2022 இல் சிறைவைக்கப்பட்டவர்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பட்டதாரிகள்

2022 ஆம் ஆண்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதிகளிடையே 2,340 பேர் பட்டதாரிகள் என தெரியவந்துள்ளது.

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த மூன்று வருடங்களில், 2022 ஆம் ஆண்டே அதிகளவான பட்டதாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளின் 41 பேர் பெண்கள் எனவும், 2,299 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2022 ஆம் ஆண்டு மாத்திரம் கல்வித் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த 8,420 பேரும், கல்வித் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த 7,168 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தரம் 8 இல் சித்தியடைந்தஹ் 6,747 பேரும் இவ்வாறு சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மிக்க குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மாத்திரமே கல்வி அறிவு அற்றவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, 2022 ஆம் ஆண்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதிகளிடையே 836 பேர் மாத்திரமே கல்வி அறிவு அற்றவர்கள் என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் பார்க்கும்போது, கடந்த வருடம் கைது செய்யப்பட்டவர்களில் பாரிய எண்ணிக்கையிலானவர்கள் கல்வி அறிவு கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் மாத்திரம் குறித்த தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாயின், குறித்த காலப்பகுதியில் இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் இதில் தாக்கம் செலுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *