாதுகாப்புத் தலைவர்களும் பாரிய தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதற்கான எந்தப் பழியையும் ஏற்கவில்லை.

இது குறித்து இஸ்ரேல் இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கருத்து வௌியிடுகையில்,

“அந்த கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன். நாங்கள் இப்போது ஒரு போரில் இருக்கிறோம், அதில் கவனம் செலுத்துகிறோம்.

தேசிய பாதுகாப்பு பேரவை மற்றும் ஷின் பெட்டில் உள்ள நாங்கள் உண்மையை முழுமையாக ஆராய்ந்து அனைத்தையும் பொதுமக்களுக்கு வழங்குவோம். இப்போது நாங்கள் போரிடுகிறோம், போரில் கவனம் செலுத்துகிறோம்.” என்றார்.

இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகளை குற்றம் சாட்டிய பிரதமர் “சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டார்” என்று எதிர்க்கட்சித் தலைவர் Yair Lapid தெரிவித்துள்ளார்.

“ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வீரத்துடன் போராடும் போது, அவர் அவர்களை ஆதரிப்பதற்கு பதிலாக அவர்களை குற்றம் சாட்ட முயற்சிக்கிறார்.

பொறுப்பைத் தவிர்ப்பதற்கும், இதுபோன்ற முயற்சிகள் இஸ்ரேலின் எதிரிகளுடன் போரிடும் போது வீரர்களை பலவீனப்படுத்துகிறது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *