அதிகரிக்கும் கொரோனாவால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கொரோனா தொற்று குறைந்துகொண்டே வந்ததால், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் மார்ச் தொடக்கத்தில் இருந்து மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் 1636 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது

தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, குறிப்பிட்ட தெரு, வீடு, பகுதிகளில் மட்டும் ஊரடங்கை செயல்படுத்த அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முழு ஊரடங்கு என்று யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், முகக்கவசம் அணியாமல், அலட்சியமாக இருப்பதால் தான் கொரோனா பரவுவதாகவும், முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியைக் கடைபிடிப்பதோடு, தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதிகரித்து வரும் கொரோனாவை எதிர்கொள்ள கூடுதல் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *