இஸ்ரேல் – பலஸ்தீன மோதலில் ‘இந்தியா’ இரட்டை வேடம்

இஸ்ரேல் – பலஸ்தீன மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு இரட்டை வேடம் போடுவதாக அமைகிறது, பெரும்பாலான தருணங்களில் பாலஸ்தீன மக்களிற்கு ஆதரவாக குரல்கொடுத்தும், இஸ்ரேலுடன் நட்பு பாராட்டியும் இருவேறு நிலைப்பாட்டை இந்தியா காண்பிப்பதாக பலதரப்பட்டோரால் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்குமான இரு நாட்டு உறவுகளைத் தாண்டி பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் மோடிக்கு இருக்கும் தனிப்பட்ட நட்பு ஆழமாக இருப்பதன் வெளிப்பாடாக இந்தியா இப்படி இரு வேட நிலைப்பாட்டில் இருக்கலாம் என்றும் ஒரு கருத்து தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘இஸ்ரேல் மீது நடந்த தாக்குதலைக் கண்டிக்கிறோம் என்றும் அதேசமயத்தில், பலஸ்தீன மக்கள் இறையாண்மை மற்றும் சுதந்திரத்துடன் சாத்தியமான ஒரு சுயாட்சி அரசை அமைக்க இந்தியாவின் ஆதரவு எப்போதும் உண்டு’ எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இது இந்தியாவின் இரட்டை நிலைப்பாட்டை தெளிவாக புலப்படுத்துவதாக அமைகிறது.

அதேபோல் காசா மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப்பட்ட போது “இரு தரப்பு மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பது கவலைக்குரிய விடயம் என்றும் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்றும் பிரதமர் மோடி, பக்கச்சார்பற்ற முறையிலான ஒரு கருத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி, பலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளைச் செய்யும் என உறுதியளித்து, காசாவுக்கு இந்தியா நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளது.

இஸ்ரேல், பலஸ்தீன மோதலின் ஆரம்பத்திலிருந்தே எந்தவித சமரசமுமின்றி இந்தியா தனது முழுமையான ஆதரவினை பலஸ்தீனுக்கே வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் - பலஸ்தீன மோதலில்

பின்னர் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக் காலத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த நரசிம்ம ராவ், முதன் முதலாக துணிச்சலாக முடிவெடுத்து இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தினார், அரபு நாடுகளின் அதிருப்தி பற்றிக் கவலைப்படாமல் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

அதேசமயத்தில் பலஸ்தீனர்களின் சுயாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கும் கொள்கையிலிருந்தும் அவர் நழுவவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

தனது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும், அரசியல் இலாபத்திற்குமாகவே இந்தியா இவ்வாறு இரட்டை வேடம் போடுவதாக பலதரப்பட்டோராலும் தெரிவிக்கப்படுகிறது.

எது எவ்வாறாயினும், இஸ்ரேலுடனான பலஸ்தீனத்தின் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு கட்டத்திலும் அரபு நாடுகளைத் தாண்டி முதலில் பலஸ்தீனுக்காக குரல் கொடுத்த இந்தியா தற்போது இரட்டை வேடம் இடுவது  பலதரப்பட்டோராலும் விமர்சனத்திற்குள்ளாவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *