வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி பூரண ஹர்த்தால்

வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் மற்றும் கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார்  மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புகளும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (16) மாலை மன்னாரில்  அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு நீதி சரவணராஜா மீதான அச்சுறுத்தல் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் இந்த நாட்டில் இடம் பெற்று வருகின்ற போதும் உரிய தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை.

எனவே, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வட கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு பொதுமக்கள் வர்த்தக சங்கத்தினர், பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் உட்பட அனைத்து பொது அமைப்புக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் வசந், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் நேசன், ரெலோ கட்சி சார்பாக மாவட்ட அமைப்பாளர் ஏ.ரி.மோகன் ராஜ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதேச சபை தவிசாளர் முஜா ஹீர், புளொட் சார்பாக ஜேம்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *