உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்; கோட்டாவிடம் வழங்கப்பட்ட ரகசிய பைல்கள்

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுக்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சில ரகசிய பைல்களை வழங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

பாதுகாப்பு ஆலோசகர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்ட சில முக்கிய பைல்களை விசாரணைகளுக்காக ஒப்படைக்க முடியாதென ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கைகளை ஒருபோதும் வெளியில் வழங்க முடியாது எனவும் கூறுகிறார்.

நான் நியமித்திருந்த சில ஆணைக்குழுக்களில் தலைவர்கள் தமது விசாரணை அறிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்த போது, அதற்கு மேலதிகமாக சில ரகசிய பைல்களையும் கையளித்துள்ளனர். குறித்த ரகசிய பைல்களை குற்றப்புலனாய்வு பிரிவுக்கும், பொலிஸாருக்கும் வழங்க வேண்டாமென கூறியே வழங்கியுள்ளனர்.

அந்த பைல்களை தனிப்பட்ட ரீதியில் வைத்துக்கொள்ளுமாறும் கோட்டாபயவிடம் கூறியுள்ளனர்.

பாதுகாப்பு ஆலோசகர் பேராசியர் ரொஹான் குணரத்ன, ஒருபுறம் தம்மிடம் உள்ள பைல்கள், ரகசியமானவை, அவற்றை விசாரணைகளுக்கு கையளிக்க முடியாதென கூறுவதுடன், மறுபுறம் கோட்டாவிடம் ரகசிய கோப்புகளை வழங்கியுள்ளார்.

ஆகவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளும் பொய்யானவை என்பதுடன், அவை பக்கச்சார்பானவையாகும். எந்தவொரு விசாரணை அறிக்கையும் முழுயைானவை அல்ல.

செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்த ஆவணப்படம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க முற்படுகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தில் கொண்டுள்ள அதே நிலைப்பாட்டையே நானும் கொண்டுள்ளேன்.

இதற்கு முன்னரும் இந்த பாராளுமன்றத்தில் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. என்மீது வைராக்கியம் கொண்டவர்களைதான் அந்த தெரிவுக்குழுவுக்கு நியமித்திருந்தனர். அந்த காலப்பகுதியில் அரசாங்கத்துக்குள் இருந்த முரண்பாடுகள் காரணமாக குறித்த தெரிவுக்குழு தோல்வியடைந்த ஒரு தெரிவுக்குழுவாக இருந்தது.

பாராளுமன்றத்தில் உள்ள கல்வி புலமை கொண்டவர்கள், சிறந்த அனுபவம் கொண்டவர்களை சபாநாயகர் இந்த குழுவுக்கு நியமிக்க வேண்டும். அதற்கு மாத்திரமே நான் இணக்கம் வெளியிடுகிறேன். கட்சிகளுக்கு இந்த குழுவை நியமிக்கும் அதிகாரங்கள் வழங்களை வேண்டாம். என்மீது வைராக்கியம் கொண்டவர்களே கட்சிகளில் அதிகமாக உள்ளனர். ஆகவே, அரசின் பணத்தை வீண் செலவு செய்யாது, சிறந்ததொரு தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *