கிரிக்கெட் போட்டியில் 15 ஓட்டங்களுக்குள் சுருண்டது மங்கோலியா!

 

ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தோனேஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மங்கோலியா அணி 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வி அடைந்தது.

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த விளையாட்டில் இடம் பெற்றுள்ள கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால், கால்பந்து போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் மகளிருக்கான டி20 கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தோனேஷியா – மங்கோலியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தோனேஷியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தேவி நி லுகெடுத் வெசிக ரத்னா 48 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் விளாசினார். சகாரினி நி புது அயு நந்தா 35, வொம்பாகி மரியா கொராசன் கொன்ஜெப் 22 ரன்கள் சேர்த்தனர். அறிமுக அணியான மங்கோலியா உதிரிகளாக 49 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தது. இதில் 38 வைடுகள், நோபால்கள் வாயிலாக 10 ரன்கள், ஒரு பைஸ் ஆகியவை அடங்கும்.

10 ஓவர்களில்.. 188 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மங்கோலியா அணி 10 ஓவர்களில் 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பட்ஜர்கல் இச்சிங்கோர்லூ 5, நாரஞ்சேரல் 3, ஜார்கல்சாய்கான் 1, நமுன்சுல் 1 ரன் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் ரன் ஏதும் சேர்க்காமல் நடையை கட்டினர். இந்தோனேஷியா அணி சார்பில் ஆண்ட்ரியானி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

பரிதாப நிலை.. மங்கோலியா அணியில் இடம்பெற்றுள்ள பாதிக்கும் மேற்பட்ட வீராங்கனைகள் முதன்முறையாக தற்போதுதான் புல் தரை ஆடுகளத்தில் விளையாடி உள்ளனர்.அதிலும் கடந்த இரு ஆண்டுகளாகத்தான் கிரிக்கெட்டையே விளையாட ஆரம்பித்துள்ளனர். அதுவும் உள்ளூரில் செயற்கை ஆடுகளத்தில் விளையாடி பழக்கப்பட்டவர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அந்த அணி வீராங்கனைகள் பயன்படுத்தி வரும் கிரிக்கெட் உபகரணங்கள் ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்பட்டவை ஆகும். வீராங்கனைகள் உபயோகிக்கும் 4 பேட்களும் பிரான்ஸ் தூதரால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதைவிட பரிதாபம் அந்த அணிக்கு பயிற்சியாளராக உள்ள தலல்லா, இலவசமாக பயிற்சி வழங்கி வருகிறார். இந்த பயிற்சியும் 5 வாரங்களுக்கு முன்னர்தான் தொடங்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *