கேப்பாப்பிலவில் இருந்து கொழும்பு வரை பேரணி! – 2ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் போராட்டம்

சொந்த நிலங்களில் குடியேற்றுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் நேற்று முதல் புது வடிவம் பெற்றது. கேப்பாப்பிலவில் இருந்து வாகனப் பேரணியாக கொழும்பை நோக்கிப் பயணத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

கேப்பாப்பிலவு இராணுவ முகாம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி நடத்தப்படும் போராட்டம் 728ஆவது நாட்களாகத் தொடர்கின்றது.

கேப்பாப்பிலவு இராணுவ முகாமின் நுழைவாயிலுக்கு அருகில் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தநிலையில், போராட்டக்காரர்கள் நேற்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் போராட்டக் களத்திலிருந்து வாகனப் பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கிச் சென்றனர். ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ எனும் பெயரில் இந்தப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.

அங்கு கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசஅதிபரிடம் மனு கையளிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கில் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தப் பேரணி கொழும்பை நோக்கிப் பயணிக்கின்றது.

குறித்த பேரணி கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்து அங்கு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறும். பின்னர் மன்னாருக்குப் பேரணி செல்லும். பின்பு வவுனியா, நீர்கொழும்பு ஊடாக எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பை வந்தடையும்.

அன்றைய தினம் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் கேப்பாப்பிலவு மக்களால், மாபெரும் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *