பிரசன்ன ரணதுங்க மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோருக்கு அமெரிக்கா செல்வதற்கான விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் துறை கண்காணிப்புக் குழுவின் தலைவர்களின் செயலமர்வில் பங்கேற்க ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் இந்த இருவரையும் பரிந்துரைத்திருந்தது.

எனினும், விசா நிராகரிக்கப்பட்டதையடுத்து குறித்த இருவரும் அமெரிக்க பயணத்தை இரத்து செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிரான வழக்கு காரணமாக அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ளதுடன், யுத்த காலத்தில் சரத் வீரசேகரவின் செயற்பாடுகள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் காரணமாக அவரது விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்திற்கான குழுத் தலைவராக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சுற்றாடல் துறை கண்காணிப்புக் குழுவின் தலைவரான அஜித் மன்னப்பெருமவுக்கு ஒரு மாதகாலம் பாராளுமன்ற சேவை தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் இந்த விஜயத்தையும் தவறவிடுவார் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து வெளியிடுகையில்,

தாம் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு பல வருடங்களாக அமெரிக்க அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எரிசக்தி அமைச்சராக பதவி வகித்தபோது 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக விசா கோரிக்கையை சமர்ப்பித்த போது, ​​தனக்கு விசா வழங்க மறுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது மனைவி மற்றும் பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்தாலும், அமெரிக்காவில் உள்ள இந்த விசா தடையின் அடிப்படையில், அவுஸ்திரேலியா தனது நாட்டிற்குள் நுழைவதற்கான விசாவை இடைநிறுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *