மத்திய கிழக்கில் மாற்றம் ஏற்படும்; இஸ்ரேல் பிரதமர் உறுதி

ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலின் தெற்கு பகுதி நகரங்களை சேர்ந்த மேயர்களுடன் பிரதமர் நெதன்யாகு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது,

ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் மிகவும் கடினமான காலத்தை கடந்து செல்கிறோம். இஸ்ரேல் மக்கள் அனைவரையும் அழிக்க ஹமாஸ் அமைப்பு விரும்புகிறது.

வீடுகளுக்குள் புகுந்து குழந்தைகள், முதியோரை ஈவு இரக்கமின்றி தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்களை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

மிகக் கொடூர குற்றங்களில் ஈடுபட்ட ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ராணுவ ரீதியாக பதில் அளித்து வருகிறோம். இதன்மூலம் மத்திய கிழக்கில் மாற்றம் ஏற்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இஸ்ரேல் விரையும் அமெரிக்க கப்பல்: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் போர்க்கப்பல் மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து இஸ்ரேலுக்கு விரைந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறும்போது, ‘‘அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த போர்டு கேரியர் கப்பல் இஸ்ரேலுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த போர் விமான கப்பலில் 5 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.

இந்தக் கப்பலில் உள்ள போர் விமானங்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் வாய்ந்தவை. தற்போது இந்தக் கப்பல் மத்திய தரைக்கடலில் இருந்து இஸ்ரேல் நோக்கி விரைந்துள்ளது’’ என்றனர்.

யாருக்கு சொந்தம்? – இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியாக காசா அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஹமாஸ் என்ற தீவிரவாதிகளின் படை தன்னாட்சி செய்து வருகிறது.

இதற்கு பாலஸ்தீனம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அவ்வப்போது காசா எல்லையைக் கைப்பற்ற இஸ்ரேல் பலமுறை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *